தூத்துக்குடி: அரசின் தடையை மீறி தாது மணல் ஏற்றுமதி… மீனவர்கள் முற்றுகையிட முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 ஆயிரம் டன் கனிம மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஸிஸ்குமார் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, "தமிழகம், கேரளம் மாநில கடலோரங்களில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அதே போல் தடையை விதித்தது தமிழக அரசு. இப்போது தாது மணல் வாகங்களை எங்குமே காணமுடியாத நிலை உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 13 ஆயிரம் டன் அளவிற்கு மேல் தாது மணலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் வேலை தற்போது நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

மீனவர்கள் முற்றுகை

இந்த நிலையில் தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரி தூத்துக்குடி துறைமுகத்தை முன்னறிவிப்பின்றி முற்றுகையிட 3 மாவட்ட மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். அரசு தடை விதித்துள்ள தாது மணல் சட்ட அனுமதியோடு தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம், தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி தாது மணலை ஏற்றி வருகிறது. இதற்காக அவசர அவசரமாக எம்வி தோர்கோ ட்ரையம்ப் என்ற சரக்கு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதில் கார்னெட் மணலுக்கு மட்டும் முன் தேதியிட்டு அனுமதி பெற்றுக் கொண்டு மோனோசைட் மற்றும் ரூட்டைல் ஆகியவை சேர்த்து கடத்தப்படுகிறது. 12,500 மெட்ரிக் டன் எடை கொண்ட தாது மணல் ஏற்றப்பட்ட சரக்கு கப்பல் வரும் திங்களன்று புறப்பட தயாராகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக 16 ஆயிரம் மெட்ரிக் டன் தாது மணல் எடுத்துச் செல்ல மற்றொரு கப்பல் வரவழைக்கப்படுகிறது. இவ்வாறாக வி.வி நிறுவனம் தான் பதுக்கி வைத்துள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன் தாது மணலை தடை வருவதற்குள் ஏற்றுமதி செய்யும் முனைப்புடன் வேலை செய்து வருகிறது. இது அப்பட்டமான கடத்தல் என்பதால் தடுக்கப்பட வேண்டியது கட்டயாமாகிறது.இதனை கண்டு கொள்ள வேண்டிய அரசுகள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன. இதற்கு உடந்தையாக இருக்கும் தூத்துக்குடி துறைமுகம் நிர்வாகத்தையும் மீனவர் ஐக்கிய முன்னணி கண்டிக்கிறது. இதை தடுத்து நிறுத்த அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறைமுகத்தின் 2வது தளத்தில் தாது மணல் ஏற்றப்பட்டு வரும் சரக்கு கப்பலை திருப்பி அனுப்ப வேண்டும். துறைமுகத்தில் ஏற்றுமதி செய்ய தயாராக உள்ள தாது மணல் பறிமுதல் செய்யப்படவேண்டும்.இல்லாத பட்சத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து தூத்துக்குடி துறைமுகத்தை கடல் அல்லது தரை வழியாகவோ எவ்வித முன் அறிவிப்பும் இன்றி முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மீனவர்கள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
While it has been banned to export mineral sand, reports claim that a ship in Tuticorin was being loaded with mineral sand to be exported abroad.
Please Wait while comments are loading...