• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓணம் பண்டிகை: சென்னை, குமரி, கோவையில் மலையாள மக்கள் உற்சாக கொண்டாட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம், இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மக்கள் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு, தீபமேற்றி புத்தாடை அணிந்து கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவின் வசந்தவிழாவாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்படுகிறது.

இறுதி நாளான திருவோணத்தன்று, தன் மக்களை தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு முன் அத்தப்பூ கோலம் போட்டு, புது ஆடைகள் அணிந்து கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் மலையாள மக்கள் வாழும் தமிழகத்திலும் சென்னை, குமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது.

மகாபலி மன்னன்

மகாபலி மன்னன்

மலையாள தேசத்தை ஆண்ட மகாபலி மன்னனின் ஆட்சி காலத்தில் மக்கள் எந்த துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். எனவே அது பொற்கால என புகழப்பட்டது. அசுரகுலத்தின் வேகமான வளர்ச்சியை கண்ட தேவர்கள், மகாபலி மன்னனுடன் போரிட்டனர். இந்த போரில் அசுர குலம் வெற்றி பெற்றது.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

பயந்து போன தேவர்குலத்தினர், திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைவதற்காக, காசிப முனிவரின் மனைவி திதி வரம் கேட்டாள். அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுரனாக இருந்தாலும், தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான்.

மூன்றடி மண் தானம்

மூன்றடி மண் தானம்

அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன், மகாபலியின் அரண்மனைக்கு சென்று, தான் தவம் செய்வதற்காக, மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால்தான் என்பதை அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், தானம் வழங்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என, மகாபலியை தடுத்தார். ஆனால் இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன், குரு கூறியதையும் கேட்காமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே விஸ்வரூப அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து வழங்கினார். மூன்றாவது அடிக்கு இடமில்லாததால், தன் தலை மீதே மூன்றாவது அடியை அளக்குமாறு கூறி, தன் தலையை தாழ்த்தி காண்பித்தார். அதன்படி மன்னனின் தலையின் மீது கால் வைத்து அழுத்த, மகாபலி மன்னன் பாதாள லோகத்துக்குள் சென்றான்.

மக்களை காண வரம்

மக்களை காண வரம்

அப்போது, மகாபலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து மக்களை காண அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு வாமனனும் வரம் அளித்தார். இதன்படி தன் மக்களை காண, மகாபலி சக்ரவர்த்தி வரும் நாளே, ஓண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அத்தப்பூ கோலம்

அத்தப்பூ கோலம்

தங்கள் மனம் கவர்ந்த மன்னன் மகாபலியை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண்பிப்பதற்காகவும்தான் கேரள மக்கள் வீட்டு வாசலில் பூக்களால் கோலமிட்டு, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

அதிகாலையில்

அதிகாலையில்

காலையிலேயே புத்தாடை அணிந்து, கோவில்களில் வழிபாடுகள் நடத்தி, பல்வகை பதார்த்தங்களுடன் உணவு உண்பதும், இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் தானம் கொடுப்பதும், ஓணத்தின் சிறப்பம்சங்களாகும்.

ஓண தினமாகிய இன்று அதிகாலையில் மலையாள மக்கள் அனைவரும் குளித்து புத்தாடைகளை அணிந்து திருக்காக்கரை அப்பனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

ஒணம் சத்யா

ஒணம் சத்யா

ஓணம் என்றாலே கேரள மக்கள் நினைவில் வருவது சத்யா எனப்படும் விருந்துதான். மதியம்தான் இந்த விருந்து சாப்பாடு தயாராகும். திருவிளக்கு வைத்து அதற்கு முன்பு தலை வாழை இலையில் உணவு பரிமாறி பூஜை செய்யப்படும். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தலை வாழை இலையில் உணவு பரிமாறி அருந்தி மகிழ்கின்றனர்.

அவியல், கூட்டு, பாயசம்

அவியல், கூட்டு, பாயசம்

ஓண மதிய உணவின் சிறப்பாக குறைந்தது 6வகை காய்கறிகள், ஒன்றுக்கு மேற்பட்ட பாயசங்கள் (அடை, பருப்பு பாயசம், பால்பாயசம், நேந்திரப்பழ பாயசம்...), அப்பளம். ஊறுகாய், சாம்பார், ரசம், தயிர்...என உணவு சமைக்கப்படும்.

முதலில் சாதத்தில் பருப்புடன் நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்பர். இதன் பின் சாம்பார் ஊற்றி, காய் கூட்டு வகைகளை சேர்த்து சோறு உண்பர். தோரன், காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட வகைகளை சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். அடுத்ததாக சக்கப்பிரதமன், அடப்பிரதமன் என பாயச வகைகளை சுவைப்பர்.

ஊஞ்சல், நடனம்

ஊஞ்சல், நடனம்

மதிய உணவிற்கு பின்னர் குழந்தைகள் குதூகலமாக ஆட்டம், பாட்டு, ஊஞ்சல் என்று சுற்றித்திரியும். இளம் பெண்கள் விளக்கினை சுற்றி நடனமாடுவார்கள். தங்களை காண வரும் மன்னனிடம், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தவே அத்தப்பூ, ஊஞ்சல் என, ஓணம் களை கட்டுகிறது.

100 டன் பூக்களை

100 டன் பூக்களை

ஓணப்பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூமார்க்கெட்டில் நேற்று ஒரே நாளில் 100 டன் பூக்கள் விற்பனையானது. ஒரு கிலோ மல்லி 800, பிச்சிபூ 800ரூபாய், அரளி ரூ100, கேந்தி ரூ40, வாடமல்லி ரூ80, கோழிப்பூ ரூ60, மஞ்சள்கேந்தி ரூ80, மாம்பழகேந்தி ரூ35, தாமரை 100 எண்ணம் ரூ500, துளசி ரூ60, கொழுந்து ரூ50, மரிகொழுந்து ரூ60 என விற்பனையானது. அதுபோன்று வாழைத்தாரின் விலையும் அதிகரித்தது. காய்கறிகள் விலையும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.

உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை

சென்னை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓணம் பண்டிகை‌யை முன்னிட்டு இந்த 3 மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

English summary
Expatriates from Kerala, who form the largest group of Indians in the UAE, are celebrating their most important festival, Thiruvonam, today. Thiruvonam is the main day of the 10-day harvest festival of Onam that is celebrated by people of all religions in the south Indian state known as ‘God’s Own Country’.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X