
ஒரு முடிவுக்கு வாங்க.. உக்ரைனில் கதிகலங்கும் மக்கள்.. 3வது போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!
மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது.. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் என முக்கிய நகரங்களில் மக்கள் சிக்கியுள்ள நிலையில், இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது... இதனால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி, ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது... எல்லைப் பகுதிகளை தாக்க தொடங்கி பிறகு படிப்படியாக முன்னேறி, துறைமுகம், ஏர்போர்ட் என முக்கிய இடங்களை தாக்கியது.
இதனால் பதில் தாக்குதலில் உக்ரைனும் ஈடுபட்டது.. இதற்கு நடுவில் உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றிட அந்தந்த நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தன...

மத்திய அரசு
"ஆப்ரேஷன் கங்கா" என்ற பெயரில் உக்ரைனில் தங்கியிருக்கும் நம் மாணவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.. அத்துடன் சுமி பகுதியில் 700-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி போர் பகுதியில் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் பத்திரமாக வெளியேற உக்ரைன் மற்றும் ரஷ்யா போர்நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்றும் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

போர் நிறுத்தம்
இதனிடையே, தாக்குதல் தீவிரமாக உள்ள உக்ரைனின் கிழக்கு நகரமான சுமி, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது.. அங்கிருக்கும் மக்கள் வெளியேற, மனிதாபிமான அடிப்படையில், இந்த அறிவிப்பை வெளியிட்டது.. தற்போது மாஸ்கோ பல உக்ரேனிய நகரங்களில் இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மறுபடியும் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன..

பாதுகாப்பு
ஏற்கனவே, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகவும், மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரஷ்ய தரப்பு ஒப்பந்தத்தை கடைபிடிக்காததால் மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் கூறின. ரஷ்யாவின் தற்காலிக போர் நிறுத்தம் அடுத்த சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்ததால், பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வழித்தடங்கள்
இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பு செயல்பாட்டுக்கே வராத நிலையில், 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிகிறது.. இதையடுத்து, மாஸ்கோ நேரப்படி இன்று (செவ்வாக்கிழமை) காலை 10 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... கீவ், செர்னிங்கோவ், சுமி, மரியுபோல் மக்கள் இதனால் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

குற்றச்சாட்டு
ஆனால் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தங்கள் ஒழுக்கக்கேடானது என்று விமர்சித்துள்ளார்.. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ரஷ்யாவுக்கோ, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனுக்கோ அனுப்பலாம் என்ற யோசனையையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னதாக, போர் நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு, தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு, ரஷ்யா குண்டு வீசிதாக்குவதை தொடர்கிறது என்று உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.