புதிய அரசியல் கட்சி தொடங்கினார் கருணா

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

புதிய அரசியல் கட்சி தொடங்கிய கருணா அம்மான்
BBC
புதிய அரசியல் கட்சி தொடங்கிய கருணா அம்மான்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது

தனது கட்சியை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய கருணா அம்மான் ''தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி வடக்கு - கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாக தமது கட்சியின் செயல்பாடுகள் அமையும் '' என்கின்றார்.

''13 வது அரசியல் யாப்பு திருத்தம் மூலம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு - கிழக்கு அன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாகவே பிரிக்கப்பட்டமை தூரதிர்ஷ்டமானது. எனவே தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு இணைந்ததாகவே இருக்க வேண்டும் '' என்றும் வலியுறுத்தி கூறுகின்றார்.

''தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை இணக்கப்பாட்டுடனும் புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமது கட்சியின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் '' என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்குரார்ப்பண நிகழ்வு
BBC
அங்குரார்ப்பண நிகழ்வு

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் 10 வருடங்களுக்கு முன்னதாக அந்த அமைப்பிலிருந்து வெளியேறியிருந்தார்.

வடக்கு - கிழக்கு இணைந்த தலைமை வேண்டாம் . கிழக்குக்கு தனித் தலைமை வேண்டுமென அவ் வேளை தெரிவித்திருந்த அவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார் .

சில வருடங்களின் பின் அக் கட்சியின் தலைமை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வசமானது.

கருணா அம்மான் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டார். அக் கட்சியில் உப தலைவர் பதவியும் தேசிய பட்டியல் வழியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு கிடைத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்த அவர் தற்போது ஆட்சி மாறிய நிலையில் மகிந்த ராஜபக்ஸவுடனே தொடர்புகளை கொண்டிருந்தார் .

சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC Tamil
English summary
Former LTTE commander Karuna Amman has started a new party in Sri Lanka. He has named the party as Tamil United Freedom Party.
Please Wait while comments are loading...