For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர் பதவி தேவையா?- போட்டுத் தாக்கும் டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: மாநில அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் புகார் பட்டியல் கொடுத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அப்படி இருக்கையில், அப்படி ஒரு பதவி தேவையா என்று பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுனர் பதவி தேவையா என்பது குறித்து பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

States are really need governor?….Asks PMK

டெல்லி மோதலால் மக்கள் பாதிப்பு

டெல்லி மாநில நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது தொடர்பாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் ஆகியோருக்கிடையே நடந்து வரும் மோதலால் உண்மையாக பாதிக்கப்பட்டிருப்போர் டெல்லி மக்கள்தான்.

முடங்கிய டெல்லி நிர்வாகம்

டெல்லி துணை நிலை ஆளுனருக்கு ஆதரவாக செயல்பட்ட சில அதிகாரிகளை முதல்வர் இடமாற்றம் செய்வதும், அதை ஆளுனர் ரத்து செய்வதும் தொடர்கதையாகி விட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது.

காரணம் அதிகாரப் போட்டியே !

இவ்வளவுப் பிரச்சினைக்கும் காரணம் தில்லி முதலமைச்சருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டி தான்.

ஆளுநரின் கடமை

புதிய தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக டெல்லி அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை செயல்படுத்துவது தான் துணைநிலை ஆளுனரின் கடமையாகும். அவ்வாறு இருக்கும்போது டெல்லி ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுத்து தற்காலிக தலைமைச் செயலாளரை நியமித்தது மிகப்பெரிய தவறு ஆகும்.

குழந்தை சண்டையை விட மோசம்

இவ்விஷயத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் சற்று அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் தேவையில்லாத மோதல்களைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், இருவருமே பக்குவமின்றி நடந்ததால் இது குழந்தைகள் சண்டையைவிட மோசமாகிவிட்டது.

அரசியலமைப்பு சட்டத்திலேயே இல்லையே !

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் தில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுனர் தன்னிச்சையாக செயல்படலாம் என்று கூறப்படவில்லை. அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

மோதலை ரசிக்கிறது மத்திய அரசு

இப்பிரச்சினை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இம்மோதலை மத்திய அரசு ரசிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

ஆளுநரிடம் அதிகாரம் ஆபத்தே !

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் அதிகாரங்கள் இருக்க வேண்டும். அதை விடுத்து மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும்.

புதுச்சேரியிலும் இதே கதை தான்

தமிழகத்திற்கு அருகிலுள்ள புதுச்சேரியில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுனர் வீரேந்திர கட்டாரியா, சிலரின் கைப்பாவையாக செயல்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை முடக்கினார்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆளுநர்கள்

ஆங்கிலேயர் ஆட்சியில் மாநில அரசை கண்காணிப்பதற்காகவே ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். அடிமை ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகும் அதே நடைமுறை தொடர வேண்டுமா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

கண்காணிப்பதற்காகவா ஆளுநர்கள்?

ஒருவேளை மாநில அரசு தவறு செய்யாமல் கண்காணிப்பதற்காகத் தான் ஆளுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டால் அதுவும் எடுபடாது. ஆளுனர்கள் உண்மையான கண்காணிப்பாளர்களாக செயல்பட்டால் எந்த மாநிலத்திலும் ஊழலோ, முறைகேடுகளோ நடந்திருக்க முடியாது.

முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுநர்கள்

பெரும்பாலான ஆளுனர்களே ஊழல் உள்ளிட்ட அனைத்து விதமான முறைகேடுகளிலும் ஈடுபட்ட வரலாறு உள்ளது. ஆளுனர்கள் வேந்தர்களாக இருக்கும் பல்கலைக் கழகங்களில் தான் பணியாளர் நியமனம் தொடங்கி துணை வேந்தர் நியமனம் வரை பெருமளவில் ஊழல் நடைபெறுகிறது.

புகார் மீது நடவடிக்கை இல்லையே !

மாநில அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் புகார் பட்டியல் கொடுத்தால், அவற்றை கோப்பில் சேர்ப்பதைத் தவிர, அதன்மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனும் போது இப்படி ஒரு பதவி தேவையா? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆளுநர் பதவி தேவையா?

எனவே, ஆளுநர் பதவி தேவையா? என்பது குறித்து பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். இதை உணர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has asked the need of Governor posts in states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X