For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், கா. வேழவேந்தனுக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு

By Staff
Google Oneindia Tamil News

Silamboli and Vezhaventhan
தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், கா. வேழவேந்தனுக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு

சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் நினைவு இலக்கியப் பரிசு தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், கா. வேழவேந்தன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

சி.பா. ஆதித்தனார் நினைவாக, ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளையொட்டி ரூ. இரண்டரை லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது. மூத்த தமிழறிஞருக்கு ரூ.ஒன்றரை லட்சமும், சிறந்த இலக்கிய நூலுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பரிசு பெறுவோர் விவரங்களை தினத்தந்தி இயக்குனர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அறிவித்துள்ளார்.

மூத்த தமிழறிஞர் விருது சிலம்பொலி செல்லப்பனுக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.

2009ம் ஆண்டுக்கான "சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்'' விருது பெறும் சிலம்பொலி செல்லப்பன், தமிழுக்கு அருந்தொண்டாற்றி வருபவர். தமிழ்நாட்டில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர்.

24-9-1928-ல், நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தில் பிறந்தவர். பெற்றோர்: சுப்பராய கவுண்டர்- பழனியம்மாள்.

பள்ளிக்கணித ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர், தஞ்சைப் பல்கலைக்கழக பதிவாளர், பதிப்புத்துறை இயக்குனர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குனராக சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றினார்.

இவர் எழுதிய சிலம்பொலி, இலக்கியச் சிந்தனைகள், பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளும் சீறா, பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர், வளரும் தமிழ் ஆகிய நூல்கள் புகழ் பெற்றவை.

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு ஆகியவற்றையொட்டி வெளியிடப்பட்ட மலர்கள், இவர் கைவண்ணத்தில் உருவானவை.

1,000க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் அணிந்துரை எழுதியுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், மொரீசியஸ் முதலான நாடுகளில் இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

இவருடைய பல புத்தகங்கள் பல்கலைக்கழகங்களிலும் பள்ளிகளிலும் பாட நூல்களாக இடம்பெற்றுள்ளன.

இவருக்கு சிலம்பொலி என்ற பட்டத்தை, 1954-ல் சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை வழங்கினார். மற்றும் நூலறி புலவர், தமிழ் நலக்காவலர், சிந்தனை செல்வர், குறள் நெறிக் காவலர் முதலான பட்டங்கள் பெற்றவர்.

தமிழக அரசின் கலை மாமணி விருது, பாவேந்தர் விருது, ராஜா சர் முத்தையா செட்டியார் விருது, கம்பன் கழகத்தின் தமிழ்ச்சான்றோர் விருது உள்பட பல விருதுகளை பெற்றவர் செல்லப்பனார்.

கா.வேழவேந்தன்:

அதே போல இந்த ஆண்டுக்கான இலக்கியப் பரிசை கவிஞர் கா.வேழவேந்தன் பெறுகிறார். "அனல் மூச்சு'' என்ற இவரது கவிதை நூலுக்கு, "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு'' (ரூ.1 லட்சம்) வழங்கப்படுகிறது.

மரபுக் கவிதைகளும், இலக்கியக் கட்டுரைகளும், கதைகளும் எழுதியுள்ள வேழவேந்தன், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள காரணி என்ற சிற்றூரில் 5-5-1938-ல் பிறந்தவர். பெற்றோர்: கா.சின்னசாமி- ராசம்மாள்.

பி.ஏ, பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞரான வேழவேந்தன், இளம் வயதிலேயே பத்திரிகைகளில் கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர்.

இவர் மாணவராக இருந்தபோதே எழுதிய கவிதைகள், "வேழவேந்தன் கவிதைகள்'' என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றபோது அதை பேரறிஞர் அண்ணா வெளியிட்டு பாராட்டினார்.

பாவேந்தர் பாரதிதாசன் வழியை பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கவிதைகளையும், சமுதாய சீர்திருத்த கவிதைகளையும் எழுதினார்.

கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். கருணாநிதியின் அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தவர்.

"வண்ணத்தோகை'' என்ற கவிதை நூலுக்காக தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு பெற்றவர். தமிழக அரசின் "பாவேந்தர்'' விருது பெற்றவர். ஏராளமான கவியரங்குகளுக்கு தலைமை தாங்கி, கவிதைகள் பாடி புகழ் பெற்றவர்.

நாளை மாலை சி.பா.ஆதித்தனாரின் 105வது பிறந்த நாள் இலக்கியப் பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெறுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.கற்பககுமாரவேல் விழாவுக்கு தலைமை தாங்கி, விருது மற்றும் இலக்கியப் பரிசுகளை வழங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X