ப சிதம்பரம் வீட்டில் ரெய்டு... ரஜினியைச் சீண்டுகிறதா பாஜக அரசு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடக்கே டெல்லி முதல் தெற்கே சென்னையைத் தாண்டியும் சிபிஐ, அமலாக்கத் துறை என அடுத்தடுத்த ரெய்டுகளும் வழக்குகளும் குவிந்து வருகின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால், நல்லது தானே, தப்பு செய்பவர்களை கண்டுபிடிக்கவும், தண்டிக்கவும்தானே இந்த துறைகள் இருக்கிறது என பரவசமடையக் கூடும்.

இந்த ரெய்டுகள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான அம்பானி, அதானி குழுமங்களில் நடைபெறவில்லை. ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் நடைபெற வில்லை.

CBI raid at P Chidambaram: Is BJP teasing Rajinikanth

வேறு எந்த தொழிலதிபர்களின் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ இல்லை. அவர்கள் எல்லாம் அவ்வளவு நல்லவர்களா. வரி ஏய்ப்பு செய்யாமலா இருக்கிறார்கள்.?

வழக்குகளும், ரெய்டுகளும் சரியாக குறி பார்த்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே பாய்ந்துள்ளன . மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், அர்விந்த் கேஜ்ரிவால் என பாய்ந்த நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தின் ப.சிதம்பரம் மீதும் பாய்ந்துள்ளது.

தவிர தங்களுக்கு சாதகமாக யாரை வளைக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறதோ அவர்களையும் சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் ரெய்டுகள் நடத்தி அடக்கியுள்ளது. அஇஅதிமுகவின் எல்லா அணிகளையும் ஏதாவது ஒரு வழக்கைக் காட்டி தன்வசப்படுத்தி வைத்துள்ளது மத்திய ஆளும் பாஜக அரசு.

காங்கிரஸ் ஆட்சியிலும் அரசல் புரசலாக அரசியல் ரீதியான ரெய்டுகள் என்று வெளி வந்தாலும், இத்தனை பட்டவர்த்தமாக நடந்தது இல்லை.

அடுத்த தேர்தலுக்குள் எதிர்க்கட்சி தலைவர்களை ஒட்டு மொத்தமாக ஊழல் குற்றவாளிகளாக சித்தரிக்கும் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது.

சிதம்பரம் மீது பாய்ந்துள்ள நடவடிக்கை சற்று ஆச்சரியமான ஒன்றாகும். சமீப காலமாக அவர் தொடர்ந்து பாஜகவை எதிர்த்து எழுதி வருகிறார்.
ராஜ்ய சபாவில் கேள்விக் கணைகள் தொடுத்து பாஜக அரசை திணறடித்து வருகிறார்.

அதற்காகவே, சிவகங்கையில் தோற்றுப் போன பிறகும் காங்கிரஸ் கட்சி, அவரை மகராஷ்ட்ராவிலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த காரணங்களுக்காக அவர் மீது பாஜக அரசு பாய்ந்திருக்கக் கூடும் என்பதுதான் பலருடைய கணிப்பாகும். ஆனால் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், தமிழக முதல்வர் வேட்பாளர் சிதம்பரம் என்பதால் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது என்று கொளுத்திப் போட்டுள்ளார்.

அரசியல் குறித்து ரஜினி பேசிய அடுத்த நாள் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளதால் அதற்கும் இதற்கும் சிலர் முடிச்சுப் போடுகிறார்கள். ஆனாலும் தியாகராஜனின் பேச்சு சுயமானதாக இருக்க முடியாது.

தலைவர்களின் மனசாட்சிதான் இப்படி தீவிர விசுவாசிகளின் வார்த்தைகளில் வரும் என்பது தான் தமிழக அரசியல்.

தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், கிடைத்துள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடு என்ற நிலையில் சிதம்பரம் முதல்வரா?

அப்போ ரஜினியின் ஆதரவில் சிதம்பரம் முதல்வர் வேட்பாளரா? கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவியை சிதம்பரத்திற்கு தாரை வார்ப்பாரா ரஜினி? பல கேள்விகள் எழுகின்றன.

ஆனாலும் 'பாஜக - ரஜினி' கூட்டணி என்ற பேச்சுக்களை விட 'சிதம்பரம் - ரஜினி' கூட்டணி என்ற கிசுகிசுப் பேச்சு சுவாராசியமாகத்தான் இருக்கிறது.

ரஜினிக்கும் - சிதம்பரத்திற்குமான நட்பு, மோடிக்கும் ரஜினிக்குமான நட்பை விட நீண்ட காலம் கொண்டது. தனக்கு மிகவும் நெருக்கமான ஆர்எம்வி யை விடவும், மூப்பனார் -சிதம்பரத்துடன் ரஜினி அதிகமாக அரசியல் பேசி இருக்கிறார்.

மன்மோகன் சிங் போல், காங்கிரசின் அடுத்த பிரதமர் வேட்பாளார் என்ற பேச்சு அடிபடும் நிலையில், தமிழக முதல்வர் என்பது சற்று மாறுபட்ட கோணமாக இருக்கிறதே.

சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ -ஐ அனுப்பி ரஜினிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல் கசியவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை அப்படி இருந்தால் மோடியும் அமித் ஷாவும் ரஜினியை துளி கூட புரிந்து கொள்ள வில்லை என்பது தான் அர்த்தமாகும். ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே எதிர்த்து நின்றவர் ரஜினி.

ரஜினியிடம் மிரட்டல் எடுபடாது என்பதை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா, அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் நட்பு பாராட்டி, தனக்கு எதிராக ரஜினி எந்த அரசியல் நிலைப்பாடும் எடுக்க விடாமல் பார்த்துக் கொண்டார்.

படத்தில் மட்டுமே 'நல்லவனுக்கு நல்லவன்' இல்லை. நிஜத்திலும் அப்படியே வாழ்பவராக இருக்கிறார் ரஜினி. மத்திய பாஜக அரசு ரஜினியிடம் சீண்டிப் பார்த்தால் அது தமிழகத்திற்கு நல்லதே!

- ஸ்கார்ப்பியன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources say that BJP govt is using the raid technic (P Chidambaram) to tease Rajinikanth.
Please Wait while comments are loading...