வளைந்து கொடுக்காத உதயசந்திரன் உள்ளிட்ட கல்வி துறை செயலாளர்களை மாற்றக் கூடாது... ராமதாஸ் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்விச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்ய திட்டமிட்டிருக்கும் தமிழக அரசின் செயல் கண்டனதுக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வி துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற நாள் முதல் அத்துறை சிறப்பாக இயங்கி வருவதாக அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். புதிய பாடத்திட்டம், பொதுத் தேர்வில் கிரேடு முறை மாற்றம், பிளஸ் 2 தேர்வை 1200 மதிப்பெண்களை குறைத்து 600-ஆக மாற்றியது உள்பட பெற்றோரே பாராட்டும் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார் ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்.

தற்போது உதயசந்திரன் மற்றும் உயர் கல்வித் துறை செயலாளராக இருக்கும் சுனில் பாலிவாலையும் இடமாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 ராமதாஸ் அறிக்கை:

ராமதாஸ் அறிக்கை:

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த ஊழல் பாதையில் வெற்றி நடை போடும் பினாமி ஆட்சியில் மறந்தும் கூட நல்லது எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான் கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் பினாமி அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 உதயசந்திரனின் சிறப்பான பணிகள்

உதயசந்திரனின் சிறப்பான பணிகள்

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழலின் உறைவிடமாக திகழ்ந்த பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக உதயசந்திரன் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டதற்கு பிறகு தான் அத்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. பொதுத்தேர்வுகளில் தரவரிசையை ஒழித்தது, 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது, பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான குழுக்களை அமைத்தது உள்ளிட்ட உதயசந்திரனின் சிறப்பான பணிகளை மக்கள் அறிவார்கள். பினாமி ஆட்சியாளர்களின் ஊழல்களை கடுமையாக விமர்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி கூட, உதயசந்திரன் வழிகாட்டுதலில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதை பல நேரங்களில் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 5 மாதங்கள்தான் ஆகிறது

5 மாதங்கள்தான் ஆகிறது

உதயசந்திரன் பொறுப்பேற்று சரியாக 5 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உதயச்சந்திரன் ஒத்துழைக்கவில்லை என்பது தான். தமிழ்நாட்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் அண்மையில் தரம் உயர்த்தப்பட்டன.

 பணியிட மாறுதல்

பணியிட மாறுதல்

இதையடுத்து ஏற்கெனவே காலியாக இருந்த இடங்களையும் சேர்த்து 2950 ஆசிரியர் பணியிடங்களை இடமாறுதல் மூலம் நிரப்பட வேண்டிய சூழல் உருவானது. பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான அரசாணை கடந்த மாதம் 18-ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த சில நாட்களில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்களின் உதவியுடன் முதற்கட்டமாக 700-க்கும் கூடுதலான அதிகாரிகள் நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரியும், மாறுதலை ரத்து செய்யக் கோரியும் கடந்த 24&ஆம் தேதி பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 அனுமதி அளிக்கவில்லை

அனுமதி அளிக்கவில்லை

அதன்பின்னர் அடுத்தக்கட்ட இடமாறுதல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அனுமதி அளிக்கவில்லை. நிர்வாக இடமாறுதல் வழங்கப்பட்ட 700 பேரிடமும் தலா 5 லட்சம் வீதம் ரூ.35 கோடி லஞ்சம் பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேலும் பல நூறு ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கி மீண்டும் ஒரு வசூல் வேட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

 உதயசந்திரனை மாற்ற திட்டம்

உதயசந்திரனை மாற்ற திட்டம்

இதையடுத்து உதயசந்திரன் வளைந்து கொடுக்க மறுப்பதால் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியவில்லை என்று பினாமி முதல்வரிடம் செங்கோட்டையன் முறையிட்டதாகவும், அதையேற்று உதயச்சந்திரனை இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ramadoss condemns TN Government for transfer proposal of Education Secretary Udayachandran.
Please Wait while comments are loading...