For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக நல்லாட்சியும், எதிர்காலமும் பாமகவிடம்தான் - பாமகவின் வடக்கு மண்டல மாநாட்டின் அரசியல் தீர்மானம்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் 2016 ஆண்டின் ஆட்சி மாற்றத்திற்கான பாமகவின் வடக்கு மண்டல மாபெரும் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதுகுறித்த அரசியல் தீர்மானத்தின் அறிக்கையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அக்கட்சியின் அரசியல் தீர்மானத்தில், "அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசை அகற்றி, மது மற்றும் ஊழல் இல்லா மாநிலம் படைக்க பா.ம.கவை ஆட்சியில் அமர்த்துவோம்.

உலகம் ஓர் உருண்டை... வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். எந்த ஒரு நன்மையோ, தீமையோ படிப்படியாக அதிகரித்து அதன் உச்சத்தை அடைந்த பின் நிலை மாறும் என்பது இதன் பொருள்.

இந்த தத்துவம் தமிழகத்தில் மாறி மாறி நடைபெறும் அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சராக இருந்த வரை நல்லாட்சி நடைபெற்றது.

PMK statement about TN future

தமிழகத்தின் சீரழிவுகள்:

1967 ஆம் ஆண்டில் காங்கிரசை வீழ்த்தி தி.மு.க ஆட்சி அமைத்தது. அறிஞர் அண்ணா காலம் வரை தமிழகம் தடுமாறாமல் பயணித்த நிலையில், அவருக்குப் பிறகு தொடங்கிய சீரழிவுகள் இப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. இனியும் இந்த சீரழிவுகள் தொடர்ந்தால் தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. மக்களும் இதை உணர்ந்து மாற்றத்திற்கு தயாராகி வருவதை தெளிவாக உணர முடிகிறது.

எல்லா துறைகளிலும் வீழ்ச்சி:

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய 3 துறைகளும் தழைத்தோங்க வேண்டும். தமிழகத்தை திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைவதற்கு முன் திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைந்ததற்கு பின் என பிரித்துப் பார்த்தால் தமிழகம் அடைந்த வீழ்ச்சியை உணர்ந்து கொள்ள முடியும்.

PMK statement about TN future

தெய்வமான விவசாயிகள்:

திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முன் விவசாயிகள் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் தான் உணவு தரும் கடவுளாகவும், ஆடை வழங்கும் தெய்வமாகவும் விளங்கினார்கள். பாசன ஆதாரங்களுக்கு பற்றாக்குறையில்லை. நிலங்கள் அனைத்தும் பச்சைப் போர்வை போர்த்தி வளமையின் அடையாளமாக திகழ்ந்தன.

வறுமையின் பிடியில் உழவர்கள்:

ஆனால், அ.தி.மு.கவும், தி.மு.கவும் மாறி மாறி ஆட்சி செய்த பிறகு தமிழகத்தில் உழவர்கள் ஏழைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். நதிநீர் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டதால் காவிரி காய்ந்து கிடக்கிறது... பாலாறு பாலைவனமாகி விட்டது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விட்டன. விளைவு... உணவும், ஆடையும் வழங்கும் கடவுளாக பார்க்கப்பட்ட உழவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.கவும், தி.மு.கவும் தான் இந்த அவலங்களுக்கெல்லாம் காரணம்.

கண்ணீர் வரவைக்கும் பள்ளிகளின் நிலை:

கல்வியின் நிலை கண்ணீரை வரவழைக்கிறது. அன்று அரசு பள்ளிகள் மட்டும் தான் இருந்தன. தமிழ்வழிக் கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், ஆற்காடு இராமசாமி முதலியார், ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், சர் சி.வி. இராமன், அப்துல்கலாம் போன்ற அறிஞர்களையும், அறிவியலாளர்களையும் தமிழகம் உருவாக்கியது.

புத்தகப் புழுக்களை உருவாக்கும் கல்வி:

ஆனால், இன்று அரசுப் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தழைக்கின்றன. தமிழ் வழிக் கல்வி முடக்கப்பட்டு ஆங்கில வழிக் கல்வி அதிகாரம் செய்கிறது. ஆனாலும் அறிஞர்கள் - அறிவியலாளர்களுக்கு பதில் புத்தகப் புழுக்கள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இதற்கு காரணம் தி.மு.க, அ.தி.மு.கதான்.

ஒட்டகக் காய்ச்சல் முதல் மெர்ஸ் வரை:

சுகாதாரத்துறைக்கே சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது. டெங்கு காய்ச்சல் முதல் மெர்ஸ் எனப்படும் ஒட்டகக் காய்ச்சல் வரை அனைத்து நோய்களும் தமிழகத்தை தாக்குகின்றன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தமிழக அரசு, இந்த காய்ச்சலால் இறந்தவர்கள் குறித்த தகவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.

மதுக்கடைகளால் சீரழிவு:

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து வைத்ததன் விளைவாக 4 வயது சிறுவர்களுக்குக் கூட மது புகட்டப்படும் அவலங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கோவையில் பள்ளிக்கூட மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு சாலையில் தகராறு செய்த நிகழ்வு ஒட்டுமொத்த தமிழகத்தின் மானத்தையும் கப்பலேற்றியிருக்கிறது. தமிழகம் என்றாலே பச்சிளம் குழந்தைகள் கூட மது அருந்தும் மாநிலம் என்ற அவப்பெயரை ஏற்படுத்தியது தான் அ.தி.மு.க., தி.மு.க.வின் சாதனை.

கொத்தடிமைகளாய் மக்கள்:

வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படாததால் வட மாவட்ட மக்கள் குடும்பத்துடன் அண்டை மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்று கொத்தடிமைகளாக வாழ்ந்து மடியும் அவலம் நிலவுகிறது. இந்த சீரழிவுகளில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டியது தான் தமிழ்நாட்டு மக்களின் தலையாய கடமை ஆகும். நன்மையோ... தீமையோ படிப்படியாக அதிகரித்து அதன் உச்சத்தை அடைந்த பின் நிலை மாறும் என்பதற்கிணங்க சீரழிவின் உச்சத்துக்கு சென்று விட்ட தமிழகம், மாற்றத்தை எதிர்கொண்டு முன்னேற்றப் பாதையில் வீறு நடை போடுவதற்கான காலம் நெருங்கிறது.

மாற்றம் சாத்தியமே:

அந்த மாற்றம்.... முன்னேற்றத்தைக் கொண்டு வருவது தான் காலம் நமக்கு இட்ட கட்டளை ஆகும். இந்த கட்டளையை நிறைவேற்றுவதற்காகத் தான் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது. மத்திய அமைச்சராக இருந்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த அவரது நிர்வாகத்திறன் அனைவரும் அறிந்தது தான்.

வளர்ச்சிக்காக திட்டங்கள்:

அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தை பீடித்துள்ள மது, ஊழல், பொருளாதார பின்னடைவு, கடன் சுமை உள்ளிட்ட அனைத்து தீமைகளையும் அகற்றி வளர்ச்சிப் பாதையில் வழி நடத்திச் செல்ல பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே முடியும். எனவே, அனைத்து துறைகளிலும் தமிழகத்தை தோல்வியடைய வைத்த அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சியை அமைக்கவும், மது மற்றும் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் வடக்கு மண்டல மாநாடு சபதம் ஏற்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PMK party released a statement about its future foresight schemes in growth of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X