ஆலோசனை கூட்டம் நடந்தபோதே மாற்றப்பட்ட கோவை கமிஷனர்.. ஆளுநர்-தமிழக அரசு நடுவே வெடித்த பனிப்போர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக அரசுக்கு இடையே பனிப்போர் வெடித்துள்ளது.

கோவையில் காவல்துறை கமிஷனர் அமல் ராஜுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய சில நிமிடங்களிலேயே அமல்ராஜ் திருச்சி போலீஸ் கமிஷனராக அரசால், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பனிப்போர் வெடித்ததை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

கோவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் ஆலோசனை

ஆளுநர் ஆலோசனை

இதையடுத்து பாஜக உட்பட அரசியல் கட்சி பிரமுகர்களுடனும் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். ஆளுநர் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கையில் ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல்வருக்கு கேள்வி

முதல்வருக்கு கேள்வி

நிர்வாக ரீதியிலான ஆலோசனை கூட்டங்களை அரசு துறையினரே மேற்கொள்ளும் சூழ்நிலையில், முதல் முறையாக அந்த மரபை உடைத்து ஆளுநர் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துள்ளதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசிப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆலோசனை நடந்தபோதே

ஆலோசனை நடந்தபோதே

இந்த நிலையில், ஆளுநருடன் அமல்ராஜ் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த நிமிடங்களிலேயே, அவருக்கான டிரான்ஸ்பர் ஆர்டரை டைப் செய்துவிட்டது தமிழக அரசு. அவர் திருச்சி மாநகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் கமிஷனர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன என்று ஆளுநர் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அந்த கமிஷனர் வேறு நகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஆளுநரின் ஆலோசனைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது என்பதே இதன் பொருள்.

பதிலடி கொடுத்ததா அரசு?

பதிலடி கொடுத்ததா அரசு?

ஆளுநருக்கு இப்படி நேரடியாக பதிலடி கொடுத்துள்ளது தமிழக அரசு. இது யதேர்ச்சையாக நடந்தது கிடையாது. ஏனெனில் ஆளுநர், கோவை கமிஷனருடன் ஆலோசனை நடத்த உள்ளது சில நாட்கள் முன்பே அரசுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது ஆளுநர் ஆலோசனை நடத்திய அதே தினத்தில், ஏறத்தாழ அதே நிமிடங்களில் பணியிடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த மாளிகையை முன்பு போராட்டம் நடத்த காவல்துறை சிறிது நேரம் அனுமதித்ததும் கவனிக்கத்தக்கது.

முதல்வரின் விருப்பம்

முதல்வரின் விருப்பம்

புதுச்சேரியை போல தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதை முதல்வர் எடப்பாடி தரப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடு இது. தங்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரம் இருக்க கூடாது என்பதே முதல்வர் மற்றும் துணை முதல்வர் எண்ணமாக இருக்க கூடும் என்று தெரிகிறது. இதற்கு ஆளுநர் அசைவாரா, அல்லது, தமிழக அரசுக்கு அழுத்தம் வருமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Cold War erupted between Tamil Nadu Governor Panwarilal Purohit and Tamil Nadu Government as gvt transfered Coimbatore police commissioner.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற