For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேகர் ரெட்டியுடன் கூட்டு வைத்துள்ள ராம்மோகன் ராவை கைது செய்ய சிபிம் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவின் வீடு மற்றும் அவரது மகன், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, இவர்களிடம் பல ஆயிரம் கோடிக்கு பினாமி சொத்துக்கள் இருப்பதாக விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், ராம்மோகன் ராவ் கைது செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் மாநிலக்குகூக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 2 நாட்களாக சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைகுழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CPM demands Rammohan Rao’s arrest

இரண்டாவது நாளான இன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருமானவரித் துறையால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் கைது செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள்:

ராம்மோகன் ராவ் கைது

ஆளும் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள், தங்க கட்டிகள், தங்க நகைகள், பலநூறு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற ஒப்பந்ததாரர்களாகவும், மொத்த மணல் அள்ளிடும் உரிமைகளை பெற்ற நிர்வாகிகளாகவும் இருந்துள்ளார்கள். தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் பெருந்தொகைக்கான ஒப்பந்த பணிகள் பிரதானமாக சேகர் ரெட்டியின் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக விபரங்கள் வெளிவந்துள்ளன.

மவுனம் காக்கும் ஓபிஸ்

தொடர்ந்து, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவின் வீடு மற்றும் அவரது மகன், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கும் பல ஆயிரம் கோடிக்கு பினாமி சொத்துக்கள் இருப்பதாக விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் எவ்வித கருத்தும் கூற முன்வரவில்லை.

கொடிகட்டும் ஊழல்

ராம மோகன ராவை முதல்வரின் முதன்மை செயலாளராகவும், பின்னர் சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு தலைமை செயலாளராகவும் நியமித்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ராம மோகன ராவ் குவித்துள்ள ஊழல் சொத்துக்கள் பல ஆயிரம் கோடி எனில், முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்கள் கற்பனைக்கு எட்டாத அளவு சொத்து குவித்திருப்பார்கள் என்பது திண்ணம். ஒட்டுமொத்தத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஊழல் கொடி கட்டி பறந்துள்ளது என்பதும், ஆளும் கட்சியினர் - அதிகார வர்க்கம் - பெரும் ஒப்பந்தக்காரர்கள் கொள்ளை கூட்டணியாக பரிணமித்திருப்பதும் நிரூபணமாகியுள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஆபத்து

தலைமை செயலாளர், அவரோடு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதுடன், முறையான விசாரணை நடத்தி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. அதே சமயம் வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் படை துணையோடு தலைமை செயலாளரின் அலுவலகத்திற்குள் சோதனை நடத்துவதற்கு முன்பு குறைந்தபட்சம் தமிழக முதலமைச்சருக்கு தகவல் அளிக்காதது கூட்டாட்சி தத்துவ கோட்பாட்டிற்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.

லோக் ஆயுக்தா சட்டம்

தமிழ்நாட்டை மாறி, மாறி ஆட்சி நடத்திய திமுக, அதிமுக மக்கள் நலனை காவு கொடுத்து முழுநேர ஊழல் ஆட்சிகளையே நடத்தியுள்ளன என்பது மீண்டும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழகத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர்பதவிகளில் உள்ளவர்கள் ஈடுபட்ட ஊழல் - முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள லோக் - ஆயுக்தா சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

பாஜகவின் சதி

செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது நோக்கத்திற்கு உகந்ததாக அதிமுகவின் தற்போதைய தலைமையை திருப்புவதற்கான திரைமறைவு வேலைகளை நடத்துகிறது. நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்து மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி மறுபுறம் மதவெறி நடவடிக்கைகள் மூலம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கிற பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் இடமளிக்ககூடாது, தமிழகத்தின் சமூகநீதி, மதச்சார்பின்மை பாரம்பரியத்தை மீண்டும் முன்னெடுக்க முன்வர வேண்டும்.

பண மதிப்பு ரத்து மரணங்கள்

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் பாஜக அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்கள் நெருங்கி விட்டன. இந்த நடவடிக்கையின் காரணமாக கருப்பு பணமோ, கள்ள நோட்டுக்களோ ஒழிக்கப்படவில்லை. மாறாக, கருப்புப் பண பேர்வழிகள் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களையும் பதுக்கி பிடிபட்டுள்ளதை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. ஏனெனில், அடிப்படையில் அரசின் நடவடிக்கை கறுப்புப்பணத்தை உருவாக்கும் செயல்பாடுகளை முடக்குவதாக இல்லை. அதே சமயம் அனைத்துப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி வரிசையில் நின்று இறந்தவர்கள், பணிச்சுமை தாளாமல் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறைத் தாண்டியுள்ளது. அரசு அனுமதிக்கும் அளவுக்கு கூட வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. தமிழக முதலமைச்சர் இதில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவதானது வன்மையான கண்டனத்துக்குரியது.

மோடியின் மோசடி

இச்சூழலில் புதிய நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை துரிதப்படுத்தி போதுமான அளவு நோட்டுக்களைப் புழக்கத்தில் விட வேண்டும்; அதுவரை பழைய நோட்டுக்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இப்போது சிரமப்பட்டால் பின்னால் நல்லது நடக்கும் என்று அரசுத்தரப்பில் முன்வைக்கப்படும் மோசடி வாதங்களை நிராகரித்து மக்கள் நலன் காக்க ஓரணியில் திரண்டு போராட முன் வர வேண்டுமென்று அனைத்துப்பகுதியினரையும் அறைகூவி அழைக்கிறது.

வறட்சி மாநிலம்

தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் பருவமழை பொய்த்துள்ளது. வரலாறு காணாத வகையில் வறட்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பயிர்களும் கருகி அழிந்துள்ளன. குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலைமை உள்ளது. வறட்சியின் காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சி சாவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் கும்பகர்ண ஆட்சி

இன்னொரு பக்கம் காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பையும், மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியையும் கிடப்பில் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக நலனுக்கு எதிரான இந்நடவடிக்கை குறித்து மாநில அரசு குரல் கொடுக்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை பற்றி எள்ளளவும் கவலை கொள்ளாத கும்பகர்ண ஆட்சியாக தற்போதைய ஆட்சி தொடர்கிறது. அதிகாரம் மற்றும் பதவிகளைப் பங்கிடுவது என்பதிலேயே தற்போதைய தலைமையின் கவனம் குவிந்திருக்கிறது.

இச்சூழலில் தமிழக மக்களின் நலன் காக்க பல்வேறு இயக்கங்களை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்திருக்கிறது. இவற்றில் பங்கேற்க முன்வர வேண்டுமென அனைத்துப்பகுதி உழைப்பாளி மக்களையும் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CPM demanded to arrested Sacked Chief Secretary of Tamil Nadu Rammohan Rao.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X