சபரிமலை ஐயப்பன் எப்போதும் எங்களுக்கு துணை புரிவார்.. மாஸ் வெற்றி நிச்சயம்.. சொல்வது பினராயி விஜயன்!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள் என்று வாக்களித்த பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர்.

மெட்ரோ மேன் ஸ்ரீதரன், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் வாக்களித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசிய பினராயி விஜயன் கூறியதாவது:- சபரிமலை ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் மக்களை பாதுகாத்து வந்தோம். இந்தத் தேர்தலில் மக்களின் பலம் நிரூபிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் நடந்தது போல தற்போதும் எங்கள் மீதான அனைத்து போலி குற்றச்சாட்டுகளும் மக்களால் நிராகரிக்கப்படும். மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள். வரலாற்று ரீதியான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்'' என்று பினராயி விஜயன் கூறினார்.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. பெண்களை சபரிமலை கோயிலுக்குள் நுழைய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு சபரிமலை பக்தர்களை கேரள அரசு கையாண்ட விதம் சர்ச்சையானது. பெண்களை தடுத்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். தற்போது பினராயி விஜயன் ஐயப்பன் துணை என்று கூறி இருப்பதற்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.