For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

By BBC News தமிழ்
|
இளவரசர் ஃபிலிப்
BBC
இளவரசர் ஃபிலிப்

பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

"மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன், கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகு வின்சர் கோட்டைக்கு திரும்பினார்.

அவரது மறைவு தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தனது நேசத்துக்குரிய கணவர், எடின்பரோ கோமகன் இளவரசர் ஃபிலிப் இறந்து விட்டார் என்ற தகவலை மாட்சிமை பொருந்திய அரசி ஆழ்ந்த வருத்தத்துடன் வெளியிட்டுள்ளார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டில் இளவரசி எலிசபெத் அரசியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அவரை இளவரசர் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் சேவையாற்றியவர் அவர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "எண்ணற்ற இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர் இளவரசர்," என்று கூறியுள்ளார். பிரதமர் இல்லம் அமைந்த டெளனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரிட்டனில் பல தலைமுறை மக்களிடமும் காமன்வெல்த் நாடுகளிலும் உலக அளவிலும் அன்பைப் பெற்றவர் அவர்," என்றும் கூறினார்.

கோமகனின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து பக்கிங்காம் அரண்மனையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அவரது இறப்புச் செய்தி அடங்கிய நோட்டீஸ்கள், வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன.

பக்கிங்காம் அரண்மனை
Reuters
பக்கிங்காம் அரண்மனை

அரண்மனைக்கு வெளியே மக்கள் மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்த, நூற்றுக்கணக்கானோர் வின்சர் கோட்டையைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, அத்தகைய மலர் கொத்துகளை அரச குடும்பத்து மாளிகை பகுதிகளில் விட்டுச் செல்ல வேண்டாம் என பொதுமக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எடின்பரோ கோமகன்
Reuters
எடின்பரோ கோமகன்

பூங்கொத்துகளை விடுவதற்கு பதிலாக, கோமகனின் நினைவாக அறக்கட்டளை பணிகளுக்கு நன்கொடை அளிக்குமாறு அரச குடும்பம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இரங்கல் தெரிவிக்க வசதியாக, அரச குடும்பத்து இணையதள பக்கத்தில் இரங்கல் பதிவிடும் வகையில் இணைய பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

இறுதி நிகழ்ச்சி எப்போது?

இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்ச்சி, வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டாலும், அது கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என அரச குடும்பத்து காரிய சேவை பணிகளை கவனிக்கும் அமைப்பான காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளது.

அரசு முறை இறுதி நிகழ்வாக கோமகனின் இறுதி நிகழ்வு இருக்காது என்றபோதும், அவரது விருப்பத்தின்படி உரிய சடங்குகளுடன் நடத்தப்படும் என்றும் காலேஜ் ஆஃப் ஆர்ம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளவரசர் ஃபிலிப், கிரேக்க தீவான கோர்ஃபுவில் 1921ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பிறந்தார்.

அரச குடும்பம்
BBC
அரச குடும்பம்

இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள், எட்டு பேரக்குழந்தைகள், 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

அரசி மற்றும் இளவரசர் ஃபிலிப்பின் முதல் மகனும் வேல்ஸ் இளவரசருமான சார்ல்ஸ், 1948இல் பிறந்தார். இவரைத் தொடர்ந்து இளவரசி ஏன் 1950இலும், யோர்க் கோமகன் ஆண்ட்ரூ 1960இலும், இளவரசர் எட்வர்ட் 1964இலும் பிறந்தனர்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை

இளவரசர் ஃபிலிஃப் காலமானதை அனுசரிக்கும் வகையில் பிரிட்டன், கிப்ரால்டர் மற்றும் போர்க் கப்பல்களில் துப்பாக்கி குண்டுகள் முழங்கவுள்ளன.

பிரிட்டனின் உள்ளூர் நேரப்படி இன்று (10.4.2021) மதியம் 12 மணிக்கு இந்த குண்டுகள் முழங்கவுள்ளன. லண்டன், எடின்பரோ, கார்டிஃப், பெல்ஃபாஸ்ட் ஆகிய நகரங்கள் உட்பட பிரிட்டன் முழுவதும் 41 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும்.

கடலில் உள்ள அரச குடும்ப கப்பல்களான எச்எம்எஸ் டைமண்ட், எச்எம்எஸ் மாண்ட்ரோஸ் ஆகியவற்றிலிருந்தும் குண்டுகள் முழங்கப்படும். இரண்டாம் உலகப் போரின் போது இளவரசர் ஃபிலிப் கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர்.

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்வு இணையம் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மக்கள் வீடுகளிலிருந்தே அவற்றை காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

BBC Tamil
English summary
Britain Queen Elizabeth II's husband Prince Philip dies at 99.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X