நிர்மலா தேவி விவகாரம்: சட்டத்தின் முன் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும் - ஜி.கே. வாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்லூரி மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குள்ளாக்கும் கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

GK Vasan statement about Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்த நிர்மலா தேவியை பணியிடை நீக்கம் செய்தது சரியான முடிவு. கல்லூரியில் பணிபுரிந்த இந்த பேராசிரியை செல்போனில் பேசிய ஆடியோ வெளியீடு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கவலையும் அளிக்கிறது. காரணம் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளிடம் பேராசிரியை தவறான முறையில் பேசியதும், அதுதொடர்பாக அந்த மாணவிகள் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த தவறான போக்குக்கு காரணமாக இருந்தவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியையை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முழு விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை.

இந்த சம்பவம் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையத்திலேயே இது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவது என்பது மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது.

கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி. மாணவர்களுக்கு நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அப்பேற்பட்ட உகந்த பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தான் மாணவர்களின் வருங்கால நல்வாழ்க்கைக்கு முன்னோடியாக திகழ்பவர்கள். அப்படி இருக்கும் போது ஒரு பேராசிரியை தவறான வழியில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற ஒரு சம்பவம் இனி எந்த ஒரு கல்வி நிலையத்திலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தி, இச்சம்பவத்தின் உண்மைத்தன்மைக்கு ஏற்ப உடனடி நடவடிக்கை எடுத்து, தண்டனையையும் வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GK Vasan demanded a CBI probe on the Nirmala Devi Case. Devanga Arts College professor Nirmala Devi who allegedely tried to sexually exploit girl students, was arrested by the police on Monday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற