For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைவராக.. தடுமாறுகிறாரா மு.க.ஸ்டாலின்?

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தலைவராக ஸ்டாலின் தடுமாற்றத்தை சந்திக்கிறாரா?- வீடியோ

    - ராஜாளி

    திமுக தலைவராக பொறுப்பேற்றதும் ஸ்டாலின் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதையும் தாண்டி பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஸ்டாலினின் பதவியேற்பு வைபவ பேச்சு தலைவர் என்ற பவருக்கு வந்ததுமே அவரது பேச்சும் பவர்புல்லாகத்தான் இருந்தது என்பது உண்மைதான்.

    "இந்த சமூகத் தீமைகளை அகற்றி, தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்கும் முதல் கடமையாகக் கொண்டிருக்கிறோம். கொள்கைகளே அறியாத சில அரசியல் கட்சிகள், தமிழகத்தின் இந்த ஆட்சியைப் பார்க்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று பேசியதாக இருக்கட்டும் இதையும் தாண்டி இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா, முதுகெலும்பில்லாத இந்த அரசைத் தூக்கி எறிய வா என்று தனது தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்ததாக இருக்கட்டும் ஸ்டாலினின் பேச்சு அத்தனை பவர்புல்லாகத்தான் இருந்தது. இதில் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு இந்தியா முழுமைக்கும் காவி வண்ணம் அடிக்கும் அவரது அரசை தூக்கி எறிய வா என்று பேசியதுதான் ஸ்டாலினை விமர்சன வளையத்துக்குள் இழுத்து வந்துள்ளது.

    Is Stalin steady in his stand against BJP?

    திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் கேட்டது திமுக, தமிழக அரசு சட்ட சிக்கல்களை காட்டி கைவிரிக்க மோடியிடம் திமுக தரப்பில் இடம் கேட்டதாக ஒரு தகவல் உலா வருகிறது. அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரபுகளை மீறி கருணாநிதியை மருத்துவமனையில் வந்து நலம் விசாரித்து விட்டு சென்றார். அதோடு துணைக் குடியரசுத் தலைவர் அமைச்சர்கள் என்று மத்திய அரசின் படைப் பரிவாரங்கள் எல்லாம் கருணாநிதியின் நலம் விசாரிக்க வந்து சென்றனர். பின்னர் அவர் இறந்த பின்னர் இதுவரை யாருக்கும் கொடுக்க மரியாதையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு கருணாநிதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இப்படியாக பாஜக திமுகவின் பக்கம் நெருங்கி வருவதற்கான அத்தனை கல்யாண குணங்களும் வெளிப்படையாகவே தெரிந்தன.

    இது ஒருபுறம் என்றால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்ததும் டெல்லிக்கே சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். இது அரசியல் நாகரீகம் என்று எடுத்துக் கொண்டால் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டபோது சுயமரியாதை இயக்கத்தை சார்ந்த ஸ்டாலின் அஸ்திக்கும் அவசரம் அவசரமாக சென்று மரியாதை செலுத்தினார். அடுத்த அதிரடியாக சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் புகழ்வணக்க அஞ்சலி நிகழ்சிக்கு பாஜகவின் தலைவர் அமித்ஷாவை அழைத்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார் ஸ்டாலின். அமித்ஷாவை அழைத்தது அதிர்ச்சி என்று குறிப்பிடக் காரணம் கடந்த ஆண்டு கருணாநிதியின் வைரவிழா கூட்டத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அளித்திருந்த வேளையில் பாஜகவை அழைக்காதது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது திராவிடத்தை அழிக்க நினைக்கும் பாஜகவை எப்படி அழைப்பது என பதில் உரைத்தார் ஸ்டாலின்.

    Is Stalin steady in his stand against BJP?

    இப்படி இருந்த நிலையில்தான் திமுக பாஜகவுடன் தற்போது அதீத நெருக்கம் காட்டுகிறதோ என்று எண்ணத்தோன்றும் வகையில் திமுகவின் முன்னாள் முதன்மைச் செயலாளரும், தற்போதைய பொருளாளருமான துரைமுருகன் பாஜக எதிரிக் கட்சி அல்ல மாறாக எதிர்க் கட்சிதான் என்றெல்லாம் கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை நிலைமை இப்படி இருக்க அமித்ஷாவை அழைத்தது தமிழகத்தில் சில சலசலப்புகளை ஏற்படுத்த அமித்ஷா வரமாட்டார் என அப்போதே சுப்ரமணியசாமி ட்வீட் செய்திருந்தார், அதன்படியே அமித்ஷாவும் வரமாட்டேன் என்று கூறியதோடு நிதின் கட்கரியை அனுப்பி வைப்பதாக கூறிவிட்டார் இந்நிலையில் தலைவராக பொறுப்பேற்ற வைபவத்தில் மோடியையும் காவியையும் வெளுத்து வாங்கியுள்ளார்.

    இதில் பல்வேறு விசயங்கள் அடங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். திமுக ஏற்பாடு செய்துள்ள புகழ்வணக்க அஞ்சலி கூட்டத்திற்கு அமித்ஷா வரமாட்டார் என்று திட்டவட்டமாக தெரிந்த பின்னரே ஸ்டாலின் மோடி அரசை வறுத்து எடுத்ததாகவும், அதோடு தற்போது தமிழகத்தில் நிலவும் மோடி எதிர்ப்பு அலை தங்களுக்கு எதிராக திரும்பி விடக் கூடும் என்ற நிலை கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிலவும் நிலையில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என ஸ்டாலின் கருதியதாலும், அதோடு தங்களோடு இருக்கும் மதிமுக, விசிக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலேயே ஸ்டாலின் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

    ஸ்டாலினின் இந்தப் பேச்சு குறித்து பாஜகவின் மூத்த தலைவரும், எம்.பி., யுமான இல.கணேசனிடம் கேட்டபோது

    ஸ்டாலினின் பேச்சை பாஜக எப்படி பார்க்கிறது?

    பண்பு கருதி நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் அவரின் பேச்சில் பண்பு இல்லை. பக்குவமோ மரபோ இல்லை. கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வந்திருந்தார். அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி என்று கூறிவிட்டு கலைஞர் வழியில் கழகத்தை நடத்துவேன் என்று சொல்லியிருந்தால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியும், அதன் பின்னர் அரசியல் களத்தில் நாம் கருத்து ரீதியாக போராடிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு அந்த கூட்டத்தில் மோடியின் பெயரை சொல்லியே காவி மயமாக்க அவர் முயற்சிக்கிறார் என்று அவர் பேசியது பொருத்தமல்ல. பாரதமே காவி மயமாகத்தான் இருக்கிறது என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். காவி தியாகத்தை குறிக்கும் வார்த்தை என்பதால்தான் தேசியக்கொடியில் காவி நிறம் இருக்கிறது. திமுகதான் தன்னுடைய கருப்பு சிவப்பு நிறங்களை இப்போது இழந்து தவிக்கிறது. கருப்பு என்றால் அது ஐயப்பனையும், சிவப்பு என்றால் ஆதிபராசக்தியையும் தான் நினைவு கொள்கிறார்கள். இந்நிலையில் காவியை விமர்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    அப்படியென்றால் ஸ்டாலினின் அந்த கருத்துகள் பாஜக திமுகவுடன் நெருங்குவதை தடுத்துள்ளதா?

    இருக்கலாம், ஸ்டாலின் அச்சப்பட்டிருக்கலாம். திமுக ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள இருந்ததை பாஜகவும் திமுகவும் நெருங்கி வருகிறது என்று பேசப்பட்டதற்கு விளக்கம் கொடுக்க அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் ஆனால் அது அவர் பாடு.

    Is Stalin steady in his stand against BJP?

    பாஜக, திமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்புகிறதா இல்லையா?

    அது பிரச்சனை அல்ல, பாஜக கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்க உள்ளது என்று அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார். யாரோடு கூட்டணி என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

    ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பிராந்திய கட்சிகள் வலுப்பெற்றிருக்கும் சூழலில் திமுகவின் ஆதரவை பாஜக கேட்டுப் பெறுமா?

    அப்படி ஒரு தேவை இருக்காது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்றதைவிட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்.

    உங்களது நம்பிக்கை அப்படி, ஆனால் கள யதார்த்தம் தமிழகம் போன்ற மாநிலங்களில் மோடிக்கு எதிரான ஒரு வலுவான அலை வீசுகிறது என்பதை மறுக்க முடியாது, இந்த நிலையில் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் ?

    உங்களது கணிப்பு தவறானது, யாரோ திட்டமிட்டு மோடிக்கு எதிரான கருத்துகளை பரப்புகிறார்கள் இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை. காரணம் 4 ஆண்டுகள் ஊழல் இல்லாமல் தேசத்தை உயர்த்தியுள்ள ஆட்சியை கொடுத்திருக்கிறோம்.

    அப்படியென்றால் ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பாஜக-திமுக இடையிலான இணக்கத்திற்கான முற்றுப்புள்ளி என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா?

    இல்லை, நாம் அவசரப் பட தேவையில்லை, அவர் பக்குவமில்லாதவர் என்பதுதான் எனது கருத்து. அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து அனுப்பியதே முதல் பாடம்தான் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல், என்று கூறினார் இல.கணேசன்

    தொடர்ந்து திமுகவின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் ஸ்டாலினின் பேச்சு குறித்து கேட்டபோது

    அமித்ஷா திமுக கூட்டத்திற்கு வரமாட்டார் என்று தெளிவாக தெரிந்தபின்னர்தான் ஸ்டாலின் இவ்வாறு பேசினாரா?

    நிச்சயமாக இல்லை.

    சமீபகாலமாக திமுக பாஜக நெருங்கி வந்ததே?

    அப்படி ஒரு தோற்றத்தை ஊடகங்களும், பத்திரிக்கைகளும் உருவாக்கின. அது உண்மையல்ல.

    திமுகவின் சித்தாந்தம் பாஜக சித்தாந்தத்திற்கு நேர் எதிராக இருக்கும்போது அமித்ஷாவை திமுக நிகழ்வுக்கு அழைத்ததன் காரணம் என்ன?

    அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்தோம் அதனால் அவரையும் அழைத்தோம்.

    சுயமரியாதை இயக்கமான திமுக வாஜ்பாயின் ஆஸ்திக்கு மரியாதை செலுத்தியதை எப்படி பார்ப்பது?

    ஒரு இயக்கத்திலிருந்து அழைக்கிறார்கள் அதனால் அங்கு சென்று வாஜ்பாயின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் இதில் என்ன தவறு உள்ளது?

    பாஜக எங்களுக்கு எதிரிக் கட்சி அல்ல எதிர்கட்சிதான் என்று கூறியிருப்பதை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து சென்று விட முடியுமா?

    யாருமே எங்களுக்கு எதிரிக் கட்சி அல்ல

    இந்த சந்தர்ப்பத்தில் அவர் இப்படி கூறியிருப்பதை - கேள்வியை முடிக்குமுன்னர்

    இந்த சந்தர்ப்பத்தில் இப்படி குழப்புகிறார்கள் என்பதால்தான் ஸ்டாலின் அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டார்

    ஆக பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் உங்களது தெளிவான முடிவா?

    தெளிவான முடிவு என்பதால்தான் ஸ்டாலின் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார். அவர் கூறியது ஒரு பிரகடனம் போன்றது.

    தேர்தலுக்கு பிந்தைய சூழலில் பாஜகவுக்கு திமுகவின் ஆதரவு தேவை என்றால் ஆதரவளிப்பீர்களா ?

    அதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அந்த அதிகாரம் அவருக்கு மட்டும்தான் உள்ளது.

    தேர்தலுக்குப் பிறகு பாஜகவும் திமுகவும் இணைய வாய்ப்பு இருக்கிறது இல்லையா? அதைக் கூறமுடியாது எந்த முடிவாக இருந்தாலும் அதை ஸ்டாலின்தான் எடுப்பார் என்று கூறினார் ஆலந்தூர் பாரதி

    கடந்த ஆர்.கே. நகர் இடைதேர்தலுக்கு முன்னர் தினத்தந்தியின் பவள விழா நிகழ்ச்சிக்கு வந்த மோடி திடீரென்று கருணாநிதியை கோபாலபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதன் பிறகு திமுக எப்போது வேண்டும் என்றாலும் பாஜக பக்கம் சாயலாம் என்ற எண்ணம் சிறுபான்மையினரிடையே தோன்றியதன் விளைவாக ஆர்கே நகர் தேர்தலில் சிறுபான்மையினரின் மொத்த வாக்குகளும் தினகரனுக்கு சென்றது திமுகவுக்கு இப்போது நினைவுக்கு வந்திருக்கலாம். அதோடு திமுக தேர்தலுக்கு பிந்தைய சூலில் பாஜகவுடன் இணைந்து பணியாற்றாது என்று எந்தவித உத்தரவாதமும் திமுக இப்போது கொடுக்காது.

    தேர்தலுக்கு பிந்தைய சூழலில் இருதுருவங்களாக இருந்த கட்சிகள் இணைந்து பணியாற்றியுள்ள வரலாறு இந்தியா முழுவதும் உள்ளது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்துள்ளது, பீகாரில் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிதிசும் பாஜகவும் இணைந்து ஆட்சிக் கட்டிலில் இருக்கின்றனர் என்பதோடு தமிழகத்தில் இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனப்படுத்தியபோது அதை தீரத்துடன் எதிர்த்த கட்சி திமுக. அதற்கு திமுக கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கூறிய திமுக இப்போது இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா என்று அறைகூவல் விடுக்கிறது இதை காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றுமா என்பதற்கு காலம்தான் பதில் கூறவேண்டும்.

    English summary
    Is DMK president MK Stalin steady in his stand against BJP?, this is a million dollor question.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X