For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர் அமைப்புகள், தமிழ் இயக்கங்கள், மீனவர்களை 'சமூக விரோதிகளாக' சித்தரிக்கிறதா போலீஸ்?

சென்னையில் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வரலாறு காணாத வெறியாட்டத்துக்கு மாணவர் அமைப்புகள், தமிழ் இயக்கங்கள், மீனவர்களே காரணம் என பழியைப் போடுகிறது சென்னை போலீஸ்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போலீசார் நடத்திய வெறியாட்டத்துக்கு தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை ஆதரித்த மாணவர் அமைப்புகள், தமிழ் இயக்கங்கள், மீனவர்கள்தான் காரணம் எனவும் இவர்களை சமூகவிரோதிகள் எனவும் பழியைப் போடுகிறது சென்னை போலீஸ்.

வரலாற்றில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களில் உள்ள மாணவர்கள் தங்களது கட்சி அடையாளத்தை தூக்கி வைத்துவிட்டு களம் கண்டனர்.

இந்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் ஆதரவு தந்தனர். இதேபோல்தான் மாணவர் உரிமைக்கு போராடும் அமைப்புகள், தமிழக உரிமைக்கு போராடும் இயக்கங்களும் அடையாளம் ஏதுமின்றி இப்போராட்டத்தில் பங்கேற்றன. மெரினா புரட்சியில் ஈடுபட்டோருக்கு மீனவர்கள் பெரும் உதவியாக இருந்தனர்.

இப்படி அனைத்து தரப்பு ஆதரவுடன் யுகப் புரட்சியாக வெடித்த மாணவர் புரட்சி கண்டு குலைநடுங்கிப் போனவர்கள் தற்போது மாணவர்களையும் மீனவர்களையும் இயக்கங்களையும் தனித்தனியாக பிரித்து அமைப்புகள், இயக்கங்களை சமூகவிரோதிகளாக சித்தரித்து வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

சென்னை நகர தலைமையக கூடுதல் கமி‌ஷனர் சே‌ஷசாயி, துணை கமி‌ஷனர்கள் பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஷேசாயி, மெரினாவில் 6 நாட்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், இளைஞர்களும் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடைய போராட்டத்துக்கு போலீசார் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர். போலீசாருக்கு அவர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தனர் என்றார்.

அசம்பாவிதம் இல்லை

அசம்பாவிதம் இல்லை

மெரினாவில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியபோதுகூட ஒருசிறு அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. மாணவர்களே போக்குவரத்தை சீர் செய்தார்கள். 6 நாட்களாக நடந்த போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்ததாக ஒரு புகார்கூட இல்லை.

விளக்கம்

விளக்கம்

போராட்டம் நடத்தப்பட்ட 6 நாட்களும் தினமும் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து விளக்கி கூறிவந்தார். முதல்வர் டெல்லி சென்றது, பிரதமரை சந்தித்துப் பேசியது அதன்பிறகு அவசரச் சட்டம் கொண்டு வந்தது போன்ற அரசின் செயல்பாடுகள்பற்றி போராட்டம் நடத்தியவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.

சமூக விரோத அமைப்புகள்

சமூக விரோத அமைப்புகள்

ஆனால் 7 சமூக விரோத அமைப்புகள் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய அமைதியான அறவழிப் போராட்டத்தில் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். உண்மையிலேயே, போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினார்கள்.

நோக்கம் வேறு...

நோக்கம் வேறு...

ஆனால் மாணவர்கள் போர்வையில் போராட்டக் களத்தில் புகுந்தவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி பேசாமல், தலைவர்கள் பற்றி தரக்குறைவாக பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது அவர்கள் நோக்கமல்ல. அரசை செயல்படவிடாமல் தடுப்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது.

அமைதிவழியில்தான்...

அமைதிவழியில்தான்...

போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்பதை வீடியோ படமாக எடுத்து மாணவர்களே எங்களிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகுதான், போலீஸ் தரப்பில் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 23ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை அமைதியான வழியில் கலைந்து செல்வதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்தோம்.

எங்களிடமும் ஆதாரம் உள்ளது

எங்களிடமும் ஆதாரம் உள்ளது

மெரீனாவில் 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் லத்தி கொடுக்கப்படவில்லை. யாரும் துப்பாக்கியும் வைத்திருக்கவில்லை. அறவழியில் போராடியவர்களை எந்தவித அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல், ஆயுதங்கள் பயன்படுத்தாமல் அறவழி நடவடிக்கைகள்மூலம் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தோம். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

மீனவர்கள் காரணமாம்

மீனவர்கள் காரணமாம்

எங்களது அறவழி நடவடிக்கை தொடங்கியபோது, மெரினாவில் 5 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். எங்களின் விளக்கத்தை ஏற்று சுமார் 3 ஆயிரம் பேர் அவர்களாகவே மெதுவாக கலைந்து சென்றுவிட்டனர். காலை 8.30 மணிக்குள் 3 ஆயிரம் பேரும் கலைந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் கடல் பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். மீனவர்கள் குப்பத்தில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து கடல் பகுதியில் இருந்தவர்களோடு கலந்துவிட்டனர். மீனவர்கள் குப்பத்திலிருந்து வந்தவர்கள்தான் கடல் பகுதியிலிருந்த போராட்டக்காரர்களை கலைந்து செல்லவிடாமல் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், இளைஞர்களும் அமைதியாக கலைந்து சென்றது சமூக விரோத கும்பலுக்குப் பிடிக்கவில்லை.

வன்முறை

வன்முறை

இதனால் அவர்கள் சீல் வைக்கப்பட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்டு வன்முறையை வெடிக்க வைத்தனர். லத்தியில்லாமல் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

தாக்குதல்

தாக்குதல்

நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டாங்குப்பம் போன்ற மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் வன்முறையாளர்கள் புகுந்துவிட்டனர். அங்கு வசிக்கும் மக்களை ஏமாற்றி, மிரட்டி தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அவர்களை கேடயமாக வைத்துக் கொண்டு போலீசார் மீது சரமாரியாக தாக்கினார்கள். லத்தி இல்லாததால் போலீசார் பல இடங்களில் அடி வாங்கினார்கள்.

தீ வைப்பு

தீ வைப்பு

ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை கொளுத்தியது யார்? என்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ காட்சி மூலம் தெளிவாக தெரியவந்தது. ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தை பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் நிலையத்தை வெளியில் பூட்டிவிட்டனர். உடனடியாக துணை கமி‌ஷனர் சுதாகர் போலீஸ்படையோடு அனுப்பி வைக்கப்பட்டார். நானும் அங்கு நேரடியாக சென்றேன்.

சித்தரிப்பு

சித்தரிப்பு

போலீஸ் நிலையத்திற்குள் மாட்டிய போலீசார் மீட்கப்பட்டனர். இரு சம்பவங்களில் போலீசார் வாகனத்துக்கு தீ வைப்பதுபோலவும், வாகனத்தை லத்தியால் உடைப்பதுபோலவும் உள்ள ஒரு வீடியோ காட்சியை ‘வாட்ஸ்-அப்'பில் பரப்புகிறார்கள். இரு சம்பவத்தை தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப 2 ஆயிரம்முறை காட்டி போலீசார்தான் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

நாங்களும் வெளியிடுவோம்

நாங்களும் வெளியிடுவோம்

ஜல்லிக்கட்டுக்காக உண்மையாக போராடிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும். வன்முறையாளர்கள் நடத்திய வெறியாட்டங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் எங்களிடமும் உள்ளது. ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் கொளுத்திய சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இதை வாட்ஸ்அப் பில் எங்களாலும் வெளியிட முடியும்.

அமைப்புகள் பெயர் வெளியீடு

அமைப்புகள் பெயர் வெளியீடு

ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடந்துவருகிறது. விசாரணை முடிந்தபிறகு உரிய ஆதாரங்களோடு வன்முறையில் ஈடுபட்டு பிரச்னையை பெரிதாக்கிய 7 சமூக விரோத அமைப்புகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும்.

மேன்சன்களில் முகாம்

மேன்சன்களில் முகாம்

வெளி மாவட்டங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பகுதியில் மேன்சன்களில் தங்கி இருந்துள்ளனர். மாட்டாங்குப்பம், நடுக்குப்பம், அயோத்திகுப்பம் போன்ற பகுதிகளிலும் அவர்கள் ஊடுருவியுள்ளனர். அதுதொடர்பான ஆதாரங்களும் உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து சமூக விரோதிகள் சென்னைக்கு வந்தார்களா? என்பதுபற்றி விசாரணை நடத்தப்படும்.

குடியரசு தின விழாவுக்கு குறி

குடியரசு தின விழாவுக்கு குறி

குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் நோக்கத்தோடுதான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பி இந்த சமூக விரோத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்தியுள்ளனர். அரசின் செயல்பாட்டை முடக்குவதற்கும் இவர்கள் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறார்கள். போலீசார் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று சேஷாயி கூறினார்.

English summary
According to Chennai police 7 movements are behind the violence and dubbed them as anti social elements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X