For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எது நடந்ததோ அது...

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

மோடியை நான் பாராட்டினதில் பலருக்கு வருத்தம். அதற்கு ஒன்றும் செய்வதற்கில்லை.

அவர் செய்கிற அல்லது செய்ய தவறுகிற பல விஷயங்கள் பிடிக்கவில்லை. விமர்சிக்கிறேன். அதற்காக அவர் எது செய்தாலும் குற்றம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது.

Whatever happened was...

நேற்று மோடி எடுத்தது நல்ல நடவடிக்கை. துணிச்சலானது. இதில் என்ன துணிச்சல் வேண்டி கிடக்கிறது; அவர்தானே பிரதமர் என்று கேட்கலாம்.

கருப்பு பணம் வைத்திருக்கிறவர்கள் ஆதரவு கட்சிகளுக்கு ஆக்சிஜன் மாதிரி. அவர்கள் இல்லையேல் இவர்கள் இல்லை. அதிலும் குறிப்பாக ஆளும் கட்சி.
மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தொடங்கி, பில் ரசீது எதுவுமே இல்லாமல் ரொக்கத்தில் பிசினஸ் நடத்தும் தெரு முனை வியாபாரிகள் வரை கொடுக்கிற கருப்பு பணத்தில்தான் ஆளும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன. அன்பளிப்பு, நன்கொடை என்ற பெயரில் இந்த கட்சிகளுக்கு கிடைக்கும் தொகை மயக்கம் போட வைக்கும்.

எந்த கட்சியும் யோக்கியம் இல்லை. உண்டியல் குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட. கருப்பு பணத்தை நாங்கள் தொடுவதில்லை என்று எந்த கட்சி சொன்னாலும் அது கடைந்தெடுத்த பொய். நம்பாதீர்கள்.

ஆளும் கட்சிக்கு நிதி திரட்டும் பொறுப்பு நிதி அமைச்சரை சார்ந்தது. ஆகவே அருண் ஜேட்லி இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வாய்ப்பு உண்டு. பிளாக் மனி பில்லினர்களில் பெரும்பாலோர் நமது பக்கம் நிற்கிறார்கள்; ஆகவே அதிரடியாக 500, 1000 செல்லாது என அறிவித்தால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்கள் அவர்களாகத்தான் இருக்கும் என்று ஜேட்லி ஒரு வாதத்தை முன்வைத்திருக்க கூடும்.

இந்த ஒரு நிகழ்வை வைத்து ஜேட்லி ஊழல் பேர்வழி என்று முத்திரை குத்திவிட முடியாது. நிதி மந்திரி பொறுப்பில் இருக்கிற எவரும் எல்லோரிடமும் நேர்மையாக நடந்து கொள்ளவே முடியாது. இதுதான் இந்தியாவின் எதார்த்தம்.

ஆனால் மோடி வித்தியாசமான ஆள். ஜேட்லி அளவுக்கு, சிதம்பரம் அளவுக்கு பொருளாதாரம் படித்தவர் அல்ல மோடி. அனுசரித்து போவது, சமரசங்கள் செய்து கொள்வது, வெற்றி என்ற இலக்கை அடைய எந்த வழியை வேண்டுமானாலும் தயக்கமின்றி தேர்ந்தெடுப்பது போன்ற உபாயங்கள் அவருக்கு கொஞ்சம் அந்நியமானவை. தலைநகர் டெல்லிக்கென்றே இருக்கும் சில பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ளாமலே ஆமதாபாதில் இருந்து நேரடியாக பிரதமர் இல்லத்துக்கு குடி பெயர்ந்தவர் அவர்.

எனவேதான் இந்திய கோடீஸ்வரர்களின் பாக்கெட் பொம்மை என்று தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை மோடியால் ஜீரணிக்க இயலாது. ஊடகங்கள் அவரைப் பற்றி வரையும் சித்திரங்களை அப்படியே நம்பும் முட்டாள் அல்ல மோடி. நான் ஒன்றும் பணக்காரர்களின் கைப்பாவை அல்ல என்று ராகுல் காந்தி போன்ற விமர்சகர்களுக்கும் அதற்கு அப்பால் நிற்கும் சாமானிய இந்தியர்களுக்கும் சேதி சொல்ல விரும்பினார் அவர்.

அந்த விருப்பம் அல்லது ஏக்கத்தின் எதிரொலிதான் நேற்றைய தடாலடி அறிவிப்பு. அவருக்கு நெருக்கமான தொழிலதிபர்களாக அறியப்படுபவர்களும் பிரபலமான வர்த்தகர்களும் அந்த அறிவிப்பால் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பது உண்மை. கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் சிலர் இதை ஊர்ஜிதம் செய்கிறார்கள்.

அதே சமயம், மோடியின் இந்த ஒற்றை அறிவிப்பு இந்த நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளிச்சத்துக்கு இழுத்து வந்துவிடும் என்று பேசுவதும் அபத்தம். மொத்த கருப்பு பணத்தையும் வெளியே கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக நடக்காது. கரன்சி நோட்டு மூலமான வரவு செலவு கணிசமான அளவில் குறையும் வரையில் கருப்பு பணம் உற்பத்தி ஆவதை தடுக்க இயலாது.

500, 1000 செல்லாது என்ற அறிவிப்பு கருப்பு பண ஒழிப்பு யுத்தத்தின் முதல் கட்டம் என்று சொல்லலாம். ஆனால் உறுதியான கட்டம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். எனினும் இது சரியான திசையில் செல்கிறோம் என்று நம்பிக்கை தரும் நடவடிக்கை.

மோடி இதில் ஜெயிப்பாரா, உடன் இருக்கும் சக்திகளே அவரை ஜெயிக்க விடுமா, யுத்தம் முடிவுக்கு வர எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் தாறுமாறாக அச்சடித்து இங்கே புழக்கத்தில் விடும் கள்ள பணத்தையும் ஒழிப்பது அரசின் நோக்கம் என்பது உங்களுக்கு தெரியும்.

மற்ற எல்லா வகையிலும் சட்டத்தை மதித்து நடக்கும் பலதரப்பட்ட நடுத்தட்டு மக்களில் எத்தனை பேர் 500 1000 ரூபாய் நோட்டுகளை அவரவர் சக்திக்கு ஏற்ப பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா?

அவர்களின் பார்வையில் அது சேமிப்பு. சட்டத்தின் பார்வையில் ஏய்ப்பு. பதுக்கல்.
மொத்தம் 15 லட்சம் கோடி இவ்வாறு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளாக புழக்கத்துக்கு விடப்பட்டன.

ஊரை அடித்து உலையில் போடும் கோடீஸ்வரர்கள் வீடுகளில்தான் இந்த நோட்டுகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக நினைத்தால், நீங்கள் ரொம்பவும் நல்லவர்.

பால் ஆறிவிட போகிறது, எடுத்து குடியுங்கள்!

English summary
Veteran Journalist Kathir's article on PM Modi's recent order to abolish Rs 500, 1000 notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X