For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ போட்டியிடாதது அவரது அரசியல் வாழ்வுக்கு எதிரான பின்னடைவு: தமிழருவி மணியன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் களத்தில் நின்று வைகோ வெற்றி வாகை சூட வேண்டும் அவர் போட்டியிடாதது அவரது அரசியல் வாழ்வுக்கு எதிரான மிகப்பெரிய பின்னடைவு என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வைகோவின் மிகப்பெரிய பலம் அவருடைய போர்க்குணமும் கடுமையான உழைப்பும் ஆகும். அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படுவது மிக மோசமான பலவீனம் ஆகும். ஆறு மாதங்கள் விளைநிலத்தில் கடுமையாக உழைத்து வியர்வை சிந்திய விவசாயி அறுவடை நேரத்தில் அயலூர் சென்று தங்கி விடுவது போன்று, ஆண்டுக்கணக்கில் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து மிகக் கடுமையாகப் போராடும் வைகோ தேர்தல் நேரத்தில் தேவையற்ற உணர்வுக்கு ஆட்பட்டு தனக்கும், தன்னால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது.

Tamilaruvi Manian statement issued about vaiko

2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை அவர் புறக்கணித்தது மிகப் பெரிய அரசியல் பிழையாகும். நேற்று கோவில்பட்டியில் வேட்பாளராக நிற்கப் போவது இல்லை என்று அவர் அறிவித்திருப்பது அவருடைய அரசியல் வாழ்வுக்கு எதிரான மிகப்பெரிய பின்னடைவு. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அங்கீகரித்ததும், மக்கள் நலக்கூட்டணியை ‘கேப்டன் விஜயகாந்த் அணி'என்று அவசர வேகத்தில் அறிவித்ததும், தன் உயர்ந்த இயல்புக்கு மாறாக கருணாநிதியை கீழிரங்கி விமர்சனம் செய்ததும் இது வரை வைகோ தன் அரிய உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாக்கி வைத்திருந்த உயர்ந்த பிம்பத்தை ஓரளவு சிதைத்து விட்டது. கோவில்பட்டி தேர்தல் களத்திலிருந்து அவர் விலகி நிற்பதால் சிதைந்த பிம்பம் சீர்படப் போவதில்லை.

வைகோ தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விடக் கூடாது என்பதில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்கும் ஒத்த கருத்து உண்டு. வைகோவை வீழ்த்துவதற்கு இதுவரை அவர்கள் முயன்றனர். ஆனால் இப்போது தன்னுடைய வீழ்ச்சிக்குத் தானே வழிவகுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் தொடர்ந்து வைகோ ஈடுபடுகிறார் என்பது தான் வருத்தத்திற்குரிய கசப்பான உண்மை.

சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக தேர்தல் களத்தில் இருந்து விலகுவது என்றால், ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு சூழ்ச்சிகளை எதிர்நோக்கும் வேட்பாளர்கள் ஒருவர் கூட களத்தில் நிற்க முடியாது என்பது தானே உண்மை.

வைகோ தன்னுடைய முடிவை மறுவாசிப்பு செய்து ஆட்சியாளர்களின் பஜனை மடமாக விளங்கும் சட்டமன்றத்தை அரிய கருத்துக்களின் ஆய்வு அரங்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவாவது தேர்தல் களத்தில் நின்று வெற்றி வாகை சூட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் விரும்புகின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Gandhiya Makkal Katchi leader Tamilaruvi Manian statement issued about MdMk chief vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X