சென்னை கட்டட விபத்தில் விருதுநகர் என்ஜீனியரும் பலி
சென்னை: சென்னையில் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த என்ஜீனியர் முகம்மது அசன் என்பவரும் பலியாகியுள்ளார்.
அவரது உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று அசனின் உடல் மீட்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சி 17-வது வார்டு பர்மா காலனியைச் சேர்ந்தவர் முகமதுயாசின். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன்தான் முகமது அசன் (28). மவுலிவாக்கத்தில் இவர் பணியாற்றிய இரு அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று சனிக்கிழமை இரவு திடீரென இடிந்து தரைமட்டமானது.

இதில், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார் அசன். இதனால் அவரது கதி குறித்து குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கினர். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கவலையுடன் சென்னைக்கு வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் முகமது அசன் சடலத்தை மீட்புக் குழுவினர் மீட்டனர். அதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. இவரது உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் உடல் அடக்கத்தை சென்னையிலையே மேற்கொள்ள குடும்பத்தார் முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று முகம்மது அசன், கீழ்தளத்தில் தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.