For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் ஆதரவாளர் படுகொலை: கடலூரில் ஐவர் சரண்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மத்திய இணை அமைச்சர் நாரயணசாமியின் ஆதரவாளருமான காங்கிரஸ் பிரமுகர் காமராஜ் நேற்றிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர். கொலை தொடர்பாக 5 பேர் கடலூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

புதுச்சேரி பிரதேச காங்கிரசில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் காமராஜ். இவர் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். மத்திய அமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளரான காமராஜ்,செவ்வாய்கிழமை இரவு 9 மணி அளவில் தனது ஊரில் இருந்து ஸ்கூட்டரில் பெரிய காட்டுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் அந்த இடத்திலேயே காமராஜ் துடி துடித்து இறந்தார். மர்ம கும்பல் அங்கிருந்து மேல்அழிஞ்சிப்பட்டு வழியாக தப்பிஓடிவிட்டது.

சாலைமறியல், வன்முறை

கொலை நடந்த இடம் தமிழக பகுதிக்கு உட்பட்டதாகும். காமராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்ததும், அவரது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் - புதுவை மெயின் ரோட்டுக்கு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதோடு அந்த வழியாக வந்த வாகனங்களை சராமாரியாக அடித்து நொறுக்கினார்கள். இந்த வன்முறை சம்பவத்தில் அந்த வழியாக வந்த பஸ்கள், லாரிகள், கார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இருசக்கரத்தில் வாகனத்தில் வந்தவர்களையும் தாக்கினார்கள். இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

போலீஸ் தடியடி

இதையடுத்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

பின்னர் அந்த கும்பல் புதுவை பகுதியில் நின்று கொண்டு வன்முறையில் ஈடுபட்டது. அப்போது புதுவை போலீசார் அவர்களை தடியடி நடத்தி பூரணாங்குப்பம் ஊரை நோக்கி விரட்டி சென்றனர். அப்போது போலீசார் மீது கிராம மக்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதில் 4 போலீசார் காயமடைந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் 2 முறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது. வன்முறையால் கடலூர்- புதுவை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

8 பேர் மீது வழக்குப் பதிவு

கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த குமாரவேலு, ராஜசேகர், தமிழரசு, முகிலன், தமிழரசன், கார்த்திகேயன், சிலம்புசெல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

காமராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பெண் தொடர்பு

மேலும் ஒரு பெண் விவகாரம் தொடர்பாகவும் தகராறு இருந்துள்ளது. எனவே அதனால் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையுண்ட காமராஜூக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. காமராஜ் கொலையை அடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.பூரணாங்குப்பம், தவளக் குப்பம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

5 பேர் சரண்

இதனிடையே, இன்று காலை கடலூர் காவல் நிலையில் 5 பேர் சரணடைந்துள்ளனர். அவர்கள் உண்மையான குற்றவாளிகள் தானா என்று கடலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

English summary
A congress functionary was hacked to death in Puducherry. Police suspect vengeance behind the murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X