For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"முன்பை விட இப்போதுதான் சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு.." பல்கலை. பேராசிரியரின் நெகிழ்ச்சி கடிதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெருமழையால் சென்னை கற்றுத்தந்த பாடத்தையும், இந்த பேரிடர் நேரத்தில் தனது நெஞ்சை வருடிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டு இ-மெயிலில் கடிதம் அனுப்பியுள்ள, ஒன்இந்தியா-தமிழ் வாசகரான கல்லூரி பேராசிரியர் ஒருவர், சென்னையை தனக்கு இப்போதுதான் ரொம்பவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளதோடு, சென்னையில் வாழ்வோருக்கு அந்த நகரம் ஒரு தகப்பன்சாமி என்று வர்ணிக்கிறார்.

Professor explains why he likes Chennai more than before

இதோ அவரது வார்த்தைகள்: போதுமடா சாமி சென்னை வாழ்க்கை என்று லாரி பஸ் பிடித்து சொந்த ஊருக்கு திரும்பி, மீண்டும் சென்னை திரும்ப புறப்பட்ட, லட்சோப லட்ச தென் தமிழர்களில் ஒருவனாய், எழுதுகிறேன்.

தொலைந்த பொருட்கள், சிதைந்த கட்டிடங்கள், புதைந்து போன எங்கள் மூலதனங்கள், தெருவெல்லாம் வெள்ளமிருந்தும் குடிநீருக்காக ஏங்கி தவித்தோம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்ட நாங்கள், அடுத்த நேர உணவிற்கு மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்தோம்.

நாங்கள் தற்காலிகமாக எங்கள் களத்தை இழந்திருக்கிறோம். ஆம்.., சென்னை எனக்கு முன்பை விட இப்போது ரொம்ப பிடித்திருக்கிறது. wakeup sid என்ற பாலிவுட் திரைப்படத்தில், நாயகி கொங்கனாசென், தனக்கு மும்பை ஏன் பிடித்து இருக்கிறது என்று தேடி கொண்டே இருப்பார். அதைப்போல எனக்கு ஏன் சென்னை பிடித்திருக்கிறது என்று ஆராய்ந்தபோது என்னை நானே ஒருமுறை, திரும்பி பார்த்துக்கொண்டேன்.

சென்னை என்பது வாழ்வாதாரத்தின் அடையாளம் மட்டும் அல்ல, அது தன்னம்பிக்கையின் அடையாளம். எனக்கே என்னை நான் யார் என்று உணர வைத்த என் சினிமா காதலி. என் கனவுகளை விரிவடைய செய்து கொண்டே இருக்கும் கலைடாஸ்கோப்.

அலுவலகங்களில் ஆங்கிலம் சரியாக பேச தெரியாமல் கண் விழித்த என்னை சென்னையின் பிரபல நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக்கி அழகு பார்த்தது இந்த சென்னை, நம்ம சென்னை.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது. இந்த மாற்றங்கள் படிப்பினை மட்டும் அல்ல, சில நெகிழ்ச்சியான சம்பவங்களையும் சுட்டிக்காட்டியது.

இதுவரை இந்துக்களுக்காக திறக்கப்பட்ட கோவில்கள், இஸ்லாமியர்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிவாசல்கள், கிறிஸ்தவர்களுக்காக திறந்திருந்த தேவாலயங்கள், மாணவர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்ட கல்லூரிகள்.. முதல்முறையாக, சாதி, மத பேதமின்றி, மனித நேயத்தின் பொருட்டு, மக்களுக்காக திறக்கப்பட்டது என்னை நெகிழ்ச்சியடைய செய்தது.

துன்ப மேகங்கள் நம்மை சூழ்ந்தபோது, இதுவும் நம்மை கடந்துபோகும் என்று களம் கண்ட எம் இளைஞர்களின் சேவை என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. அசோக் நகரில் கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாதது, தனது வாடிக்கையாளர்களுக்கு பால் கொண்டு சேர்த்த ராதா அம்மா என்னை நெகிழ்ச்சியடைய செய்தார்.

கிழக்கு தாம்பரத்தில் ராணுவம் ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொட்டலங்களை மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு போடும்போது, தனக்கு ஒன்று போதும், என் பக்கத்து வீட்டுக்காரருக்கு கொடுத்துவிடுங்க என்று சைகையில் சொன்ன பெண்ணின் மனித நேயம் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது.

ராமாபுரத்தின் பெருவெள்ளத்தில் தான் பிரசவ வலியால் துடித்தபோது, தன்னையையும் தன் குழந்தையையும் காப்பாற்றியதற்காக, யூனுஸ் என்ற இஸ்லாமிய இளைஞரின் பெயரை தனக்கு பிறந்த குழந்தைக்கு சூட்டிய சகோதரி சித்ரா என்னை நெகிழ்ச்சியடைச் செய்தார்.

எம் உடன் பிறந்தோர், எம் பங்காளிகள், கல்லூரி, பள்ளி தோழர்கள், முந்தைய அலுவலக நண்பர்கள் அனைவரும் என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தது நெகிழ்ச்சியடைச் செய்தது.

தன்னம்பிக்கையும், பிறர் நலம்பேணுவதுமே சென்னையின் சுய முகங்கள். அது சிலரால் சில காலம் திரையிடப்பட்டு இருந்தது. மேகங்கள் விலகி தெரியும் நிலவைப்போல சென்னை எனக்கு மிகவும் அழகாக தெரிகிறது.

தென் தமிழர்கள் சென்னையில் வாழ்ந்தார்கள், வீழ்ந்தார்கள் என்பது அல்ல சரித்திரம். வீழ்ந்தும், எழுந்தார்கள், வென்றார்கள் என்பதே சரித்திரம். என் தகப்பன் சாமி சற்றே சரிந்து இருக்கிறான். அவனை மீட்டு எடுக்க வருவோம். முன்பைவிட ஆயிரம் ஆயிரமாய் லட்சம் லட்சமாய் தகப்பனுக்கு பணி செய்வோம்.

நாற்பது நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்தாலும், அனைவரும் சேர்ந்து எம் தகப்பன் சாமிக்கு குடைபிடிப்போம்.

கட்டுரையாளர்: சத்தியபாமா பல்கலைக்கழக பேராசிரியர்-காஜா பந்தா நவாஸ்.

English summary
Oneindia Tamil website reader and an university professor R.Kaja Bantha Navas explains why he likes Chennai more than before.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X