காற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை: ரமணன் Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை கிடைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

நமது ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு ரமணன் அளித்த சிறப்புப் பேட்டி விவரம்:

கேள்வி: தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் மழை குறித்து?

ரமணன்: தற்போது நடைபெறும் நிகழ்வானது தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை என கடலோரத்தில் நிகழ்கிறது. அதனால கடலோரப் பகுதிகளில் மட்டுமே மழை பெய்கிறது. இதனால்தான் சென்னையில் மழை அதிகமாக இருக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார்குடா வளைகுடாவுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்யும். அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. வட உள்மாவட்டங்களில் அதிகமான மழை இல்லை. கரூர் மாவட்டத்தில் 40% மழை குறைவாக இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 35% குறைவாக இருக்கிறது. எல்லோருக்கும் மழை கிடைக்க வேண்டுமானாலும் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர வேண்டும்.

சென்னையில் அதிக மழை ஏன்?

சென்னையில் அதிக மழை ஏன்?

கேள்வி: உள்மாவட்டங்கள்/ கடலோர மாவட்டங்கள் மழை அளவு பற்றி?

ரமணன்: 2015-ல் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்தது. 1976-ம் ஆண்டு ஒரே நாளில் 45 செ.மீ. மழை பெய்தது. சென்னையில் 30 செ.மீ மழை என்பது டிஜிபி அலுவலகப் பகுதியில்தான். மற்ற இடங்களில் 19, 20 செ.மீ மழைதான் இருந்துள்ளது. காற்றின் திசை,வேகத்தால் நகருக்குள் மழை அதிகமாக பெய்துள்ளது.

கருத்து ஒற்றுமை முக்கியம்

கருத்து ஒற்றுமை முக்கியம்

கேள்வி: வானிலை ஆராய்ச்சி மைய அறிக்கைகள் பற்றி?

ரமணன்: இப்பொழுது கணிணி சார்ந்த கணிப்புகளைத்தான் பயன்படுத்துகிறோம். முன்பெல்லாம் படங்களில் தரவுகள் குறிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து ஓரிரு நாட்களில் வானிலை அறிக்கை கொடுக்கப்படும். கணிணி சார்ந்த கணிப்பு என்பது நவீன யுகத்துக்கானது. பலநாட்டு தரவுகளை பயன்படுத்தி கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு தற்போது வானிலை அறிக்கைகள் தரப்படுகின்றன.

இது தனிமனிதரின் பணி அல்ல. மற்ற வானிலை மைய அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது. அஸ்ஸாமில் ஒரு நிகழ்வு ஏற்படுகிறது எனில் சென்னையில் இருக்கும் வானிலை அதிகாரியும் ஒரு கருத்தை தெரிவிப்பார். இப்படித்தான் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில்தான் வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இஸ்ரோவும் தராது

இஸ்ரோவும் தராது

கேள்வி: நாசா, இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் பற்றி?

ரமணன்: நாசா என்பது செயற்கைக் கோள் அனுப்பும் ஒரு நிறுவனம். அவர்கள் வானிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. நாசா என்ற பெயரில் யாரோ வானிலை அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் வானிலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடுவதில்லை.

சில தனியார் வானிலை ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. ஒருவர் தரும் கருத்தின்படி நாம் செல்வதுதான் சரி. வானிலை விவகாரங்களில் இன்னொருவர் எதிரான கருத்தை தெரிவித்தால் மக்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும்.

எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்?

கேள்வி: வெயில், மழை காலத்தில் மக்களுக்கான அறிவுரைகள்?

ரமணன்: எந்த ஒரு பேரிடர் காலத்திலும் அதற்கான புரிதல் இருக்க வேண்டும். உதாரணமாக வெப்ப அலை வீசுகிறது எனில் கண்டிப்பாக வெளியே செல்லக் கூடாது. பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். மொட்டை மாடியில் வெள்ளை பூச்சு கொடுக்கலாம். அப்படி செய்யும் போது வெப்பம் இறங்காது. ஒவ்வொரு பேரிடருக்கும் என்ன செய்ய வேண்டும் என்கிற புரிதல் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ள முடியும். மழையின் போது தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால் டார்ச் லைட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நல்ல உணவு, குடிநீர், மருந்துவகைகளை முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொள்ளலாம். இயற்கை சேதங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை புரிந்து கொண்டால் உயிர் சேதம், பொருட் சேதத்தை குறைக்க முடியும்.

இவ்வாறு ரமணன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the 'Rain Man' Ramanan Exclusive interview to OneIndia Tamil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற