For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோட்டில் பிடிபட்டது எந்த தமிழக அமைச்சரின் பணம்? ஐடி விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்தில் அதிமுக அமைச்சரின் உறவினர் வீட்டில் ஐடி சோதனை நடத்தப்பட்டதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு ஒப்பந்ததாரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய பணம் எந்த அமைச்சருக்கு சொந்தமானது என்பதை விளக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக அரசு அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரும், கான்டிராக்டருமான ஈரோடு பிரமுகரின் நிறுவனங்கள் மற்றும், வங்கிகள் மூலம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள் என்று "வாட்ஸ் அப்" களிலும், சமூக வலைதளங்களிலும் செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 27 -க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ள பணம் அறிந்து கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகளே அதிர்ச்சியடைந்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஒரு சில இடங்களில் பிடிபட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள், மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்து செய்தி, குறிப்பாக வருமான வரித்துறையிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சரின் உறவினர்....

தமிழக அமைச்சரின் உறவினர்....

ஆனால் தமிழக அமைச்சரின் உறவினரிடம் நடைபெற்ற இந்த ரெய்டு பற்றிய தகவல் ஏதும் இதுவரை வருமான வரித்துறையின் சார்பில் செய்திக் குறிப்பாக வெளிவரவில்லை. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின்போது, கரூரில் அதிமுக அமைச்சர்களின் பினாமியாக செயல்பட்ட அன்புநாதன் என்பவர் வீட்டில் 22.4.2016 அன்று 4.77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதும், பணம் எண்ணும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரிந்ததே. அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஆம்புலன்ஸே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வருமான வரித்துறை ரெய்டின் மேல் நடவடிக்கை என்னவென்றே தெரியவில்லை. எங்கே அந்த விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் புரியவில்லை.

கன்டய்னர் வழக்கு என்னாச்சு?

கன்டய்னர் வழக்கு என்னாச்சு?

அடுத்து, திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் கடத்திச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் 13.5.2016 அன்று பிடிபட்ட விவகாரத்தில், திடீரென்று அது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பணம் என்று தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கை விரித்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தி.மு.க. தரப்பில் வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்ததால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திருப்பூர் கன்டெய்னர் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்று வரை அந்த கன்டெய்னர் வழக்கு விசாரணை என்ன ஆயிற்று என்பதே தெரியவில்லை.

ஐடி ரெய்டு என்னாச்சு?

ஐடி ரெய்டு என்னாச்சு?

அதிமுக அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதும் இதுவரை வெளிச்சத்திற்கு வரவில்லை. அந்த வரிசையில் இப்போது கர்நாடக வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சரின் உறவினர் வீட்டில் நடத்தியுள்ள ரெய்டும் ஆகி விடக்கூடாது என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நீர்த்து போகும் ரெய்டுகள்

நீர்த்து போகும் ரெய்டுகள்

அதிமுக அமைச்சர்கள், அமைச்சர்களின் உறவினர்கள் போன்றவர்களிடத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை ரெய்டுகள் மட்டும் நீர்த்துப் போக வைக்கப்படுகிறதா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மிக முக்கியமான அமைச்சர் ஒருவரின் உறவினர் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் மாற்றப்பட்டதாக வெளிவந்துள்ள "1150 கோடி ரூபாய்" ரெய்டு செய்தி குறித்த உண்மைத் தகவல்களை நாட்டு மக்களுக்கு உடனடியாக வருமான வரித்துறை தெரிவிக்க வேண்டும்.

எந்த அமைச்சர்?

எந்த அமைச்சர்?

அந்த ஈரோடு ஒப்பந்ததாரரிடமிருந்தது எந்த தமிழக அமைச்சரின் பணம் ? வேறு அதிமுக அமைச்சர்களின் பணமும் இருந்ததா ? அவ்வளவு புதிய நோட்டுக்களை அவர் மட்டும் மாற்றியது எப்படி ? அந்த ரெய்டின் மீதான தொடர் நடவடிக்கைகள் எந்த கட்டத்தில் உள்ளது என்ற விவரங்களை வருமான வரித்துறை வெளியிட வேண்டும்.

வெளிப்படை இல்லையே

வெளிப்படை இல்லையே

"கறுப்புப் பண ஒழிப்பே ஊழலை ஒழிக்கத் தான்" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து கூட்டங்களிலும், பேரணிகளிலும் வலியுறுத்திப் பேசி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரது அமைச்சரவையின் கீழ் இயங்கும் நிதியமைச்சகத்தின் சார்பில் "திருப்பூர் கன்டெய்னர்", "கரூர் அன்புநாதன் ரெய்டு", "அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்,மேயர் சைதை துரைசாமி ரெய்டு", "இப்போது அமைச்சர் உறவினரின் ஈரோடு வீட்டில் ரெய்டு" உள்ளிட்ட அனைத்திலும் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இருப்பது வேதனை தருகிறது. பிரதமரின் நோக்கம் ஊழல் ஒழிப்பு என்று கூறி வருகின்ற இந்த நேரத்தில் தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய விவரங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஊழல் பெருச்சாளிகளை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
DMK Treasurer MK Stalin has urged that IT department should reveals the details of Erode Raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X