கோவிலுக்குள் தலித்துகளை அழைத்து சென்ற கலெக்டர்.. திடீரென 'சாமியாடிய' பெண்! வழக்கு பதிவு செய்த போலீஸ்
புதுக்கோட்டை: முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது தொடர்ந்து சாதி வெறியுடன் நடந்துகொண்டதாக 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் என்ற கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் இவர்களுக்கு வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் தொட்டியின் மேலே ஏறி பார்த்தபோது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.

குடிநீர் தொட்டியில் மலம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பத்தை தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு சோதனை செய்தனர். அப்போது மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இந்த நிலையில் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா ஆகியோர் இறையூர் கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பட்டியலின மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தனர். குடிநீரில் மலம் கலந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்.

கோயிலுக்குள் தலித் மக்கள்
அப்போது ஒரு பெண் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு பட்டியலின மக்களை அனுமதிக்கவில்லை என்றும் டீ கடையில் இரட்டை குவளை முறை அமலில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக பட்டியலின மக்கள் அனைவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட வைத்தார்.

சாமியாடிய பெண்
இதனை கண்ட சிங்கம்மாள் என்ற பெண், சாமியாடுவதுபோல் பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இறையூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பன், பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் சாமியாடிய சிங்கம்மாள் என்ற பெண் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இரட்டை குவளை முறை
அத்துடன் தேனீர் கடையில் இரட்டை டம்ளர் முறை அமலில் உள்ளதா என்பது பற்றியும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டீக்கடை வைத்துள்ள மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெள்ளனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவர் சிறையிலடைப்பு
இந்த நிலையில் இன்று சிங்கம்மாள், மூக்கையா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இவர்கள் இருவரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார். உடனே சிங்கம்மாள் திருச்சி சிறையிலும் மூக்கையா புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications