Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் கடல் பாலம்..ராமேஸ்வரத்தின் பெருமையை இனி உலகம் பேசும்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

பாம்பனையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. நாட்டிலேயே முதன்முறையாக செங்குத்து தூக்கு ரயில் பாலம் 109 ஆண்டுகள் பழமையான பாம்பன் கான்டிலீவர் பாலத்திற்குப் பதிலாக கடலில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய ரயில் பாலத்தின் சிறப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி. ராமேஸ்வரத்தில் பிறந்து இந்த நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் மக்கள் ஜனாதிபதி ஏபிஜெ. அப்துல்கலாம். ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் இப்போது மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்திற்கும் சென்று வணங்கி வருகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த ராமேஸ்வரத்திற்கு மற்றுமொரு சிறப்பு பாம்பன் ரயில் பாலம்.

India’s 1st Vertical lift Railway Sea Bridge New Pamban Bridge

தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று இந்த பாம்பன் ரயில் பாலம். ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு உண்டு. சுமார் 2.3 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர். பாக் ஜலசந்தி கடல் பகுதியையும், மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகும்.

இலங்கைக்கான வர்த்தக தொடர்புகளை எளிதாக்கும் விதத்தில் ராமநாதபுரம் மாவடத்திலுள்ள மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் விதத்தில் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயர்கள் கட்டியிருக்கின்றனர். மண்டபத்திலிருந்து, ராமேஸ்வரம் தீவிற்கும், பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் இடையிலான பாலத்திற்கு ரூ.299 லட்சம் அந்த காலத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

திட்ட செலவு மிக அதிகம் என்று கூறி, அந்த திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில், மண்டபம் - ராமேஸ்வரம் தீவு இடையிலான திட்டத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியளித்தது. அதன்பின்னர், பாம்பன் ரயில் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் 1902ம் ஆண்டு துவங்கியது.

1911ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தீவிரமானதுடன், விரைவாக இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மிகச் சிறப்பான திட்டமிடல் காரணமாக, குறுகிய காலத்தில் இந்த பொறியியல் அற்புதத்தை உருவாக்கினர். நூற்றாண்டை கடந்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஷெர்சர் என்பவர்தான் தலைமை பொறியாளராக செயல்பட்டார். அவரது நினைவாக, தூக்கு பாலத்தை ஷெர்ஷர் ஸ்பேன் என்று அழைக்கின்றனர்.

மீட்டர்கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையாக இருந்த பாம்பன் ரயில் பாலம், 2007ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது, பாலத்தின் உறுதித்தன்மையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து உள்ளது.

பாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்கு பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், 100 டன் எடை கொண்டது. இந்த தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கும் பணிகளுக்கான சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மாதத்திற்கு 10 கப்பல்கள் வரை இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே, தூக்குப் பாலம் திறக்கப்படும். அந்த நேரத்தில் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும்.

109 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததை அடுத்து புதிய ரயில் பாலம் அமைக்க கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து 2019, ஆகஸ்ட்11ம் தேதி பூமிபூஜையுன் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. கடலுக்குள் 101 தூண்கள் அமைக்கப்பட உள்ளன, ஒட்டுமொத்த பாலத்தின் நீளம் 2,078 மீட்டராகும். இந்த பாலத்தை கட்டுவிக்க இரும்பு மிதவைகளில், கிரேன்கள், பாறை உடைக்கும் எந்திரங்கள், சிமெண்ட் கலவை எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாலம் கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. பாலம் கட்டும் பணிகளும் விறுவிறுப்படைந்தன.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம், பாம்பன் ரயில்பாலத்தின் பணிகள் 84 சதவீதம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செங்குத்துதூக்குபாலத்தின் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் பாலம் தயாராகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 60 அடிக்கு ஒரு தூண் என மொத்தம் 99 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண்களுக்கு இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு உள்ளன. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் வகையிலான தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. சுமார் 27 மீட்டர் உயரம் கொண்ட 63 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள இந்தத் தூக்குப் பாலத்தின் வழியாக பெரிய மீன்பிடிப் படகுகள், கப்பல்கள் செல்ல முடியும். இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம், ஜெனரேட்டர் மற்றும் மனிதர்களாலும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டுமானப்பணி தற்போது 84 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது.

ரயில்விகாஸ் நிகம் தரப்பில் கூறுகையில் 2020, பிப்ரவரியில் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் சிறப்பு அம்சம் 72 மீட்டர் நீளமுள்ள செங்குத்து தூக்குபாலம், 17மீட்டர் உயரத்துக்கு பாலம் தூக்கப்பட்டு கப்பல் செல்ல வழிவிடும். தற்போதுள்ள பாலத்தில் ஹெர்சர் ரோலிட் லிப்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, பக்கவாட்டில் பாலம் திறக்கும். ஆனால், புதிய பாலம் செங்குத்தாக மேலே உயர்ந்து பாலத்தை திறக்கும். இந்த பாலம் கட்டப்பட்டபின், ரயில்கள் வேகமாகச் செல்லலாம், அதிகமான பாரங்கள் ஏற்றிச் செல்லலாம். இந்த புதிய பாலம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் ரயில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். இந்த ரயில் பாலமும் தலைமுறைகளை தாண்டி பல நூற்றாண்டுகளை கடந்து தமிழகத்தின் பெருமை பேசும் என்பது நிச்சயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+