
312 எம்.எல்.ஏக்கள் இருந்தும் அவர்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க முடியாத பாஜக!
லக்னோ: உ.பி. சட்டசபைத் தேர்தலில் பிரமாண்டமாக வெற்றி பெற்ற பாஜக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 312 எம்.எல்.ஏக்களிலிருந்து ஒருவரைக் கூட தேர்ந்தெடுக்காமல், எம்.பி. ஒருவரை முதல்வராக தேர்வு செய்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு எம்.எல்.ஏ கூடவா முதல்வர் பதவிக்கு லாயக்கற்றவர்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுவும் ஒரு சாமியாரை முதல்வராக தேர்ந்தெடுத்திருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் மறைந்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனது இந்துத்துவா கொள்கை, அயோத்தி ராமர் கோவில் கனவில் மேலும் உறுதியாக இருப்பதையே பாஜக இப்படி மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாகவும் கருதப்படுகிறது.
கோரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை லோக்சபாவுக்குத் தேர்வானவர் யோகி ஆதித்யநாத். சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வராகியிருப்பது பல முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.