பாருங்க.. இலவச வீடு திட்டத்திற்கு காமராஜர் பெயரை நீக்கிய புதுச்சேரி அரசு! திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு
புதுச்சேரி: இலவச வீடு வழங்கும் திட்டத்துக்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரை நீக்கிவிட்டு பிரதமர் என்ற பெயர் மாற்றியது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.
புதுச்சேரியில் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. அசோக் பாபு எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பிரதமர் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இடையே சட்டமன்றத்தில் காரசாமான விவாதம் நடைபெற்றது.
புதுச்சேரி பட்ஜெட்... இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000..மாணவர்களுக்கு இலவச லேப்டாப் -ரங்கசாமி அதிரடி

காமராஜர் பெயர்
திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், "புதுச்சேரி அரசு இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிதி வழங்குகிறது. மத்திய அரசோ வெறும் ரூ.1.50 லட்சம்தான் தருகிறது. இந்த திட்டம் காமராஜர் பெயரில் இருந்தவரை சிறப்பாக இருந்தது. பிரதமர் பெயர் வைத்த பிறகே முறையாக செயல்படவில்லை.

நமச்சிவாயம் விளக்கம்
மாநில அரசு நிதி வழங்கும் திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும். மத்திய அரசு நிதி வழங்கும் திட்டத்துக்கு வேண்டுமானாலும் பிரதமர் பெயரை வைத்துக் கொள்ளுங்கள்." என்றார். இதற்கு பதிலளித்த பாஜகவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம், இரண்டும் ஒரே திட்டம்தான் என்றும், இதை தனித்தனியாக செய்ய முடியாது என்றும் கூறினார்.

கடந்த ஆட்சி
உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "காமராஜர் பெயரில் இருந்தவரை இலவச வீடு கட்டும் திட்டம் பெரும் வெற்றியை பெற்றது. காமராஜர் பெயரை நீக்குவதுதான் நல்ல அரசியலா?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நமச்சிவாயம் கடந்த கூட்டணி அரசில்தான் இப்பெயர் மாற்றம் நடந்தது என்று தெரிவித்தார்.

கடும் வாக்குவாதம்
இதற்கு சிவா எழுந்து, "அன்று அமைச்சரவை இருந்த நீங்கள்தான் பெயரை மாற்றினீர்கள்." என்று சொல்ல, நமச்சிவாயமோ, "நீங்களும் அதே கூட்டணியில்தான் இருந்தீர்கள். இப்போது மட்டும் நாடகம் ஆடுகிறீர்கள்." என்று கூறினார். இதனை தொடர்ந்து திமுக, பாஜக எம்.எல்.ஏக்களுக்கு இடையே சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முறைகேடுகள்
அப்போது எழுந்த திமுக எம்.எல்.ஏ. நாஜிம், "காமராஜர் பெயர் நீக்கப்பட்டது மட்டுமின்றி எம்.எல்.ஏக்கள் கையெழுத்திடுவதற்கான பகுதியும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இப்படியே வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற சட்டமன்ற சபாநாயகர் இடையே மறித்து நிறுத்தினார்.