• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  #MeToo #TakeAKnee #Covfefe 2017-ல் ஆதிக்கம் செலுத்திய ஹேஷ்டேக்குகள்

  By Bbc Tamil
  |

  தீவிரவாத தாக்குதல்கள் முதல் பெரிய இடத்து மரணங்கள், சமூக பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் என பல விஷயங்களுக்காக சமூக வலைத்தள பயனர்கள் இணையத்தில் நடக்கும் பெரிய விவாதங்களுக்கு ஹேஷ்டேக்கை பயன்படுத்துகின்றனர்.

  2017ல் ட்விட்டர் தனது தளத்தில் ஒரு ட்வீட்டுக்கான எழுத்துக்களின் அதிகபட்ச அளவை 140லிருந்து 280ஆக உயர்த்தியது. #MeToo #TakeAKnee முதல் #Covfefe வரை சில ஹேஷ்டேக்குகள் 2017ஆம் ஆண்டில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தின.

  #MeToo

  2017-ல் மிகவும் பிரசித்திபெற்ற ஹேஷ்டேக் இது. ஆண்களும் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் தொல்லைகளுக்கும் உள்ளான தங்களது கதைகளை பகிர்ந்துகொள்ள இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தினர்.

  2007ல் அமெரிக்க செயல்பாட்டாளரான தரனா பர்கே 'நானும்' என பொருள்படும் MeToo இயக்கத்தை முன்னெடுத்தார். அதுவே 2017ல் Me Too எனும் ஹேஷ்டேகாக மீண்டும் எழுந்தது.

  ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீனின் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து இந்த ஹேஷ்டேக் மீண்டெழுந்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் முன்வந்து ஒற்றுமையை காண்பிக்கவேண்டும் என நடிகை அலிஸா மிலானோ ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து இந்த ஹேஷ்டேக் பலரின் கவனத்தை பெற்று பிரபலமடையத் துவங்கியது.

  https://twitter.com/Alyssa_Milano/status/919659438700670976

  அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த காலகட்டத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அறுபது லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது.

  உலகம் முழுவதும் மற்ற நாடுகளில் இதே விவாதத்துக்கு வெவ்வேறு ஹேஷ்டேக்குகளும் பயன்படுத்தப்பட்டன. பிரான்சில் #balancetonporc அல்லது "rat on your dirty old man" என்ற ஹேஷ்டேக் இதே காலகட்டத்தில் ஐந்து லட்சம் முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் #abusefreeindia எனும் ஹேஷ்டேக் பாலியல் தொல்லைகள் குறித்து விவாதிக்க பயன்படுத்தப்பட்டது.

  போராட்டத்தில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்கள்
  Reuters
  போராட்டத்தில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்கள்

  #TakeAKnee

  2017 செப்டம்பரில் #TakeAKnee எனும் ஹேஷ்டேக் வெறும் மூன்று நாட்களில் மட்டும் 12 லட்சம் டிவீட்டுக்களில் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் நடக்கும் தேசிய கால்பந்து லீக் (NFL ) வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை விவரிக்கும் வகையிலான ட்வீட்களுக்கு இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.

  அமெரிக்க கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதத்துக்கு மண்டியிட்டு போராட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முன்னெடுப்பானது என் எஃப் எல் வீரர் கொலின் கேபெர்நிக் இன அநீதிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 2016-ல் போராடியதைத் தொடர்ந்து உருவானது.

  அந்த நேரத்தில் கேபெர்நிக் கூறுகையில் '' காவல்துறை மிருகத்தனமான விஷயங்கள் குறித்து பேசப்பட வேண்டியுள்ளது. வாழ்க்கைக்குத் தேவையான இன்னும் பல விஷயங்கள் பேச வேண்டிய தேவை இருக்கிறது'' என்றார்.

  எனினும், பல ரசிகர்கள் அந்த விளையாட்டு வீரர் அமெரிக்க அரசியலமைப்பை அவமதித்ததாக நம்புகின்றனர். அலபாமாவில் நடந்த ஒரு பேரணியில் இந்த மண்டியிடும் இயக்கத்தில் இணையும் என் எஃப் எல் வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் செயலை அதிபர் டிரம்ப் கண்டித்தார்.

  செப்டம்பர் மாத இறுதியில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களால் ட்விட்டரில் #TakeAKnee எனும் ஹேஷ்டேக் உருவானது.

  அதிபர் டிரம்ப்
  EPA
  அதிபர் டிரம்ப்

  #Covfefe

  மே மாத இறுதியில் ஒரு வித்தியாசமான புதிய வார்த்தை சமூக ஊடகங்களில் டிரெண்டானது. COVFEFE எனும் வார்த்தைக்கான அர்த்தம் குறித்து சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் வாதங்கள் எழுந்தது.

  இந்த வார்த்தையானது முதலில் அதிபர் டிரம்பின் ட்வீட்டில் இடம்பெற்றது. மே மாதம் 31ஆம் தேதியன்று வாஷிங்டன் நேரத்தின்படி நள்ளிரவுக்குப் பிறகு அவர் அந்த ட்வீட் செய்தார். பின்னர் அவர் படுக்கைக்குச் சென்றுவிட்டார். அவரது எண்ணத்தை முழுமையாக வெளிப்படுத்தாமல் அல்லது அந்த வார்தையைச் சரி செய்யாமல் சென்றதால் அது கவரேஜ் (coverage) எனும் ஆங்கில வார்த்தையை தவறாக தட்டச்சு செய்ததாக இருக்கும் என பலர் நம்பினர்.

  இரண்டு மணிநேரத்துக்கு பிறகு டிரம்பின் இந்த ட்வீட் கிட்டத்தட்ட 70,000 தடவை மறுட்வீட் செய்யப்பட்டிருந்தது. அந்த வார்த்தையின் அர்த்தம் குறித்து நகைப்புக்குளான விஷயங்களை சமூக ஊடக பயனாளர்கள் எழுதியிருந்தனர்.

  https://twitter.com/AnthonyBLSmith/status/869769074695438336

  ஆறு மணி நேரத்துக்கு பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக இன்னொரு ட்வீட் செய்திருந்தார் அதிபர் டிரம்ப். அதில் ஏற்கனவே COVFEFE என்ற வார்த்தையின் அர்த்தம் தேடி அலைந்துகொண்டிருக்கும் நபர்களிடையே எண்ணெய் ஊற்றுவது போல ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது யார் COVFEFE என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியும்? என ட்வீட் செய்திருந்தார்.

  https://twitter.com/realDonaldTrump/status/869858333477523458

  அந்த டிவீட் செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் 14 லட்சம் தடவை #Covfefe என்ற வார்த்தை ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டது.

  அதிபர் ரூஹானியின் ஆதரவாளர் வெற்றிச் சின்னத்தை காண்பிக்கிறார்
  Getty Images
  அதிபர் ரூஹானியின் ஆதரவாளர் வெற்றிச் சின்னத்தை காண்பிக்கிறார்

  #Third_debate

  மே மாதம் இரானில் அதிபர் தேர்தல் நடந்தது. ஆறு வேட்பாளர்களிடையே மூன்று தொலைக்காட்சி ஜனாதிபதி விவாதங்கள் நடைபெற்றது. #Third_debate எனும் ஹேஷ்டேக் மூன்றாவது விவாதம் நடந்த 12 மே அன்று அந்நாட்டில் ட்விட்டர் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும் டிரெண்டிங்கில் இருந்தது.

  அன்றைய நாள் முடிவில் 1.5 லட்சம் தடவை இந்த ஹேஷ்டேக் இரானிய பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டிருந்தது. தெஹ்ரான் மேயரின் தொழிலாளர்கள் மற்றும் பழைமைவாத வேட்பாளர் மொஹம்மத் பகீர் காலிபஃப் சம்பளம் குறித்த கேள்விகளை அந்த ஹேஷ்டேக்கோடு இணைத்து பயனாளர்கள் ட்வீட் செய்திருந்தனர்.

  மே 19 அன்று நாளில் திரு ரூஹானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட இரண்டாம் முறையாக பதவியில் அமர்ந்தார்.

  உணவு குறைபாட்டால் யெமெனில் பாதிக்கப்படும் குழந்தைகள்
  BBC
  உணவு குறைபாட்டால் யெமெனில் பாதிக்கப்படும் குழந்தைகள்

  #YemenInquiryNow

  செப்டம்பர் மாதம் ஏமன் அல்- மசிரா தொலைக்காட்சியானது தனது நேயர்களை டிவிட்டரில் #YemenInquiryNow எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்த வலியுறுத்தியது. யுத்தம் நிறைந்த நாடுகளில் மனிதாபிமான நெருக்கடி எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தும்படி அந்த தொலைக்காட்சி வலியுறுத்தியது.

  செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. 24 மணி நேரத்தில் டிவிட்டர் பயனர்களால் 1.2 லட்சம் தடவை இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. இந்நாட்டில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களின் எண்ணிக்கை குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டும் என பலர் இந்த ஹேஷ்டேகில் வலியுறுத்தினார்கள்.

  இந்த ஹேஷ்டேக்கை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை விமர்சிக்க மக்கள் பயன்படுத்தினார்கள். காயமடைந்த ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் படங்களையும் இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி மற்ற பயனாளர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

  #ILoveYouChina

  அக்டோபர் மாதம் சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்வான தேசிய மக்கள் மாநாடு நடந்தபோது அரசு சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தது மேலும் ஒரு பழைய தேசபக்தி பாடலை பாட நாட்டின் உயர்மட்ட இசை பாடகர்களை பட்டியலிட்டது.

  1979ல் வெளியான ஹார்ட்ஸ் ஆஃப் மதர்லேண்ட் (Hearts for the Motherland) திரைப்படத்தில் இருந்து ஐ லவ் யூ சீனா எனும் தீம் இசை வெளியானது. அந்தப் படம் சீன பெற்றோர்களுக்கு அயல்நாட்டில் பிறந்த மகளாக இருக்கும் ஒருவர் அங்குள்ள பாரபட்சங்களை சமாளிக்க நடத்தும் போராட்டங்களை அடித்தள கதையாக கொண்டது.

  தாய்நாடு குறித்த தங்கள் அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை எனக் கூறும் மக்களை புறக்கணிக்க வேண்டும் என அயல்நாடு வாழ் சீனர்களை அந்த படம் வலியுறுத்தியது. தேர்தலில் கம்யூனிச கட்சித் தலைவரை மக்கள் ஆதரிப்பதை காட்ட அந்த காணொளி பயன்படுத்தப்பட்டது.

  அக்டோபர் 1ஆம் தேதி சீனாவின் சமூக வலைதளமான சினா வெய்போவில் இந்த காணொளி பதிவேற்றப்பட்டதும் 3.22 லட்சம் பகிர்வுகள், 35 ஆயிரம் கமென்ட் கிடைத்தன.

  அடுத்த இரண்டு வாரங்களில் #ILoveYouChina இரண்டு மில்லியன் தடவைக்கு மேல் பயன்படுத்தப்பட்டது.

  #308Removed

  ஜோர்டானிய சமூக ஊடக பயனாளர்கள் ஒரு சர்ச்சைக்குரிய விதியை சட்டத்தில் இருந்து நீக்கியதற்காக அரசை பாராட்ட இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தினர்.

  ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாகிவிட்டு பின்பு அதே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தண்டனையில் இருந்து தப்ப முடியும் எனும் விதியை ஆகஸ்ட் மாதம் ஜோர்டான் அரசு நீக்கியது.

  சட்டப்பிரிவு 308ஐ நீக்க வேண்டும் என்றும் நாட்டில் பெண்களுக்கு மேலும் பாதுகாப்பு தேவை எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் பல மாதங்களாக பிரசாரம் செய்து வந்தனர்.

  24 மணி நேரத்தில் #308Removed எனும் ஹேஷ்டேக் 3,500 ட்வீட்களை உருவாக்கியது. இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஜோர்டான் சமூக ஊடக பயனாளர்கள் மத்தியில் பெரிய பேசு பொருளாக இருந்தது.

  #ItsABlackThing

  நவம்பர் மாதம் பிரேசிலில் உள்ள ட்விட்டர் பயனாளர்கள், நன்கு அறியப்பட்ட ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் அருகிலுள்ள ஒரு காரில் இருந்து வரும் அதீத சத்தங்களுக்கு பதிலாக அது கறுப்பர்கள் செய்யும் விஷயம் (ÉCoisaDePreto) என போர்ச்சுகீசிய மொழியில் சொல்லும் காணொளிக்கு எதிர்வினையாற்றினர்.

  இந்த காணொளி வைரலாக பரவியது. 1.45 லட்சம் சமூக வலைதள பயனாளர்கள் #ÉCoisaDePreto எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தி கறுப்பின பிரேசில் மக்கள் செய்த சாதனைகளை பதிவு செய்தார்கள்.

  நைஜீரியாவுக்கு வெளியே பிரேசில்தான் உலகிலேயே அதிக கறுப்பின மக்கள் வாழும் நாடாகும். அந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் அவர் பேசிய கருத்துகளுக்காக பணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

  பிற செய்திகள்:


  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  BBC Tamil
  English summary
  From terrorist attacks and high-profile deaths, to discussions about social issues, hashtags have given social media users the opportunity to participate in the big conversations taking place online.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X