மின்வேலியில் சிக்கி சிறுத்தை பலி.. ஒருவழியாக தேனி வனத்துறை முன்பு ஆஜரானார் எம்பி ரவீந்திரநாத்
தேனி: தேனியில் மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினரின் விசாரணைக்கு எம்பி ரவீந்திரநாத் ஆஜரானார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா கைலாசப்பட்டி கிராமத்தின் அருகே சொர்க்கம்கேம்பை பகுதியில் ஓபிஎஸ் மகனும் தேனி மாவட்ட எம்பியுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தின் அருகேயே வனப்பகுதி உள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் அவ்வப்போது ஏற்படுவதாகவும் தெரிகிறது.
6 பேருக்கும் இன்று விடுதலை இல்லை? மேலும் தாமதம் ஆகுமா? சிறை அதிகாரி சொன்ன தகவல்!

பாதுகாப்பு காரணங்கள்
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓபிஎஸ் மகனுக்கு சொந்தமான தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அந்த தோட்டத்தில் ஒரு சிறுத்தை இறந்து கிடந்தது. இந்த சிறுத்தை ஏற்கெனவே அந்த தோட்டத்தின் அருகே சுற்றியதும் அதை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டதாகவும் தெரிகிறது.

மின்வேலியில் சிக்கிய சிறுத்தை
இந்த நிலையில் அந்த சிறுத்தை மீண்டும் அந்த தோட்டத்திற்கு வந்த நிலையில்தான் மின் வேலியில் சிக்கி பலியாகியிருக்கிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள அலெக்ஸ் பாண்டியன், தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுத்தை இறந்த விவகாரம்
இந்த நிலையில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆட்டுக்கிடை அமைத்த நபர் மீது மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதா என கேள்வி எழுந்தது. மேலும் எம்பி சொல்லாமல் மின்வேலி எப்படி அமைக்கப்பட்டிருக்கும். எனவே ஓபிஎஸ் மகன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
இது தொடர்பாக விவசாயிகள் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் எம்பி ரவீந்திரநாத்திடம் விசாரிக்க அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு தேனி மாவட்ட வனத்துறை கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து சிறுத்தை இறந்து கிடந்த தோட்டம் தேனி எம்பி ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கும் சொந்தமானது என கூறி மூவருக்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது.

2வாரத்திற்குள் விசாரணை
2 வாரத்திற்குள் தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அவர் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எம்பி சார்பில் அவருடைய வழக்கறிஞர்கள் தேனி வனத்துறையினரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தனர்.

எம்பி ரவீந்திரநாத் ஆஜர்
அதில் 7ஆவது இந்திய குடிநீர் வாரம் கூட்டம் டெல்லியில் நடைபெறுவதால் அதில் பங்கேற்க எம்பி ரவீந்திரநாத் சென்றுள்ளார். அதனால் அவரால் ஆஜராகமுடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே விசாரணையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேனி மாவட்ட வனத்துறை முன்பு இன்றைய தினம் எம்பி ரவீந்திரநாத் ஆஜராகியுள்ளார்.