காவிரி நீரை போராடிப் பெற நீர் மேலாண்மை அமைச்சகத்தை தமிழகம் உருவாக்க வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர் மேலாண்மைக்கென தனி அமைச்சகத்தைத் தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி நீரைச் சேமிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ள நேரிட்டதற்காக திராவிடக் கட்சி ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கேள்வி

உச்சநீதிமன்றத்தின் கேள்வி

காவிரி நீர் சேமிப்பு குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள வினாக்கள் அர்த்தமுள்ளவை. மேட்டூர் அணையில் கூடுதல் நீரை ஏன் சேமித்து வைக்கக்கூடாது? காவிரியின் குறுக்கே கூடுதலாக அணை கட்டாதது ஏன்? என்பன போன்ற உச்சநீதிமன்றத்தின் வினாக்கள் தமிழகத்தின் பூகோள அமைப்பு குறித்த புரிதல் இல்லாததால் எழுப்பப்பட்டவை. அதேநேரத்தில் காவிரியில் வரும் நீரைச் சேமித்து, வறட்சிக் காலங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீர் மேலாண்மை செய்யாதது ஏன்? என்பன உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வினாக்கள் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

தடுப்பணை

தடுப்பணை

தமிழ்நாட்டைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் நீர் மேலாண்மை குறித்த புரிதல் சற்றும் இல்லை என்பது தான் உண்மை. காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க காவிரி ஆற்றிலும், கொள்ளிடம் உள்ளிட்ட அதன் கிளை ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்ட வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை மேலும் உரக்க வலியுறுத்தி வருகிறோம். அதையேற்று தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு வறட்சி என்ற வார்த்தையே பொருள் புரியாத புதிராக மாறியிருந்திருக்கும்.

கடலில் வீணாகக் கலக்கும் நீர்

கடலில் வீணாகக் கலக்கும் நீர்

பல நேரங்களில் கர்நாடகத்திடமிருந்து 5 டி.எம்.சி, 10 டி.எம்.சி நீருக்காகத் தமிழகம் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியிருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் 900 டி.எம்.சி. தண்ணீரை நாம் வீணாகக் கடலில் கலக்க விட்டிருக்கிறோம். குறைந்த எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்டியிருந்தால் கூட ஆண்டுக்குச் சராசரியாக 90 டி.எம்.சி தண்ணீரைச் சேமித்திருக்க முடியும். அதன் மூலம் வறட்சிக்காலங்களில் கூட நீர்நிலைகளில் உள்ள நீரைக் கொண்டும், நிலத்தடி நீரைக் கொண்டும் சாகுபடி செய்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்ய ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

தனி அமைச்சகம்

தனி அமைச்சகம்

எனவே, தமிழகத்திற்குக் கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடிப் பெறுவதற்கும், அவ்வாறு பெற்ற நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் வசதியாகத் தமிழகத்தில் நீர் மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதற்காகத் தலைசிறந்த நீரியல் வல்லுனர் ஒருவரை ஆலோசகராக நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu need separate ministry for Cauvery management, said PMK founder Ramadoss.
Please Wait while comments are loading...