For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது அரசியல் கலந்த தமிழ் மாநாடு!- கனடா படைப்பாளிகள்

Google Oneindia Tamil News

டோரன்டோ: தமிழோடு அரசியலைக் கலக்கக் கூடாது என்பது சமயத்துக்கு ஏற்ற வாதம். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு சார்பாக நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசு, அரசுப் பணத்தில் நடத்தும் அரசியல் கலந்த தமிழ் மாநாடுதான் என்று கனடா படைப்பாளிகள் கழகம் கூறியுள்ளது.

இதுகுறித்து எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதிய கட்டுரைக்குப் பதிலளித்து கனடா படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

நீங்கள் ஜூனியர் விகடனில் வெளிவந்த பேராசிரியர் சிவத்தம்பியின் பேட்டி தொடர்பாக ஆராய்ச்சி மாநாடுகளைக் குழப்புவதே ஒவ்வொரு முறையும் பேரா. சிவத்தம்பி | போன்றோரின் செயல் என எழுதிய மடலைப் படிக்க நேர்ந்தது.

1974ஆம் ஆண்டு நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அன்றைய ஆளும் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் எடுபிடிகளாக இருந்த சிவத்தம்பி, கயிலாசபதி, இந்திரபாலா போன்றோர் அரசியல் காரணங்களுக்காக எதிர்த்தது உண்மையே. அதில் கருத்து வேறுபாடில்லை. பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் அவப்பெயரையும் போக்கவே நாவலரைப் பெரிய தேசியவாதியாக- அநாகரீக தர்மபாலரது அளவுக்கு உயர்த்தி அவருக்கு யாழ்ப்பாணத்தில் விழா எடுத்து சிலையும் வைத்தனர்.

அன்றைய யாழ்ப்பாண மாநகரசபையின் ஆளும் சுதந்திரக் கட்சி சார்பு மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பா தமிழாராய்ச்சி மாநாட்டுக்குத் திறந்த வெளியரங்கைக் கொடுக்க மறுத்து 9 உயிர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த பாவத்துக்குக் கழுவாய் தேடுமுகமாகவும் முகத்தில் பூசப்பட்ட கரியைக் கழுவவும் அவற்றை முன்னின்று செய்தார்.

1974க்குப் பின் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. செஞ்சட்டைக்காரர்கள் செந்தமிழர்களாக மாறினார்கள். அதற்குத் தமிழீழ விடுதலைப் போராட்டமே காரணம் ஆகும். இந்த மாற்றத்துக்கு உள்ளாகியவர்களில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அந்த அடிப்படையில் இன்றைய பேராசிரியர் சிவத்தம்பியை அன்றைய பேராசிரியர் சிவத்தம்பியோடு ஒப்பிட்டுப் பேசுவது அறம் அல்ல.

ஆனால் 7,8 தமிழாராய்ச்சி மாநாடுகளைக் காட்டாகக் காட்டி 9ஆவது மாநாட்டை நடத்தலாம் என்று நீங்கள் கூறுவது ஏற்புடையதல்ல. முன்னர் விட்ட பிழைகளை மீண்டும் விட வேண்டும் என்பது சரியல்ல.

பன்னாட்டுத் தமிழ் ஆராய்சி கழகத்தின் தலைவராக இருக்கும் நெபுரா கரோஷிமா 9வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. ஜனவரி 2011ல் நடத்தலாம் என்றுதான் சொன்னார்.

எது எப்படியிருப்பினும் முதல்வர் கருணாநிதிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த அருகதையில்லை. அப்படியிருந்தாலும் அப்படியொரு மாநாட்டை நடத்துவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை. அதற்கான நேரம் இதுவல்ல.

செம்மொழி மாநாட்டில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள் கலந்து கொள்ளக் கூடாது என பாரிஸ் ஈழநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வேறு பல அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இப்போது நீங்கள் முதல்வர் கருணாநிதிக்கு முண்டு கொடுப்பது போல ஆராய்ச்சி மாநாடுகளைக் குழப்புவதே ஒவ்வொரு முறையும் பேரா. சிவத்தம்பி போன்றோரின் செயல் எனக் குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

எதை வைத்து இந்தக் குற்றச்சாட்டை அவர் மீது வீசுகிறீர்கள் என்பது தெரியவில்லை? இம்முறை மாநாட்டை அவர் குழப்பவில்லை. ஆதரவாக அல்லவா பேசியும் எழுதியும் வருகிறார்?.

நீங்கள் மேற்கோள் காட்டிய அதே ஜூனியர் விகடனில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்?

ஜூனியர் விகடன் - இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் திருப்தி அளிக்காததால், மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறதே....?'

சிவத்தம்பி - ... கடந்த ஒன்பது ஆண்டுகளில் சர்வதேச அளவில் தமிழுக்காக மாநாடு நடக்காத நிலையில், அதிலும் தமிழ் செம்மொழி ஆன பிறகு இந்த மாநாடு நடப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். அதோடு, மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆர்வமும் எனக்கிருக்கிறது.

என் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பார்க்கையில்,அதில் கலந்துகொள்வது குறித்து உடனே என்னால் தெரிவிக்க இயலாது. உரிய நேரத்தில் என் முடிவைத் தெரிவிப்பேன். இதில் சிலர் தங்களுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் என் மேல் திணிக்க முயல்கிறார்கள். நான் தமிழை நேசிப்பவனே தவிர, அரசியலை அல்ல.

ஜூனியர் விகடன் - மாநாட்டுக்கு தங்களை வரவிடாமல் தடுக்க சில ஆதிக்க சக்திகள் முயல்வதாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?

சிவத்தம்பி - (பலமாகச் சிரிக்கிறார்...) 'இதில் கலைஞர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் என்னை மாநாட்டுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். நானும் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறேன்.

மற்றபடி, நான் மாநாட்டுக்கு வருவதைத் தடுக்க சில சக்திகள் விரும்புவதாகச் சொல்லப்படும் அரசியலுக்குள் நான் வர விரும்பவில்லை. அரசியல் வேறு, தமிழ்மொழி வேறு. இரண்டையும் கலக்க வேண்டாம். நான் மாநாட்டுக்கு செல்ல முடிவெடுத்து விட்டால், என்னை யாராலும் தடுக்க முடியாது!

உண்மை என்னவென்றால் சிவத்தம்பி மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பது பற்றி முன்பின் முரணாகப் பேசி வருகிறார். அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் நிலவும் சூழலில் அவர் கூட்டியுள்ள உலகத் தமிழ் மாநாட்டில் தாம் பங்கேற்பது பொருத்தமற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது தான் அப்படிச் சொல்லவில்லை என மறுத்துள்ளார். உடல்நலம் இடங்கொடுத்தால் மகிழ்ச்சியுடன் மாநாட்டில் கலந்து கொள்வதாகச் சொல்கிறார்.

எனவே பேராசிரியர் சிவத்தம்பி ஆராய்ச்சி மாநாடுகளைக் குழப்புவதே ஒவ்வொரு முறையும் பேரா. சிவத்தம்பி போன்றோரின் செயல் என்பதில் பொருள் இல்லை. அவர் மாநாடு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்குகிறார். உடல் நலம் இடங்கொடுத்தால் அதில் கலந்து கொள்ளவும் இருக்கிறார்!

எனவேதான் முதல்வர் கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி பலியாகித் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம் என நயமாக அவருக்குப் புரியும் தமிழில் ஏற்கனவே எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

பேராசிரியர் சிவத்தம்பிக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்ல விரும்புகிறோம்.

தமிழோடு அரசியலைக் கலக்கக் கூடாது என்பது சமயத்துக்கு ஏற்ற வாதம். அதனை நீங்கள் சொன்னாலும் சரி, சிவத்தம்பி சொன்னாலும் சரி நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக அரசு சார்பாக நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழக அரசு, அரசு பணத்தில் நடத்தும் அரசியல் கலந்த தமிழ் மாநாடுதான் என்று கூறியுள்ளார் நக்கீரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X