தீராத நோய் தீர்க்கும் கார்த்திகை அமாவாசை..ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்.. புனித நீராடிய பக்தர்கள்
சென்னை: கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு இன்று புனித நீர்நிலைகளில் நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அக்னி தீர்த்தக்கடலில் நீராடிய பக்தர்கள் 24 புனித தீர்த்தக்கரைகளில் நீராடியதோடு நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.
தீராத பிணிகள் தீர்க்கும் கார்த்திகை அமாவாசை இன்று காலை 6.35 மணிக்கு துவங்கியுள்ளது. அமாவாசை திதியில் சில விஷயங்களை செய்தால் தீராத பிணிகளும் தீரும். மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியவை சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசை நாளில் அன்னதானம் செய்வது நல்லது. காக்கைக்கு சோறு வைக்க வேண்டும், பசு மாட்டிற்கு வாழைப்பழம்,அகத்திக்கீரை என தானம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

செய்வினை கோளாறுகள் நீங்கும்
முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். நாளை அதிகாலை வரை அமாவாசை திதி இருப்பதால் இன்று மாலை வரை காகத்திற்கும், பசுவிற்கும் உணவு தரலாம். பசித்திருக்கும் ஒருவருக்காகவது இரவுக்குள் உணவு வாங்கி கொடுப்பது நல்லது.

பேச்சில் நிதானம்
அமாவாசை நாளில் பொதுவாகவே பலருக்கும் கோபம் அதிகரிக்கும். எண்ண ஓட்டங்களில் வேகம் இருக்கும். அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வதோடு பேச்சில் அமைதியும் நிதானமும் தேவை. கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

தர்ப்பணம் அளித்து வழிபாடு
அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீர் நிலைகளில் நீராடி இறந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. புனித தலமான ராமேஸ்வரம் கோவிலில் நேற்று முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்
கார்த்திகை அமாவாசையான இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்பன் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications