For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்கள் ஓட்டுகளை பெற இரட்டை வேடம் போடுகிறார் ராஜபக்சே: கருணாநிதி குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

சென்னை: அதிபர் தேர்தலில் தமிழர் ஓட்டுக்களைப் பெற ராஜபக்சே இரட்டை வேடம் போடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ராஜபக்சே இத்தேர்தல் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக இலங்கை முழுவதும் அவர் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்கும் ராஜபக்சே புதிய வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.

Rajapaksa plays double game : Karunanidhi

இது தேர்தலில் ஓட்டுக்களைப் பெற ராஜபக்சே போடும் இரட்டை வேடம் எனத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகின்ற ஜனவரித் திங்கள் 8ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஆறு ஆண்டு பதவிக் காலம் முடிவடையாத நிலையில், தேர்தல் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற யூகங்கள் ஒரு சில மாதங்களாக வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதியன்று ராஜபக்சே, அதிபர் பதவிக்கான தேர்தல் பிரகடனத்தை வெளியிட்டார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் மற்றும் தேர்தல் நடைபெறும் நாள் ஆகியவையும் அறிவிக்கப்பட்டது.

இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற அரசியல் சட்டத்தில், 2010ஆம் ஆண்டு திருத்தமும் செய்யப்பட்டது. இந்த தேர்தலில் 19 பேர் மனு செய்திருந்த போதிலும், இரண்டு பேர் மட்டுமே பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறீசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரிகாவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இவருடைய சின்னம் "அன்னப்பறவை", ராஜபக்சே "வெற்றிலை" சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மோடி வாழ்த்து :

இலங்கையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டியதற்கு மாறாக, ராஜபக்சே வெற்றி பெற வேண்டுமென்று நம்முடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.

இந்தத் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறீசேனா, கடந்த மாதம் வரை ராஜபக்சே அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு ராஜபக்சேவின் அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களை ராஜபக்சே விலக்கிவிட்டார்.

மேலும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்து வந்த ரிஷத் பதியுதீன், அவருடைய அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான அமீர் அலி ஆகியோரும் சிறீசேனாவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம்.

இரட்டை வேடம் :

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் தங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்ற எண்ணத்தில் உள்ளார்கள். தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சே ஒரு சில புதிய வாக்குறுதிகளை வழங்க முன் வந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கொன்றுக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று ராஜபக்சே தங்களது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். போரின் போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால், அது குறித்த வெளிப்படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்படும் என்று ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமிழர் பகுதிகளில் பிரச்சாரம் செய்யும் போது ராஜபக்சே கடந்த காலத் தவறுகளை மறந்து விடுங்கள் என்று கூறிய போதிலும், அவர் தமிழ் அமைப்புகளிடம் ஓட்டுக் கூட்டணி வைக்க முன் வரவில்லை. போட்டியிடும் இரண்டு பேருமே, சிறுபான்மையான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாமல் போய்விடுமோ என்று எண்ணுகிறார்கள். வட கிழக்கில் தமிழர்களை மீண்டும் குடியேற்ற உதவி செய்வது போன்ற எந்தவொரு முடிவையும் இரு தரப்பினரும் அறிவிக்க முன் வரவில்லை.

இதே ராஜபக்சே கடந்த காலத்தில் எல்.எல்.ஆர்.சி., அறிக்கையின் பரிந்துரைகளையும், 13வது சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்றி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்றார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று நானும், டெசோ இயக்கமும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். இது குறித்து என்னுடைய கடிதத்தை நியூயார்க் நகரிலே உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் கழகப் பொருளாளர் ஸ்டாலினும், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவும் நேரடியாகச் சென்று வழங்கினார்கள்.

தொடர்ந்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். ஆனால் ராஜபக்சே அதற்கெல்லாம் இணங்காமல், சர்வதேச விசாரணை என்ற ஒன்றே தேவையில்லை என்று அப்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால் அதற்கெல்லாம் மாறாக தற்போது தேர்தல் என்றதும், தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதற்காக கடந்த கால போர்க் குற்றத் தவறுகளுக்கு விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதிலிருந்து, அவர் எப்படிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகிறார் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போல ராஜபக்சே தற்போது தன்னையே மாற்றிக் கொண்டு இரட்டை வேடம் போடுகிறார் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK president Karunanidhi has accused that the Srilankan president Rajapaksa is playing double game to get Tamil people's vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X