மருந்து சீட்டில் டாக்டர்கள் கையெழுத்து புரியலயா.. இனி நோ பிராபளம்.. கூகுள் கொண்டு வரும் செம அப்டேட்
வாஷிங்டன்: மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் புரியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். இதற்கான ஒரு சூப்பர் அப்டேட்டை கொண்டு வரப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது.
உடல் நிலை சரியில்லை என்று டாக்டர்களை நாம் அணுகினால், நமது உடல் நிலையை பரிசோதிக்கும் டாக்டர் மருந்து சீட்டுக்களை எழுதி தருவார். இந்த மருந்து சீட்டை பார்த்தாலே மீண்டும் தலைசுற்றல் வந்து விடும் அளவுக்கு அவரது கையெழுத்து இருக்கும்.
அனைத்து மருத்துவர்களையும் இப்படி சொல்லிவிட முடியாது என்றாலும் பெரும்பாலான மருத்துவர்கள் மருந்து பரிந்துரை சீட்டுகளில் இப்படித்தான் எழுதிக்கொடுப்பதை நாம் கண்கூடாக பார்க்கப்படுகிறது.

மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டு
இத்தனைக்கும் மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதி உள்ளது. அதாவது நோயாளிகள் தங்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக மருத்துவர்கள் எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் விதியாக இருக்கிறது. ஆனால், இதனை பெரும்பாலான மருத்துவர்கள் மதிப்பதில்லை. மெடிக்கல்களில் நிற்கும் ஊழியர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இப்போது வரை பலரும் எழுதிக்கொடுத்து வருகின்றனர்.

"கூகுள் ஃபார் இந்தியா"
இதனால், தங்களுக்கு என்ன மாதிரியான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை நோயாளியால் மருந்துகளை கையில் வாங்கும் வரையில் அறிந்து கொள்ள முடியாது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண கூகுள் ஒரு சூப்பர் ஐடியாவுடன் களம் இறங்கியுள்ளது. அதாவது, மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டுக்களை படிக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. "கூகுள் ஃபார் இந்தியா" நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு முறையில்..
இந்த நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) முறையில் இந்த தொழில்நுட்பம் செயல்படும் என்றும் மருந்து சீட்டுக்களை ஸ்கேன் செய்து மருந்துகளின் பெயர்களை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தொழில்நுட்பம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற விவரம் வெளியாகவில்லை. தற்போது டெவலப்மண்ட் ஸ்டேஜில் மட்டுமே இருப்பதாகவும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிகளிலும் வரும்
இதுபோக மல்டிசெர்ச் எனப்படும் இமேஜ் மற்றும் டெக்ஸ்ட்களை ஒரே நேரத்தில் உள்ளீட்டு தேடும் வகையில் புதிய அம்சங்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்த பயனாளர்கள் கூகுள் செயலி வாயிலாக கேமராவை ஆன் செய்து படம் எடுக்க வேண்டும் அல்லது ஸ்க்ரீன் ஷாட் செய்யலாம். டெக்ஸ்ட் ஆகவும் பதிவிடலாம். தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இந்த வசதி இந்தியாவில் கிடைக்கிறது. விரைவில் பிராந்திய மொழிகளிலும் வரும் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications