சௌதி: கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண் வழக்கு இல்லாமல் விடுதலை

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

குட்டைப் பாவாடையும், கையில்லாத மேலுடையும் அணிந்து காணொளி வெளியிட்ட இளம் பெண்ணொருவரை சௌதி அரேபிய காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்துள்ளனர்.

"அநாகரிகமான" முறையில் ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பின்னர், முஸ்லிம் நாடாகிய சௌதியில் எழுந்த சூடான விவாதங்களை தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சௌதி அரேபியாவில் , உடை அணியும் முறை குறித்த கடுமையான விதிகளை மீறியதற்கு இந்த பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை முடித்துவிட்டதாக தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமை இந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தன்னுடைய தலையை மூடாமல், குட்டைப் பாவாடை அணிந்து குறிப்பிட்ட இடத்தில் நடந்து சென்றதை இந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.

சௌதி அரேபியாவிலுள்ள பெண்கள் "அபாயாஸ்" என்று அறியப்படும் இறுக்கமற்ற முழுநீள ஆடையினை அணிய வேண்டும். முஸ்லிம் என்றால் தலையில் முக்காடு அணிய வேண்டும் என்ற நியதி உள்ளது.

ஆனாலும், "அபாயாஸ்" ஆடைக்கு உள்ளே பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை.

சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண்

இந்த காணொளி இணையத்தில் பதிவிடப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியாது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

"மாடல் குலூட்" என்ற அறியப்படும் இணைய பயன்பாட்டாளரால், வார இறுதியில் "ஸ்நாப்சாட்" சமூக ஊடகத்தில் இந்த காணொளி முதலில் பதிவிடப்பட்டது.

நஜிட் மாகாணத்தில் தலைநகர் ரியாத்தின் வடக்கே 155 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாரம்பரிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை இருக்கும் உஷாய்கிர் கிராமத்தில் ஆள் அரவமற்ற தெருவில் இந்த பெண் நடந்து செல்வதை இந்த காணொளி பதிவு காட்டுகிறது.

சௌதி அரேபியாவில் மிகவும் பிற்போக்கான பகுதிகளில் ஒன்றாக நஜிட் விளங்குகிறது. இங்குதான் சுன்னி இஸ்லாமின் தன்னொழுக்கத்தில் கண்டிப்பான வாகாபிஸத்தை நிறுவியவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிறந்தார். இந்த வடிவம் தான் சௌதி அரச குடும்பம் மற்றும் மத அமைப்புகளால் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிவிட்டர் சமூக ஊடகத்தில் இந்த காணொளி மிக விரைவாக பரவி, "டிமாண்ட்_த_டிராயல்_ஆப்_மாடல் _குலூட்" என்ற ஹேஷ்டேக்கை பயனபடுத்தி பலரும் விமர்சனங்களை எழுத தொடங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

பிறர் இந்த பெண்ணின் தைரியத்தை புகழ்ந்து கருத்து தெரிவித்து, அவர் விரும்பியதை அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சௌதியில் பெண்கள் வாகனம் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமில்லாத ஆண்களிடம் பழக விடப்படுவதில்லை.

பயணம் மேற்கொள்ளவும், வேலை செய்யவும் அல்லது சுகாதார பராமரிப்புகளை பெறவும், பொதுவாக தந்தை, கணவர் அல்லது சகோதரர் போன்ற ஆண்கள் பெண்களுடன் செல்ல வேண்டும் அல்லது அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நியதி சௌதி அரேபியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
Saudi police have released the young woman who posted a video of herself wearing a miniskirt and crop-top in public.
Please Wait while comments are loading...