ஒருவழியாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரை அறிவித்தது திமுக.. போட்டிபோட்ட 2 பேருக்கும் கல்தா! எப்படி?
தென்காசி : தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக சிட்டிங் மா.செ செல்லதுரையும், எம்.பி தனுஷ் குமாரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த சூழலில் ராஜாவை தேர்வு செய்துள்ளது திமுக தலைமை.
இதற்காகவே, தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்த கடையநல்லூர் தொகுதியை தெற்கிலும், மற்றும் தெற்கு மாவட்டத்தில் இருந்த சங்கரன்கோவில் தொகுதியை வடக்கு மாவட்டத்திலும் சேர்த்து திமுக தலைமை அறிவித்தது.
தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செல்லத்துரை தற்போது தெற்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலம்பல்..திறமையில்லை..திமுக எப்போதுமே அதிமுகவிற்கு பகையாளிதான்..போட்டு தாக்கும் ஜெயக்குமார்

71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள்
திமுகவின் 72 கழக மாவட்டங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் கடந்த செப்டம்பர் மாதமே வெளியிடப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்த செல்லதுரைக்கு பதிலாக, திமுக எம்.பியான தனுஷ் குமாருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி தர உள்ளதாக தகவல் பரவியதால், செல்லத்துரையின் ஆதரவாளர்கள் சென்னை அறிவாலயத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

நிறுத்தி வைப்பு
இதற்கிடையே தென்காசி வடக்கு மாவட்ட துணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஜய அமுதா என்பவர் திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் தென்காசி வடக்கு நிர்வாகிகள் அறிவிப்பை நிறுத்தி வைத்தது திமுக தலைமை. இதையடுத்து, மாவட்ட செயலாளர் நியமனம் குறித்து தலைமையில் ஆலோசனை நடைபெற்று வந்தது. இதையடுத்து, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மாவட்டங்களில் சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய நகர கழகங்கள் சீரமைக்கப்பட்டன.

வடக்கு மா.செவாக ராஜா
இந்நிலையில், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காகவே முன்னதாக, தென்காசி தெற்கில் இடம்பெற்றிருந்த சங்கரன்கோவில் தொகுதி வடக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக கடையநல்லூர் தொகுதி, தென்காசி தெற்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக பொ. சிவபத்மநாதன் இருக்கிறார்.

செல்லதுரைக்கு கல்தா
தென்காசி வடக்கில் மாவட்ட செயலாளராக இருந்த மா.செல்லத்துரை தற்போது தென்காசி தெற்கில், தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மாவட்ட துணை செயலாளர் பதவி தொடர்பாக கோர்ட் படியேறிய விஜய அமுதாவுக்கு பதிலாக புனிதா என்பவர் மாவட்ட துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்காசி எம்.பி தனுஷ் குமாருக்கு தென்காசி மாவட்டத்தில் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.

தலைமை கணக்கு
கட்சிக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தியதன் காரணமாக தலைமை, தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பொறுப்பு அமைச்சரையும், தென் மாவட்டத்தின் முக்கிய எம்.பியையும் இந்தப் பிரச்சனையை டீல் செய்யுமாறு திமுக தலைவர் அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.