For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைத்து மாவட்ட கோர்ட்டுகளிலும் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு எழுத மதுரை ஹைகோர்ட் உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

Write judgements in tamil alone: Madurai HC orders district courts
மதுரை: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு எழுத வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் தவிர ஆங்கில மொழியிலும் தீர்ப்பை எழுதலாம் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கடந்த 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்தார். இந்த சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியும் அது ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழிக்கு எதிரானது அதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் சோலை சுப்பிரமணியன் மற்றும் ரத்தினம் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அவர்களின் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எம். வேலுமணி மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவவது,

தமிழகத்தில் 1956-ம் ஆண்டு ஆட்சி மொழி சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியானது. ஆனால் நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1976-ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாவட்ட நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் தான் நடக்க வேண்டும். தீர்ப்புகள் தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்பது தான் அந்த திருத்தம் ஆகும்.

இந்த சட்டத்திருத்தம், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே, அந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ரெங்கா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்பு, தமிழை தாய் மொழியாக கொண்டிராத மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு எடுத்த முடிவின் படி உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில், தமிழ் தெரியாத நீதிபதிகளுக்கு தமிழில் தீர்ப்புகளை எழுத குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு நிரந்தரமான ஒன்றாக உள்ளது. இந்த உத்தரவு, தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள் தமிழகத்தில் பணியாற்றும் போது தமிழ்நாடு சார் நிலை பணியாளர் பொது விதிகள்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் மொழி தேர்வில் குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்ச்சி பெற வேண்டும். தமிழை தாய்மொழியாக கொண்டிராத நீதிபதிகள், இந்த விதிப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை அடுத்து இனி அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழில் மட்டுமே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madurai high court has ordered the district courts in TN to write judgements in tamil alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X