For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசின் வருவாயை குறைத்து, கடனை பெருக்கியது தான் அதிமுக அரசின் பெரிய சாதனை: ராமதாஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பக்கத்துக்குப் பக்கம் அம்மாவின் புகழுரைகளை சேர்த்து நிதிநிலை அறிக்கையையே அம்மா புகழுரை அறிக்கையாக மாற்றி இரண்டரை மணி நேரம் படித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், கள நிலவரம் பாராட்டும்படி இல்லை, வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Ramadoss makes fun of minister O.P.S.

தமிழக சட்டப்பேரவையில் 2016-17 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். இடைக்கால நிதி நிலை அறிக்கை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புமில்லை...ஏமாற்றமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் நிதி நிலை 5 ஆண்டுகளில் மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.

மக்களை ஏமாற்றுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக நிதி நிலை அறிக்கையை ஜெயலலிதா அரசு கடைபிடித்து வருகிறது. அவினாசி மற்றும் அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவினாசி பகுதி மக்கள் 9 ஆவது நாளாக சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டிருக்கின்றனர். அவர்களை ஏமாற்றும் வகையில் அவினாசி மற்றும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டப்பணிகள் தொடங்கும் என்று அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். கடந்த தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவினாசி மற்றும் அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்போது ஆட்சியிலிருந்து வெளியேறும் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதாக கூறுவது வெற்று அறிவிப்பாகவே இருக்கும்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்ற போதிலும், மக்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட்டிருக்கலாம். ஆனால், அத்தகைய அறிவிப்பு வெளியாகாதது வருத்தமளிக்கிறது.

அறிவிப்பதற்கு புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும், அம்மா புராணங்களுக்கு எந்த குறையும் இல்லை. வழக்கமாக இடைக்கால நிதி நிலை அறிக்கைகள் மிகவும் சுருக்கமாக இருக்கும். ஆனால், பக்கத்துக்குப் பக்கம் அம்மாவின் புகழுரைகளை சேர்த்து நிதிநிலை அறிக்கையையே அம்மா புகழுரை அறிக்கையாக மாற்றி இரண்டரை மணி நேரம் படித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், கள நிலவரம் பாராட்டும்படி இல்லை, வேறு விதமாக இருக்கிறது என்பது தான் உண்மை.

2015-16 ஆம் ஆண்டில் அனைத்து துறை வருவாயும் பெருமளவு குறைந்துள்ளது. வணிக வரி, முத்திரைத் தாள் தீர்வை, பத்திரப்பதிவு ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவாக வசூல் ஆகியுள்ளன. கடந்த நிதியாண்டிலும் இந்த வருவாய் இலக்கை விட குறைவாகவே இருந்தது. கடந்த 2 ஆண்டுகளிலும் கலால் வரி வருவாய் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. மது விற்பதைத் தவிர வேறு எதற்கும் அதிமுக அரசு லாயக்கில்லை என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அதேநேரத்தில் தமிழக அரசின் கடன் சுமை மட்டும் பெருமளவில் அதிகரித்திருத்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அரசு பதவியேற்கும் போது தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் ஒரு லட்சத்து ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த பட்ஜெட் மதிப்பீட்டின்படி வரும் ஆண்டில் மாநில அரசின் கடன் இரண்டரை லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அரசின் வருவாயை குறைத்து, கடனை பெருக்கியது தான் அதிமுக அரசின் பெரிய சாதனையாகும்.

சொந்த நலனுக்காக மாநில நலனை அடகு வைத்து கடனாளி மாநிலம் ஆக்கிய ஜெயலலிதாவை மீண்டும் ஒருமுறை முதலமைச்சராக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் ஊழல் மற்றும் கடன் சுமைக்கு காரணமான கட்சியை வீழ்த்தி தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு சிறந்த திட்டங்களை வகுத்திருக்கும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி மாற்றம், முன்னேற்றம் காண மக்கள் தயாராகிவிட்டனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadoss said in a statement that, TN finance minister Panneerselvam has made use of interim budget to praise Amma.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X