For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு துரோகம்... பாமகவும் போராட்டத்தில் குதிக்கிறது.. 8ம் தேதி!

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து வரும் 8ஆம் தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

PMK announces protest against BJP

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் முளைத்திருந்த நம்பிக்கையை மத்திய அரசு கிள்ளி எறிந்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு செய்த துரோகம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையே அனைத்து மாநிலங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். கூட்டாட்சி முறையின் தாயாக விளங்கும் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் குழந்தைகளைப் போன்று பாவித்து சமநீதி வழங்க வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதம் நியாயப்படுத்த முடியாதது; மன்னிக்க முடியாதது. அதிக ஊதியம் வாங்கும் பிள்ளையிடம் அதிக பாசத்தையும், ஊதியம் ஈட்டாத பிள்ளையிடம் வெறுப்பையும் ஒரு தாய் காட்டினால், அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, அதேபோல் கர்நாடகத்திலிருந்து அரசியல் லாபம் கிடைக்கிறது என்பதற்காக அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதையும் ஏற்கமுடியாது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் எத்தகைய அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும், எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்த அனைத்து விவரங்களையும் காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பில் தெளிவாக வரையறுத்திருக்கிறது. அத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டியது மட்டும் தான் மத்திய அரசின் பணியாகும். ஆனால், இப்படி ஒரு ஆணையத்தை அமைத்தால், அது காவிரி ஆற்றில் கர்நாடகம் நடத்தி வரும் தண்ணீர் கொள்ளையை அம்பலப்படுத்தி விடும்; அதனால், அரசியல்ரீதியாக பின்னடைவு ஏற்படும் என்பதாலேயே மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியான 2007-ஆம் ஆண்டிலேயே மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்க வேண்டும். ஆனால், 2008-ஆம் ஆண்டில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருந்ததால் அப்போது வாரியம் அமைக்கப்படவில்லை. இப்போது 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு மேலாண்மை வாரியத்திற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

மேலாண்மை வாரியத்தை அமைக்காததற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் எதுவும் உண்மையல்ல. ஆனாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு கடுமையாக எதிர்ப்பு காட்டியதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் பின்வாங்கி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆணையை நிறுத்தி வைப்பதாக நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவித்திருக்கிறது. அநேகமாக இந்த விவகாரம் நீதிபதி சலமேஸ்வர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முடிவுக்கு விடப்படும் என்று கூறப்படுகிறது. அந்த அமர்விடம் காவிரி பிரச்சினை தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், காவிரிப் பிரச்சினைக்காக அந்த அமர்வு எப்போதாவது தான் கூடும் என்பதால் உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. மொத்தத்தில் மேலாண்மை வாரியம் கனவாகும் ஆபத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியமும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது. காவிரி பிரச்சினையில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள அனைத்துக் கட்சிக் கூட்டம், அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியும், கர்நாடகத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க வைத்தும் மத்திய அரசுக்கு கர்நாடகம் அழுத்தம் கொடுத்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த விஷயத்தில் மாநில உணர்வுடன் செயல்பட்டு பிரதமருக்கு நெருக்கடி தந்தனர். ஆனால், தமிழக அரசோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுடன் தனது கடமை முடிந்து விட்டதாக நினைத்தது. அதனால் தான் கைகூடவிருந்த காவிரி மேலாண்மை வாரியம் நம்மிடமிருந்து கை நழுவியது.

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசு, அலட்சியமாக இருந்து தமிழக உரிமைகளை பறிகொடுத்த தமிழக அரசு ஆகியவற்றைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 8-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். என் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder leader doctor Ramadoss announced protest against BJP government standing over Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X