ஆளுநரின் உரை கவைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய்... வைகோ காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநரின் உரை வழக்கமான சடங்கு போல இருந்ததாகவும், அவை கவைக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காய் என்பது தெளிவாகி இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார்.

2018ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடந்தது. இதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்து உரையாற்றினார். சபை துவங்கியதுமே ஆளுநரின் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில், சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை கவைக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காயாக இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

 விஷன் 2023 திட்டம் என்ன ஆனது ?

விஷன் 2023 திட்டம் என்ன ஆனது ?

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரை வழக்கமான சடங்குபோல உள்ளதே தவிர, வேறொன்றும் புதிய அறிவிப்புகள் இல்லை. தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அறிவித்த தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ன ஆயிற்று? என்ற விளக்கம் இல்லை. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை ஆளுநர் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழக அரசின் கடன் ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் கோடி என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

 வெற்று அறிவிப்புகள் மட்டுமே...

வெற்று அறிவிப்புகள் மட்டுமே...

ஜி.எஸ்.டி. நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டு நிதி மற்ற மாநிலங்களைவிட குறைந்திருப்பது பற்றி ஆளுநர் உரையில் குறிப்பிடாதது ஏன்? 2011 ஆம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்களின் நிலைப்பற்றி வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தால் உண்மை நிலை தெளிவாகி இருக்கும். அதே வெற்று அறிவிப்புகள்தான் இப்போதும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது.

 விவசாயிகள் பிரச்னை

விவசாயிகள் பிரச்னை

காவிரிப் பாசனப் பகுதிகளை நாசமாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது அதிமுக அரசின் கையறு நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது.

கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை, விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக்கூடிய விலை இல்லாமை குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

 பாதிக்கப்படும் விவசாயிகள்

பாதிக்கப்படும் விவசாயிகள்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4000 ஆகவும் தீர்மானிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வருவதை அதிமுக அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.2000 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர எந்த உத்தரவாதமும் ஆளுநர் உரையில் இல்லை.

 முரணான தகவல்கள்

முரணான தகவல்கள்

ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை கடலோர காவல்படை டிசம்பர் 29 ஆம் தேதி நிறுத்திவிட்டதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். ஆனால், ஆளுநர் உரையில், மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடப்பதாகக் கூறப்பட்டு இருப்பது முரணாக இருக்கிறது. காணாமல் போன மீனவர்கள் குறித்து முழுமையான விபரங்கள் அளிக்கப்படாததும் ஏமாற்றம் தருகிறது.

 மணல் குவாரிகள் மூட உத்தரவு

மணல் குவாரிகள் மூட உத்தரவு

நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்தும், மத்திய அரசு ஒப்புதல் வழங்காதது பற்றியும் ஏன் குறிப்பிடவில்லை? படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுத்த முன்வராதது ஏன்? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசு மணல் குவாரிகளை மூட வேண்டும், வெளிநாட்டு மணல் இறக்குமதி, செயற்கை மணல் உற்பதிக்கு அனுமதி தர வேண்டும் என்று உத்தரவிட்டதை தமிழக அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஆளுநர் உரையில் பதில் இல்லை.

 ஏட்டுச் சுரைக்காய்

ஏட்டுச் சுரைக்காய்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும் ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாதது அதிமுக அரசின் அதிகார ஆணவத்தைக் குறிக்கிறது.

மத்திய அரசிடம் மாநில உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடகு வைத்து வரும் அதிமுக அரசு தயாரித்து, ஆளுநர் சட்டமன்றத்தில் படித்த உரை கவைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய் மட்டுமே என்பது தெள்ளத் தெளிவாகிறது. இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There is nothins new in Governor speech says Vaiko. MDMK Party General Secretary Vaiko slams that the governor speech does not even consider people Problems.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற