‘ஆபாச’ சாட்.. காதலனை வீட்டுக்கு வரவழைத்தது எப்படி? கிரீஷ்மாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் ‘ஷாக்’
ஷாரோனுக்கு விஷம் கலந்து கொடுத்த அன்று கிரீஷ்மா அவரை எப்படி வீட்டுக்கு வரவழைத்தார் என்பது பற்றி குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : பணக்கார இளைஞரை திருமணம் செய்வதற்காகவே தனது காதலனான ஷாரோன் ராஜை கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாஜ நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று கிரீஷ்மா ஷாரோன் இடையேயான ஆபாச வாட்ஸ்-அப் சாட் விவரத்தையும் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளனர்.
கல்லூரி மாணவரை, அவரது காதலியே ஜூஸில் மாத்திரை மற்றும் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த இந்தக் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்தச் சம்பவத்தில் காதலனைக் கொன்ற கிரீஷ்மா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது போலீசார், கிரீஷ்மாவுக்கு எதிரான குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சாவில் மர்மம்
கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி உயிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக ஷாரோன் ராஜின் தந்தை ஜெயராமன், பாறசாலை போலீசில் புகார் கொடுத்தார். ஷாரோன்ராஜ், ராமவர்மன்சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்ததாகவும், அவரது வீட்டுக்குச் சென்று வந்த பிறகு தான் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் ஷாரோனின் தந்தை தெரிவித்தார்.

அதிர்ச்சி தகவல்கள்
பாறசாலை போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. போலீசார் நடத்திய விசாரணையில் கிரீஷ்மா, குளிர்பானத்திலும், கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்ததில் தான் ஷாரோன்ராஜ் இறந்தது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ஷாரோனின் காதலி கிரீஷ்மா, அவருக்கு உடந்தையாக தடயங்களை அழித்ததாக அவரது தாயார் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவும், காதலன் ஷாரோனை கொலை செய்தததை ஒப்புக்கொண்டார்.

கழற்றிவிட திட்டம்
கிரீஷ்மாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் முடித்துள்ளனர். ஷாரோனை கழற்றிவிட்டால், அவரால் தனக்கு சிக்கல் ஏற்படும், உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் கசியவிடக்கூடும் என நினைத்த கிரீஷ்மா, அவரிடம் இருந்து நைஸாக விலக முடிவு செய்துள்ளார். தனது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார், இரண்டாவது தாரமே தங்கும் எனச் சொல்கிறார்கள், உன்னை இழக்க விரும்பவில்லை இப்போது நான் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என சோகமாகப் பேசியுள்ளார். ஆனால், ஜாதகம் எல்லாம் உண்மை இல்லை என ஷாரோன் சமாதானம் செய்ததால், அவரை கழற்றிவிட என்ன வழி எனத் தெரியாமல் யோசித்து, அதன்பிறகே, அவரை கொல்லும் முடிவுக்கு வந்துள்ளார்.

3 மாதங்களாக
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷாரோன் ராஜை கொலை செய்ய கிரீஷ்மா 2 மாதங்களாக திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது மாத்திரையை கலந்து கொடுத்ததும் தெரியவந்தது. காதலன் ஷாரோன்ராஜை யாருக்கும் சந்தேகம் வராமல் கொல்வது எப்படி என கிரீஷ்மா கூகுளில் தேடியதும் கிரீஷ்மா அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று நெய்யாற்றின்கரை செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச் சம்பவம் நடந்து 85 நாட்களில் கிரீஷ்மாவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப் பத்திரிகையில் 57 ஆவணங்களும், 142 சாட்சிகளின் வாக்குமூலங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், கிரீஷ்மாவின் போனில் இருந்த வாட்ஸ்-அப் தகவல்களும் ஆதாரமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆபாச சாட்
போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், 'கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த இளைஞர் மிகவும் பணக்காரர். இதனால் ஷாரோன் ராஜை தவிர்ப்பதற்காகவே அவருக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து உள்ளார். அதற்கு முன்பே ஜூஸ் சேலஞ்ச் என்ற பெயரில் ஜூசில் பாராசிட்டமால் கலந்து கொடுத்துள்ளார். சம்பவத்தன்று ஷாரோன் ராஜுடன் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் சாட் செய்து தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்' என்றும் கூறப்பட்டுள்ளது.

90 நாட்களுக்குள்
கிரீஷ்மாவிற்கு எதிராக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தீர்ப்பு வரும் வரை கிரீஷ்மாவிற்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஷாரோன் ராஜ் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல்குமார் ஆகியோரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தீவிரமடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications