For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதி செய்யாதீர்கள்: கருணாநிதிக்கு ஓ.பி.எஸ் பதிலடி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

காவிரி மற்றும் முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக கருணாநிதி கூறியதற்கு மறுப்பு தெரிவித்துமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தேவையின்றி அறிக்கை போர் தொடுத்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட வேண்டும்!' என மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழர் நலனையும், தமிழக விவசாயிகளின் நலன்களையும் பாதுகாத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியவர் 'அம்மா' தான்.

Cauvery, Mullai periyar issues:Tamilnadu chief minister O.Pannerselvam slams Karunanidhi

எனவே தான், முல்லைப்பெரியாறு அணையில் இன்றைக்கு 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு பொறுக்க முடியாமல், தி.மு.க.வினாலும், தன்னாலும் சாதிக்க முடியாததை, ஏன் கனவிலும் நினைக்க முடியாததை, 'அம்மா' சாதித்துக்காட்டி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் ஒரு தரமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.

மேலும், இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு இது பற்றி கடிதம் ஒன்றை எழுதியதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நான் இருந்து விட்டேன் என்ற ஒரு பொய்யை இடையே அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி. முல்லைப்பெரியாறு அணையில் முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ள நிலையில், நீர் மேலாண்மையினைக் கருத்தில் கொண்டு முல்லைப்பெரியாறு அணையின் நீரின் அளவு ஒழுங்குமுறை செய்யப்பட்டு வருகிறது.

எனவே இது தொடர்பாக பிரதமருக்கு தற்போது எந்தவித கடிதமும் எழுத வேண்டிய அவசியம் இல்லை. உச்சநீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்துவது அனைத்து தரப்பினரின் கடமையாகும். இதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து பிரதமருக்கு தற்போது கடிதம் எதுவும் எழுதப்படவில்லை. ஏனெனில், முல்லைப்பெரியாறு தாவா தீர்க்கப்பட்ட ஒன்று. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமான, உச்சநீதிமன்றத்திலேயே தமிழக மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று தந்தவர் 'அம்மா'.

எனவே, இந்த தீர்ப்புக்கு மேலும் கேரள அரசு எதுவும் செய்திட இயலும் என்ற ஒரு வீணான அச்சத்தை கருணாநிதி ஏற்படுத்த முயன்றால் முல்லைப்பெரியாறு நீரை நம்பியுள்ள ஐந்து மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். ஒவ்வொரு பிரச்சனையிலும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதற்கு உரிய நடவடிக்கைகளை 'அம்மாவும்', அவர்களது வழியில் செயல்படும் அ.இ.அ.தி.மு.க. அரசும் மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைத்திட வேண்டுமென்று கேரள சட்டமன்றம் 9.12.2011 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய போது, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தி, கேரள அரசுக்கு தக்க அறிவுரையை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்ற காரணத்தால், 'அம்மா' 15.12.2011 அன்று சிறப்பு சட்டமன்றக்கூட்டம் கூட்ட நடவடிக்கைகளை எடுத்து அந்தக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, தான் முட்டு கொடுத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசை கருணாநிதி ஏன் அப்போது வற்புறுத்தவில்லை? இது போன்றே, இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு 'அம்மா' சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். முல்லைப் பெரியாறு அணையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, நீர் தேக்கி வைப்பதற்கு இது போன்ற தீர்மானங்கள் இன்றைய சூழ்நிலையில் அவசியமற்றதாகும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடி அளவுக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்று 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மத்திய நீர்வளக்குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நியமிக்கப்படும் 3 உறுப்பினர்கள் கொண்ட மேற்பார்வைக்குழுவின் முன்னிலையில் உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, 'அம்மா' பிரதமரை 3.6.2014 அன்று நேரில் சந்தித்து அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்துவதற்கு மேற்பார்வை குழுவினை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரிலேயே, மத்திய அரசு 1.7.2014 அன்று இக்குழுவை அமைத்தது.

17.7.2014 அன்று நடைபெற்ற இக்குழுவின் 2ஆம் கூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவிற்கு உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அன்றே அணையின் மதகுகள் கீழிறக்கப்பட்டன.

எந்தப் பிரச்சனையில் எந்த வித அணுகுமுறையை கடைபிடிப்பது என்பதில் கருணாநிதிக்கும், தி.மு.க.விற்கும் தான் என்றைக்குமே குழப்பம். முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக 5 பேர் கொண்ட குழுவினை உச்சநீதிமன்றம் அறிவித்த போது, அதில் இடம் பெறுவது பற்றி கருணாநிதிக்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது.

அவரது குழப்பத்தை தீர்த்துக்கொள்ள கூடிய இடம் அவரது கட்சியின் பொதுக்குழுவோ, செயற்குழுவோ இல்லை என்றாலும், தி.மு.க.வின் பொதுக்குழுவில், தமிழக அரசின் சார்பில் ஐவர் குழுவில் இடம் பெறுவது தேவை இல்லை என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார் கருணாநிதி. ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சனையான முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி விடை கண்ட அதிமேதாவி கருணாநிதியின் அறிவுரை இந்த அரசுக்கு தேவையில்லை என்பதை அவருக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.கருணாநிதி தனது அறிக்கையில் கேரள அரசின் முயற்சிகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத்தெரியவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் கேவியட் தாக்கல் செய்வது பற்றி முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். கேவியட் மனு என்றால் என்ன என்பது பற்றி கருணாநிதிக்கு ஒன்றுமே தெரியாது என்னும் தனது அறியாமையைத்தான் அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட் மனு' தாக்கல் செய்வது பற்றி உச்சநீதிமன்ற விதிகளில் உத்தரவு 18-ன் கீழ் விதி 2-ன்படி கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் 7.5.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, கேரள அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த சீராய்வு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிலுவையிலுள்ள நிலையில் தற்போது கேரள அரசால் தாக்கல் செய்யப்படும் மனுவின் மீது தமிழக அரசுக்கு எந்த வித அறிவிப்பும் அளிக்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்காது என்பதால் கேவியட் மனு எதுவும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கேவியட் போன்ற சட்ட நுணுக்கங்கள் பற்றி எதுவும் தெரியாமல், அதைப் பற்றி அறிவுரைகள் வழங்குவதை கருணாநிதி இனி மேலாவது நிறுத்திக்கொள்வது அவருக்கும் நல்லது; நாட்டு மக்களுக்கும் நல்லது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 31.10.2014 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் 136 அடியை எட்டியது. 1.11.2014 அன்று வைகை அணையில் 2.4 டிஎம்சி அடி நீர் மட்டுமே இருந்தது.

3.11.2014 முதல் முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர் குறைந்தும் அதிகரித்தும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. வைகை அணையில் உள்ள நீர், முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவற்றின் அடிப்படையில் நீர் மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இதிலும் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கருணாநிதி முல்லைப்பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் குறைக்கப்பட்டு 142 அடி வரை நீர் தேக்கப்படவேண்டும் என அறிக்கை வெளியிட்டு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கு வழி வகை செய்து விட்டார்.

இதே போன்று, காவேரியின் குறுக்கே கர்நாடகா அணைக்கட்டுவதை தடுக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக அரசின் மீது அந்த அறிக்கையில் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். காவேரி நதியானது ஒரு பன்மாநில நதி என்பதால், கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் இசைவு பெறாமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் கர்நாடக அரசு எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ள இயலாது.

எனவே, இது குறித்து கருணாநிதி தமிழக அரசுக்கு எந்த ஒரு அறிவுரையையும் அளிக்க தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். காவேரி நதிநீர் பிரச்சனை என்றாலும், முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனை என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சனை என்றாலும், தமிழக மீனவர் பிரச்சனை என்றாலும், தமிழர்களின் நலன் காப்பதற்கும் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருபவர் 'அம்மா' தான். 'அம்மாவின்' வழியில் செயல்படும் இந்த அரசின் செயல்பாட்டால், முல்லைப்பெரியாறு அணையில் தற்போது 141.35 அடி அளவிற்கு நீர் தேக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசால் மேகதாதுவில் அணைகள் கட்ட விருப்பம் கோரும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் போதிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி அறிக்கை எதுவும் வெளியிடாமல் இருப்பதே தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்யக்கூடிய நன்மை.

இது போன்ற அறிக்கைகளை தமிழர்களுக்கு எதிராக கர்நாடகமும், கேரளமும் பயன்படுத்திடக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ‘நல்லது செய்தல் ஆற்றிராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்' என்ற புறநானூற்றின் வரிகளின் படி நடந்து கொள்ள வேண்டும் என கருணாநிதியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu chief minister O.Pannerselvam request DMK chief Karunanidhi to not create unnesasary coments on inter state river issues such as Cauvery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X