புரட்டாசி கடைசி சனிக்கிழமை..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..தேவஸ்தானம் வேண்டுகோள்!
திருப்பதி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பூலோக வைகுண்டம் என வர்ணிக்கப்படும் திருப்பதி உலக அளவில் மிகப் பிரசித்திப் பெற்றது. இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் தினசரியும் பக்தர்கள் கூட்டம் அலைமோத காரணங்கள் உள்ளன.
புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு வருகின்றனர்.

ஏழுமலையான் அவதாரம்
தசாவதாரங்கள் எடுத்த பின்பும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார். சேஷாத்திரி, நீலாத்திரி,கருடாத்திரி,அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு திருநாமம் உள்ளது.

ஏழுமலையான் நகைகள்
காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி ஏழுமலையானை காண கண் கோடி வேண்டும். 1933ஆம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தொடங்கப்பட்டது. கோயிலில் மூலவருக்கு தினந்தோறும் 120 வகையான ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 383 வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுகிறது. ஏழுமலையானின் தங்க பீதாம்பரம் மட்டும் 40 கிலோ எடை கொண்டதாகும். ஏழுமலையானின் ஆபரணங்களில் குறிப்பிடத்தக்க ஆபரணம் 500 கிராம் எடைகொண்ட பச்சை மரகத கல்லாகும். இதனை மதிப்பீடு செய்ய இயலவில்லை. இந்த பச்சைக்கல் மரகதத்தை விசேஷ நாட்களில் அலங்காரம் செய்ய பயன்படுத்துகின்றனர். சுவாமிக்கு உண்டியல் மூலம் தினமும் சராசரியாக 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.

வாழ்வில் திருப்பம் நிச்சயம்
வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலமாகும். தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது. அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

பக்தர்கள் கூட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தொடர் விடுமுறையால் ஏழுமலையான் கோயிலில் கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

புரட்டாசி கடைசி சனிக்கிழமை
அதிலும் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் இலவச தரிசனத்தில் 30 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் 4 மணி நேரமும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை 72216 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த நிலையில், ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 65 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications