இனி பாஜகவோடு “ஒட்டும் இல்ல! உறவும் இல்ல!” அத்வானி நாட்டுக்கு உழைத்தார்..இன்றோ? நிதீஷ் குமார் சுளீர்
பாட்னா: பாஜகவுடன் இனி தன்னுடைய வாழ்நாளில் ஒருபோது கூட்டணி வைக்க மாட்டேன் என பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.
பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், "பாஜகவினர் தொடர்ந்து தவறாக பேசி வருகின்றனர். காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உடனான மகாத்பந்தன் கூட்டணியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நான் வெளியேறி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தேன்.
தற்போது மகாத்பந்தன் கூட்டணிக்கே நான் மீண்டும் வந்துவிட்டேன். எங்கள் கூட்டணியில் பாஜக மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பாஜகவினர் தொடர்ந்து என்னை அதிகம் விமர்சித்து பேசி வருகின்றனர்.

இனி கூட்டணி இல்லை
நம் நாட்டில் பாஜக மோதலை உருவாக்க விரும்புகிறது. பாஜகவின் செயல்பாடுகளால் இந்தியாவுக்கு எந்த விதமான பயனும் கிடைக்கப்போவது இல்லை. இனி என்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் அவர்களோடு கூட்டணி வைக்கவே மாட்டேன். பொதுவுடைமை கொள்கை கொண்டவர்களுடன் இணைந்து பீகாரின் முன்னேற்றத்துக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபட உள்ளேன்.

பாஜக தலைவர்கள்
வாஜ்பாய் கடந்த 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தபோது என்னை மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்து 3 துறைகளை எனக்கு கொடுத்தார். இதையெல்லாம் பாஜகவினர் மறந்துவிட்டனர். பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். ஆனால், இன்றோ ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டுடைய வளர்ச்சிக்கு உழைக்கவில்லை." என்றார்.

பாஜகவுடன் கூட்டணி
2017 ஆம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக ஆதரவோடு ஆட்சியை தொடர்ந்த நிதீஷ் குமார், 2020 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மறுபக்கம் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 79 இடங்களில் வென்றது.

கூட்டணி முறிவு
நிதீஷ் குமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட அதிக இடங்களில் வென்றதால் பீகார் அரசின் அதிகாரத்தை கையில் எடுத்து தன்னிச்சையாக பாஜக செயல்பட்டதால் மோதல் போக்கு ஏற்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிதீஷ் குமார் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications