For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துடைப்பமும், தாமரையும் ஒன்றாகிவிடுமா?: எஸ்.வி.சேகர் சிறப்புப் பேட்டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பமும், பாஜகவின் தாமரையும் ஒருபோதும் ஒன்றாகிவிட முடியாது. துடைப்பம் வீட்டிற்கு வெளியே இருக்கும். தாமரை வீட்டின் பூஜை அறையில் இருக்கும் என்று ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மேடை நாடகங்களின் வசூல் சக்ரவர்த்தியாகவும், திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் எஸ்.வி.சேகர்.

தொலைக்காட்சிகளிலும் தன்னுடைய தனி நகைச்சுவை பாணியிலான நாடகங்களை தயாரித்து இயக்கி வீட்டு வரவேற்பரைக்கே சென்று ரசிகர்களை மகிழ்வித்தவர்.

நடிப்போடு மட்டுமல்லாது கடந்த 20 ஆண்டுகாலமாக அரசியல்வாதியாகவும் அறிமுகமாகியுள்ளார். பாரதீயஜனதா கட்சியின் அனுதாபியாக அரசியலை தொடங்கி அதிமுக, காங்கிரஸ், மீண்டும் பாஜக என ஒரு சுற்று வந்துள்ளார்.

பாரதீயஜனதாவில் இணைந்திருந்தாலும் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை விடுவதும் எஸ்.வி.சேகரின் தனி ஸ்டைல். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்திற்கு எஸ்.வி.சேகர் அளித்த பிரத்யோக பேட்டி

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

கேள்வி: நீங்கள் சந்தித்த அரசியல் தலைவர்களிலேயே மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியவர் யார்?

எஸ்.வி. சேகர்: மகாத்மா காந்தி.... எனக்கு பிடித்தமான என்னைக் கவர்ந்த தலைவர். சர்தார் வல்லபாய் படேல். இன்றைக்கு இருக்கும் தலைவர்களில் நரேந்திரமோடியின் செயல்பாடுகள், நோக்கம் என்னை கவர்ந்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் தைரியமான பெண்மணி. திமுக தலைவர் கருணாநிதி நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார். வைராக்கியமான அரசியல்வாதி. மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியை சில விசயங்களில் பிடிக்கும். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் செயல்பாடுகளும் எனக்கு பிடிக்கும்.

அரசியல் பயணம்...

அரசியல் பயணம்...

கேள்வி: உங்கள் அரசியல் பயணமானது .பாரதீய ஜனதா ஆதரவு, அதிமுக எம்.எல்.ஏ, திமுகவுடன் நட்பு, 3 மாதம் காங்கிரஸ் உறுப்பினர், மீண்டும் பாஜக.வில் என நிலையாக இல்லாமல் சுற்றோ சுற்றென சுற்றி வருகிறதே?

எஸ்.வி.சேகர்: 1990 தேர்தலில் நான் முதலில் சுயேட்சையாகத்தான் போட்டியிட்டேன். 1991 முதல் 2004 வரை நான் பாஜக அனுதாபி. பாஜக - அதிமுக கூட்டணி அமைத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தேன். பாஜக - திமுக கூட்டணி அமைத்த போதும் பிரச்சாரம் செய்தேன். பின்னர் அதிமுகவில் உறுப்பினராக இணைந்தேன்.

நானாக சீட் கேட்கவில்லை…

நானாக சீட் கேட்கவில்லை…

மயிலாப்பூர் தொகுதியில் நான் சீட் கேட்டு பணம் கட்டவில்லை. ஆனாலும் என்னை வேட்பாளராக்கி ஜெயிக்க வைத்தார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல் பணம் சம்பாதிக்கும் இடமில்லை. தலைவருடன் ஒத்துப் போகவேண்டும். அதிமுகவில் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்களுடன் ஒத்துப் போகவில்லை 2009ல் திமுகவில் இணையப் போவதாக வதந்தியை பரப்பிவிட்டு நீக்க வைத்தார்கள். பின்னர் காங்கிரசில் இணைந்தேன். அங்கிருந்து தங்கபாலு அவர்களால் நீக்கப்பட்டேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்தேன்.

காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும்..

காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும்..

கேள்வி: ராகுல் காந்தியுடன் இ மெயில் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்து காங்கிரஸில் இணைந்தீர்கள்..3 மாதத்தில் நீக்கியும் விட்டனர்.. காங்கிரஸ் கட்சி அனுபவம் எப்படி? ராகுலைப் பற்றிய கருத்து என்ன?

எஸ்.வி. சேகர்: ராகுல்காந்தியை 2013ல் டெல்லியில் சந்தித்து பேசும் போதே கூறினேன். எந்தக்கட்சியாக இருந்தாலும் நான் கட்சிக்கு பயன்படவேண்டும். நீங்கள் தலைவராக இருந்தால் உங்களின் கீழ் மட்டுமே என்னால் பணியாற்ற முடியும் என்றும் கூறினேன். ஆனால் மூன்று மாதத்திற்கு மேல் என்னால் காங்கிரஸ் கட்சியில் இருக்க முடியவில்லை. காரணம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு கட்சியில் சேரும் போது எங்கே அவர்கள் போட்டியிடக்கூடிய இடத்தை நாங்கள் பறித்துக்கொள்வேனோ என்று நினைக்கின்றனர் அதனாலேயே என்னை ஒதுக்கத் தொடங்கிவிடுகின்றனர். மூன்றே மாதத்தில் தங்கபாலு என்னை நீக்கினார். கடந்த அக்டோபர் மாதம் நான் காங்கிரசில் இணைந்தேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டதாக எனக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர். (சத்தமாக சிரிக்கிறார்)

அரசியலும், நட்பும் வேறு வேறு

அரசியலும், நட்பும் வேறு வேறு

கேள்வி: திமுக தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்தீர்கள்... (கேள்வியை முடிக்கும் முன்பே சட்டென பதில் வருகிறது)

எஸ்.வி.சேகர்: திமுக தலைவர் கருணாநிதியை 1975ம் ஆண்டிலிருந்து தெரியும். ஸ்டாலின் அவர்களுடன் 1980ம் ஆண்டிலிருந்து நட்பு உண்டு. அரசியல் வேறு நட்பு வேறு. பார்க்கும் இடங்களில் வணக்கம் சொல்லி நட்பாக பேசினால் உடனே திமுகவில் இணைந்து விடுவார்களா? ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கூடத்தான் போகிறேன். அது முதல்வர் ஜெயலலிதா தொகுதி என்பதால் நான் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து விடுவேன் என்று சொல்ல முடியுமா?

ஈழத்தமிழர் பிரச்சினை

ஈழத்தமிழர் பிரச்சினை

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை பற்றிய உங்கள் நிலைப்பாடு

எஸ்.வி.சேகர்: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை சம்பவத்திற்கு ராஜபக்சே தண்டிக்கப் படவேண்டும். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இனியும் போரில் இறந்து போனவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல் இனி அங்கு உயிரோடு இருப்பவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். இங்குள்ள அரசியல் தலைவர்கள் பேசும் பிரிவினை வாதம், ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

உயிரோடு இருப்பவர்களை...

உயிரோடு இருப்பவர்களை...

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று நினைப்பவன் நான். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. எனவே உயிரோடு இருக்கும் தமிழர்களை காக்கவாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போது உள்ள பிரதமர் பேசாத பிரதமர். மே மாதம் தேர்தலுக்கு பின்னர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பின்னர் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

மீனவர்கள் பிரச்சினை

மீனவர்கள் பிரச்சினை

நம்முடைய மீனவர்கள் தினசரியும் கடலில் தாக்கப்படுகின்றனர். இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று இரண்டு நாட்களுக்கு உள்ளாகவே நம்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர், தாக்கப்பட்டனர். காரணம் நம்முடைய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை சரியில்லை. இலங்கை பிரச்சினைக்காக கூட்டணியில் இருந்து விலகினால் சிபிஐ வைத்து மிரட்டுகின்றனர்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பற்றி...?

எஸ்.வி.சேகர்: நம் ஊரில் கெஜ்ரிவாலுக்கும், காஜல் அகர்வாலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. துடைப்பமும், தாமரையும் ஒன்றாகிவிடுமா? துடைப்பம் வெளியில் இருக்கவேண்டும். தாமரை பூஜை அறையில் இருக்கும். ஊழலை எதிர்க்கிறேன் என்று மக்களிடம் வாக்கு கேட்டு ஜெயித்துவிட்டு காங்கிரஸ் ஆதரவினை பெற்று டெல்லியில் ஆட்சியமைத்துள்ளனர். காங்கிரஸ் கட்டியணைப்பதே நசுக்கி கொல்லத்தான் என்பது கெஜ்ரிவாலுக்கு தெரியவில்லை. கெஜ்ரிவால் வாயைத் திறந்தாலே பொய்தான் வெளிவருகிறது.

இந்து அமைப்புகள் தாக்குதல்…

இந்து அமைப்புகள் தாக்குதல்…

கேள்வி: தமிழர் அமைப்புகளானாலும் சரி.. ஹிந்து அமைப்புகளானாலும் சரி.. அடிக்கடி உங்கள் வீடு கல் வீசித் தாக்கப்படுகிறதே..

எஸ்.வி.சேகர்: நான் ஜாதி மதம் பார்ப்பதில்லை. இந்து மத சம்பிரதாயங்களை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். சிறுபான்மை, பெருபான்மையினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதில்லை. இன்றைக்கு இந்துக்களுக்கு எதிராகப் பேசுவதைத்தான் மதச்சார்பின்மை என்கின்றனர். இந்துத்துவா என்று கூறி கல்வீசியவர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்.

மகாபாரதத்தில் மங்காத்தா சூதாடக்கூடாது என்பதை கூறும் கதை. மொத்த ஸ்கிரிப்டையும் காவல்துறையில் கொடுத்து அவர்கள் பெர்மிசன் கொடுத்த பின்னர்தான் போடுகிறோம். இதில் எங்கே இந்து மதத்தை இழிவு படுத்துவது இருக்கிறது. ஒரு இந்துவின் வீட்டில் கல்வீசுபவர்கள் எப்படி இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்.

சிரிக்க வைப்பேன்…

சிரிக்க வைப்பேன்…

கேள்வி: உங்கள் நாடக வாழ்க்கையில் சந்தித்த இனிய தருணங்களாக எதை கருதுவீர்கள்?

எஸ்.வி.சேகர்: 1992ல் முதன்முறையாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்னுடைய நாடகத்திற்கு தலைமை தாங்கினார். என்னுடைய நாடகத்தை பார்த்துவிட்டு, இதுவரை யாருமே என்னை இப்படி சிரிக்கவைத்ததில்லை சேகர் என்று ஜெயலலிதா கூறினார்.

இன்றைக்கு பொழுது போக்குவதற்கு நிறைய சாதனங்கள் இருக்கின்றன. ஆனாலும் ஐ.டி துறையை சார்ந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் நான் போடும் நாடகத்தை பார்த்து ரசித்து வயிறு குலுங்க சிரித்து சென்கின்றனர். மன அழுத்தம் போக்கும் மருந்தாக என்னுடைய நகைச்சுவை நாடகம் இருப்பதாக அவர்கள் அவர்கள் என்னிடம் சொல்லும் போது எனக்கு திருப்தியாக இருக்கிறது.

யாரையும் அழவைப்பது எனக்கு பிடிக்காது. இன்றைக்கு உள்ள சீரியல்கள் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என அனைவரையும் அழவைக்கிறது. ஆனால் என்னுடைய நாடகங்கள் எல்லோரையும் சிரிக்க வைக்கும்.

நான் நேர்மையான அரசியல்வாதி…

நான் நேர்மையான அரசியல்வாதி…

கேள்வி: பாஜக, அதிமுக, திமுக ஆதரவு நிலைப்பாடு, காங்கிரஸ், மீண்டும் பாஜக.. எந்தக் கட்சியில் அதிக கஷ்டத்தை சந்தித்தீர்கள்.

நான் எந்தக் கட்சியிலும் கஷ்டத்தையோ, சிரமத்தையோ சந்திக்க வில்லை. நான் நேர்மையானவன். பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. சேவை செய்ய வேண்டும் என்றுதான் வந்தேன். மயிலாப்பூர் எம்.எல்.ஏவாக இருந்த போது தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக செலவழித்தேன். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் ஒரு பைசா கமிஷன் வாங்கவில்லை.

சொத்துக்கணக்கு காட்டினேன்…

சொத்துக்கணக்கு காட்டினேன்…

தேர்தலில் போட்டியிடும் போது சொத்து கணக்கு காட்டியதைப் போல பதவியில் இருந்து 5 ஆண்டுகள் முடிந்த பின்னரும் சொத்து கணக்கு காண்பித்தேன். என்மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது. எனக்கு சரியெனப் பட்டதை, நேர்மையாக செய்கிறேன். எனக்கு பெரியரின் சுயமரியாதைக் கொள்கை பிடிக்கும். எனக்கு மதிப்பு கொடுக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன்.

நாடகம்தான் திருப்தி…

நாடகம்தான் திருப்தி…

ஒரு அரசியல்வாதியாக, ஒரு நடிகராக எதில் திருப்தியாக., வசதியாக உணர்கிறீர்கள்

நாடகம், சினிமா, டிவி இது மூன்றும் தொழில் சம்பத்தப்பட்டது. பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்குப் போகவில்லை. எம்.எல்.ஏவாக எனக்கு கிடைத்த ஒரு மாத வருமானம் ஒரு நாடகத்தில் ஒரு ஷோவில் எனக்கு நிறைய கிடைத்துவிடும். நாடக நடிகராகத்தான் எனக்கு திருப்தியாக இருக்கிறது. 1974ல் தொடங்கி 2014 வரை இன்னமும் நான் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கும் 6 நாடகம் போடுகின்றேன். இதுவரை 5800 நாடகங்கள் போட்டிருக்கிறேன். அடுத்தவாரம் கூட ‘மோதி விளையாடு பாப்பா' என்ற நாடகம் போடப்போகிறேன்.

தென் சென்னை தொகுதியில்…

தென் சென்னை தொகுதியில்…

கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

எஸ்.வி.சேகர்: எம்.பி சீட்டுக்காக பாரதீய ஜனதா கட்சியில் சேரவில்லை என்று நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். ஒருவேளை கட்சித்தலைமை முடிவெடுத்து என்னை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன். நானாக போட்டியிடுகிறேன் என்று சீட் கேட்க மாட்டேன். தெரியாத இடத்தில் என்னை போய் போட்டியிடச் சொன்னாலும் நான் மறுத்துவிடுவேன். எனக்கு நன்றாகத் தெரிந்த தென் சென்னை தொகுதியில் மட்டுமே போட்டியிடுவேன்.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்…

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்…

கேள்வி: ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் சேர்ந்து செயல்படுவீர்களா.. இல்லை பாஜகவிலேயே தொடர்வீர்களா..

எஸ்.வி.சேகர்: ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அதற்கான உடல்பலமும், மனோபலமும் இப்போதைக்கு கிடையாது. அவர் 1996லேயே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அதற்கான நேரம் அப்போது இருந்தது. அதை தவறவிட்டுவிட்டார். நேர்மையற்ற, ஊழற்ற ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை விரும்பும் நபர் ரஜினி.

சினிமா வாழ்க்கையில்…

சினிமா வாழ்க்கையில்…

கேள்வி: சினிமா வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத அனுபவங்கள்...

எஸ்.வி.சேகர்: சினிமாவில் நான் நகைச்சுவைக் கதைகளில் கதாநாயகனாகத்தான் நடித்தேன். ஆனால் என்னை காமெடியனாக மாற்றிவிட்டார்கள். இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் 6 படங்கள் வரை நிராகரித்து விட்டேன். மகனுடன் சேர்ந்து மது குடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. என்னுடைய மகன் நடித்த நினைவில் நின்றவள் படத்தில் ஒரு காட்சி கூட சிகரெட் குடிப்பது மாதிரி கூட வராது. ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். சமுதாயத்தில் நல்லவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாஜக வெற்றி வாய்ப்பு

பாஜக வெற்றி வாய்ப்பு

கேள்வி: மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

எஸ்.வி.சேகர் மக்களவைத் தேர்தலில் நான் தமிழர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் நரேந்திர மோடிக்காக பிரச்சாரம் செய்வேன். பாரதீய ஜனதா கட்சி தேசிய அளவில் 272 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராவார்.

English summary
Actor S.Ve.Sekher has said BJP will win 272 seat in the coming Lok Sabha poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X