ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: காரணம் தமிழக அரசு?
சென்னை: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுதான் வலியுறுத்தியதாக புதுவை அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கரச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் திடீரென ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது.

ஆளுநர் டிஸ்மிஸ்
இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார் என்ற காரணத்துக்காகவே கட்டாரியா டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழக அரசுதான் காரணம்
இந்நிலையில் ஜெயேந்திரர் விடுதலைக்கு எதிராக தமிழக அரசுதான் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியது என்று புதுவை அரசின் சட்டத்துறை செயலாளர் ராகேஷ் சந்திரா கூறியுள்ளார்.

புதுவை அரசு விளக்கம்
இது தொடர்பாக நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்:
இது தமிழகத்தின் வழக்கு. இதை நாங்கள் நடத்துகிறோம். வழக்கின் செலவெல்லாம் தமிழக அரசினுடையது. எனவே வழக்கு பற்றிய கருத்தறிவிக்கும் உரிமை தமிழக அரசுக்கும் உண்டு.

குளறுபடி தீர்ப்பு
அந்த வகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வந்தபோதே, இந்தத் தீர்ப்பில் குளறுபடிகள் அதிகம் இருப்பதாகத் தெரிவதால், மேல்முறையீட்டுக்குச் செல்லவேண்டும் என்றது தமிழக அரசு. இதை தமிழக சட்டத்துறை மூலம், சட்ட ரீதியாகவும் வலியுறுத்தியது.

இரு மாநில விவகாரம்
எனவே இது குறித்து நாங்கள் லீகலாக ஆலோசித்தோம். 90 நாள் கடந்த நிலையில் அப்பீலுக்குப் போகமுடியுமா? என்று ஆலோசித்து, இது இரு மாநில விவகாரம் என்பதால் போகலாம் என்கிற முடிவிற்கு வந்தோம்.

ஆளுநர் உத்தரவு
இதைத் தொடர்ந்து, முறைப்படி புதுவை ஆளுநர் மூலம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ராகேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.