• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணீர் வரலாம் ஜாக்கிரதை.. சிங்கப்பூர் போன ஜானுவிற்கு ராம் கடிதம் எழுதினால் இப்படித்தான் இருக்கும்!

|
  உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ

  சென்னை: சில திரைப்படங்கள் எப்போடா முடியும் என ரசிகர்களை யோசிக்க வைப்பவை, சில படங்கள் ரசிக்கத் தக்கவை, சில திரைப்படங்கள் மட்டுமே குறிஞ்சி பூத்தாற்போல வந்து கொண்டாட வைப்பவை. இதில் 96 மூன்றாவது வகை.

  96 திரைப்படத்தில் ஜானு சிங்கப்பூருக்கு கிளம்பி செல்லும்போது கலங்காத கண்களே இல்லை. பிளைட் லேட்டுன்னாவது அறிவிப்பு வந்துவிடாதா என்று ஆண்டவனை வேண்டிக்கொண்டிருந்த ரசிகர்களை கூட தியேட்டரில் பார்க்க முடிந்தது.

  ஆனால், இவ்வளவுதானா காதல்? உருகி உருகி காதலித்தவள் எண்ணங்களை அசைபோட அந்த ஒருநாள் மட்டும் போதுமா? இப்போது குறுக்கே ஒரு கேள்வி வரும். என்ன இருந்தாலும் இப்போ ஜானு இன்னொருவர் மனைவியல்லவா, அத்தோடு ராம் அவளை மறந்துவிட வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் திரைப்படத்தை ஆழ்ந்து கவனித்தால் ஒரு விஷயம் தெரியும். ராம், கொண்டாடியது சிங்கப்பூர் ஜானுவை அல்ல, கடந்த கால இருள் அடர் மனக்கூட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளித் தோழி ஜானகிதேவியை. அவளை ஏன் பிரிய நேரிட்டது என்பதை பற்றியும் அந்த காதலை பற்றியுமே அசை போட்டனரே தவிர, அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு வார்த்தை கூட ராம் கேட்கவில்லை. அங்குதான் நிற்கிறது திருமண பந்தத்தின் மீதான கண்ணியம்.

  எனவே, இப்போது சிங்கப்பூர் சென்ற ஜானுவிற்கு, ராம் ஒரு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும். அதில் எதையெல்லாம் அவன் அசைபோட்டு மகிழ்வான். மகிழ்விப்பான். ஒரு கற்பனை கடிதத்தை ராமின் மனநிலையை ஒட்டிய நெகிழ்ச்சியோடு வரைந்துள்ளார் எழுத்தாளர், முஹம்மது யூசுப். இதோ அவர் முகநூலில் பதிவிட்ட கடிதத்தை நீங்களும் பாருங்கள்.

  ஜானுவிற்கு கடிதம்

  ஜானுவிற்கு கடிதம்

  ஊரு போய் சேர்ந்திருப்பன்னு நினைக்கிறேன் ஜானு, உன்னைப் பார்த்து பயப்படக்கூடாதுன்னு பயந்துகிட்டே உன் பிறந்த நாள் அன்னைக்கு சாக்லேட் டப்பாவோட நின்னுகிட்டிருந்த உன் எதிர்த்தாப்புல வந்த அதே ராமசந்திரன் தான் இன்னமும் மாறாம கடிதம் எழுதக் கூடாது என்று நினைச்சுக்கிட்டே உனக்கு கடிதம் எழுதுறேன். "ஒரு நாள் ராத்திரி முழுக்க நாம சுத்தினத அவன்ட்ட சொன்னதும் "ஏன்டா இன்னும் பைத்தியக்காரன் மாதிரி திரியிறன்னு முரளி திட்டுனான், படிக்கிறப்போ, சொந்தக்காரங்களே "கருவாபயன்னு " பட்டப்பேரு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. அப்போல்லாம் எனக்கே என்னப் பிடிக்காது. என்னை ஒருத்திக்கு பிடிச்சிருக்குன்னு மொத மொத தெரிஞ்சத, தெரியப்படுத்தினத என்னால மறக்கமுடியலன்னு சொன்னேன். இப்படியே இருக்காத, மாறு, மாறுன்னு எல்லாரும் என்னப் பார்த்து சொல்லுறாங்க, ஆனா எப்படி மாறன்னு யாருக்கும் சொல்லத் தெரியல.

  குர்தா போதும்

  குர்தா போதும்

  தஞ்சாவூருல இருக்கிறப்போ நெல்லு வித்த காசுன்னு ஆறு மாசத்துல ஏதாவது ஒரு நாள் தான் மணியார்டர் வரும் வீட்டுக்கு. அதுவும் கொஞ்ச காசு தான் ஆனாலும் எப்போ ரோட்டுல பார்த்தாலும் போஸ்ட்மேன் அண்ணனைப் பார்த்து விஷ் பண்ணுவேன். அது மாதிரி தான் 22 வருச வாழ்க்கைய எப்படி ஒரு நாள கொண்டு திருப்தி பட்டுகிட்டேனோ அது மாதிரி இன்னொரு 22 வருசத்தில ஒரே ஒரு நாள் மட்டும் உன்ன பார்த்திட்டு அப்படியே காலத்தை கடத்திரலாம்ன்னு இருக்கேன். அதுவரைக்கும் நீ விட்டுட்டுப் போன மஞ்சள் குர்தாவுல இருக்கிற வாடையே போதும் ஜானு எனக்கு. வீட்டுல நைட்டு, சும்மா தான் அவ பக்கத்துல கீழ படுத்துக்கிடந்தியான்னு மனசுக்குள்ள சிலரு கேக்குறது அவுங்க முகத்துலேயே தெரியுது ஜானு.

  தாடி வளருது

  தாடி வளருது

  ஒரு நாள் நான் மௌனராகம் படம் பார்த்திட்டு வெளிய வந்தப்போ ஒரு ஆளு " இவன் என்னடா தொடாதன்னு சொல்லுற பொண்டாட்டிக்கு இவ்வளவு மாரடிக்கிறான். டெல்லில தான இருக்கான் யார்கிட்டயாவது போனா முடிஞ்சி போச்சின்னு பேசிக்கிட்டே போனான். பொண்டாட்டிகூட சில பேருக்கு சாப்பாடு மாதிரி தான். சலிச்சு போச்சுன்னா இல்ல காலி ஆயிருச்சுன்னா அடுத்த கடைன்னு போக முடியும். ஆனா என்னால முடியல. அதனால தான் நீ என்னைக்கோ தலையில வச்ச பூவ இன்னும் டிரங்க் பெட்டியில பத்திரமா வைச்சிருக்கேன். திரும்பவும் தாடி வளர ஆரம்பிச்சிருச்சு, அந்த ரெண்டு நாள் தாடில அழகா இருதீங்கன்னு என்னோட ஸ்டூடன்ஸ் எல்லாரும் சொன்னாங்க. நீ பக்கதுல்ல வந்தாலே என்னையும் அறியாம நான் அழகா மாறிடுறேன் ஜானு.

  சிரிப்பு போதும்

  சிரிப்பு போதும்

  அன்னைக்கு ரீயூனியன்ல நைட் நீ தொட்டு நான் மயங்கி விழுந்தேன்ல அதுல இருந்து ஏர்போர்ட்ல நீ என் கண்ணை மூடி அழுதது வரை ஒவ்வொன்னா அடிக்கடி நினைச்சு பாக்கிறேன். நான் ஹோட்டல்ல வச்சி, மொத மொத சேலை கட்டி வந்ததை பாத்ததும் அப்படியே தூக்கிட்டுப் போய் கோயில்ல வச்சி தாலி கட்டனும்ன்னு சைகையில செஞ்சு காட்டினதும் சிரிச்சிக்கிட்டே இன்னொரு தடவ செய்ன்னு சொன்ன பார்த்தியா அந்த சிரிப்பு போதும் ஒவ்வொரு ராத்திரியையும் சமாளிக்க. கல்யாண மண்டபத்துல தனியா ஓரமா நின்னிருந்தேன் ஜானு, அப்போல்லாம் ரொம்ப வருத்தத்துல தான் இருந்தேன். ஆனா நீயும் என்னத் தேடுனன்னு சொன்னத கேட்டதும் மனசு அப்படியே குளிந்திருச்சு

  தள்ளி நின்னேன்

  தள்ளி நின்னேன்

  அந்த பையன அடிச்சி போலிஸ் கேஸ் ஆயிருச்சுன்னு சொன்னதும் நீ என்ன பாத்த பாத்தியா அதுலே அன்னைக்கு போலிஸ்ட வாங்கின அடியோட வலி எல்லாம் காணாம போயிருச்சு. ஒரு வேலக்காரன் மாதிரி கார் டிரைவர் மாதிரி பக்கத்துல சேர்ந்து போறேன் காதலிக்கிறவன் மாதிரி இல்லன்னு சிலபேரு நினைக்கிறாங்க. நான் ஆளு கருப்பா இருக்கிறதுனால உள்வாய் நல்லா வெளியே பிங்க் கலர்ல தெரியும். சில நேரம் சதீஷே " காக்கா வாயன்னு " படிக்கிறப்போ கேலி செஞ்சிருக்கான். அவன் சொன்ன அப்புறம் தான் காக்காவையே பாத்தேன். அதுக்கும் உள் வாய் பிங்க் கலர்ல தான் இருக்கும். எனக்கெல்லாம் இப்படி ஒருத்தி அமஞ்சா நான் இப்படி தான நடக்க முடியும் சொல்லு ஜானு. முன்ன விட இப்போ இன்னும் அழகா நல்லா கலரா இருக்க ஜானு. அதான் தள்ளியே நின்னேன்.

  ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

  ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

  எவ்வளவு நாளா அந்த பாட்டுக்காக காத்திருந்தேன் தெரியுமா, இருட்டுல நீ திடீர்ன்னு பாட ஆரம்பிச்சதும் தட்டுத்தடுமாறி லைட்ட கையில எடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. "ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ, பாவம் ராதா ன்னு " தன்ன மறந்து நீ பாடுறதைக் கேட்டு ரொம்ப கஷ்டப்படுத்திட்டமோன்னு தோணிச்சு. உனக்கு அன்னைக்கு காய்ச்சல் வந்து நான் நாலு நாள் உன் வீட்டத் தேடி அலைஞ்சு ஸ்கூலுக்கு வந்ததும் எல்லாரும் விசாரிச்சி முடிச்ச அப்புறம் நீ திரும்பி பார்த்தியே அதெல்லாம் நடந்திருக்கக் கூடாதோன்னு தோணிச்சி. வசந்தி அன்னைக்கு " ராமசந்திரன்னு ஒருத்தன் உன்னத் தேடி வந்திருக்கான்னு " பேரைச் சொல்லி இருந்தான் நாம பிரிஞ்சிருக்க மாட்டோம். கடன்னு வீட்டை விக்காம இருந்திருந்தாலும் நாம பிரிஞ்சிருக்க மாட்டோம். ஆனா நாம தான் ஒரு நாள் முழுக்க சேர்ந்து சமச்சி சாப்பிட்டு கத பேசி, ஊர் சுத்தி என்னோட கட்டில்ல நீ தூங்கி, என்னோட சட்டய போட்டு, எனக்கு பிடிச்ச பாட்டுப் பாடி, எனக்கு இது போதும்னு நினைக்கிறேன் ஜானு. அடிக்கடி பனியன மாத்துறப்போ " ஆம்பள நாட்டுக்கட்டன்னு " சொன்னத நினச்சு சிரிச்சுக்குவேன்.

  உன்ன எங்க இறக்கி விட்டேனோ அங்கேயேதான்

  உன்ன எங்க இறக்கி விட்டேனோ அங்கேயேதான்

  எங்க பாட்டி நல்லதங்காள் மாதிரியான ஒரு கதை சொல்லும். அந்த கதையைத் தான் அந்த காலத்துல அந்தமான் காதலின்னு படமா எடுத்ததாவும் சொல்லுச்சு. 35 வருசம் விட்டுப் போன புருசன நினைச்சிட்டே வாழந்த ஒரு பொம்பளையோட கதை. பொம்பள தான் வாழனுமா அப்படி ஒரு சேஞ்சுக்கு நான் வாழந்து பாக்கிறேனே. " நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்னு "உன்ன எங்க இறக்கி விட்டேனோ அங்கேயே தான் நிக்கிறேன் ஜானுன்னு சொன்னதும் வெளியே வேகமா ஓடியே வந்தியே படபடப்போட, அதே வேகத்துல என்ன அடிச்சியே பொது இடம்ன்னு பாக்காம " இவருக்கு வேற வேல இல்ல, பொறுங்க வாரேன்னு " சொல்லுற 40 வருசம் சேர்ந்து வாழந்த பொண்டாட்டி புருசங்களை விட பெருசு ஜானு அது எனக்கு. "தேவையற்ற ஒன்று தன்னிடம் உள்ளதன் வலியையும், தேவையான ஒன்று தன்னிடம் இல்லாததன் வலியையும் மனிதனால் மட்டுமே உணர முடியும் " அப்படின்னு தான் லைலா மஜ்னு கதை ஆரம்பம் ஆகும் ஜானு. நாமளும் அப்படித்தான. விட்டா எழுதிட்டே இருப்பேன். அவ்வளவு இருக்கு அந்த ஒரு நாளைக்குள்ள. இந்த கடித்துக்கு பதில் எழுதாத. வலி தான் ஆனாலும் காத்திருப்பேன் ஜானு, அடுத்த 22 வருசம் கழிச்சி பூக்கப்போற குறிஞ்சிப் பூக்காக அழனும் போல இருக்கு ஜானு", நினைவுகளோடு அதே ராமச்சந்திரன்.

  மேலும் 96 the movie செய்திகள்View All

   
   
   
  English summary
  What will say the 96 Ram to Janaki Devi if he writes a letter to her? You can find a imaginery letter here.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more