மீனவர்களை இந்தியக் குடிமக்களாக மத்திய அரசு கருதவில்லை.. ராஜ்ய சபாவில் பேசவும் வாய்ப்பளிக்கவில்லை..வைகோ!
ராமநாதபுரம்: மீனவர்களை இந்தியக் குடிமக்களாக கூட மத்திய பாஜக அரசு கருதவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அண்மையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

முதல்வர் கடிதம்
இதனிடையே சில நாட்களுக்கு இலங்கை கடற்படை கைது செய்த இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. அத்துடன், மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ராமநாதபுரத்தில் வைகோ
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழக மீனவா்களைப் பற்றி பேசுவதற்கு கூட மத்திய அரசு வாய்ப்பு வழங்குவதில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியைச் சோ்ந்த மதிமுக நிா்வாகி இல்ல திருமண விழாவில் வைகோ கலந்துகொண்டார்.

தமிழக மீனவர்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இலங்கைக் கடற்படையினா், தமிழக மீனவா்களைத் தாக்குவதும், கைது செய்வதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 3 முறை மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வாய்ப்பு அளிப்பது இல்லை.

வைகோ குற்றச்சாட்டு
மீனவா்களை இந்திய குடிமக்களாக மத்திய பாஜக அரசு கருதவில்லை. மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மீனவா்களை இந்திய குடிமக்களாகக் கருதாத நிலையே நீடிக்கிறது. மீனவா்களை பாதுகாப்பதில் மத்திய அரசு கடமையைச் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications