For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புன்னியாமீனின் ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா’ நூல் வெளியீட்டு விழா

By Chakra
Google Oneindia Tamil News

இலங்கை எழுத்தாளர் புன்னியாமீனின் 185வது தமிழ் நூலும், அவரது வெளியீட்டகமான சிந்தனை வட்டத்தின் 350வது நூலுமான ஓர் ஈரநெஞ்சனின் உலவியல் உலா நூல் வெளியீடும் கொழும்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இது குறித்து எழுத்தாளரும் நூலகவியாலளருமான என். செல்வராஜா அனுப்பியுள்ள கட்டுரை:

இலங்கையின் புகழ்பூத்த ஹிப்னாட்டிச- மனோதத்துவ -உளவளவியலாளர்களுள் ஒருவரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய நூலொன்றினை கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் அண்மையில் எழுதியிருந்தார். யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் அவர் வாழ்வில் கண்ட அரிய பல அனுபவபூர்வமான உளவியல் கருத்துக்களை அனுபவரீதியில் இந்நூலில் புன்னியாமீன் விளக்கியுள்ளார்.

புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' என்ற இந்நூல் வெளியீட்டுவிழா கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தவரையில் ஒரு கூரையின்கீழ் நூறு பேரைத் திரட்டுவது என்பது பெரிய காரியம். ஆயின் இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 550 பேருக்கும் மேல் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும். கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் நடந்த விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா- சுவடுகள் எனும் 48 பக்க நூல் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.

Punniyameen's book release

நிகழ்ச்சி நிரலுடன் சிந்தனை வட்டத்தினதும் அதன் தாபகர் புன்னியாமீனினதும் பணிகளை சுவடுகள் உள்ளடக்கியிருந்தது. பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று நூல் பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காண முடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் நூலின் அச்சிடப்பட்ட பிரதிகளின் அரைவாசிக்கும் மேல் அன்றைய விழாவிலேயே விற்பனையானதும் ஈழத்து வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க ஒன்று.

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. பேராசிரியர்களும் கல்விமான்களுமே அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.

விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.

மனோதத்துவ நிபுணரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராவார். சுமார் நான்கு தசாப்த காலமாக இலங்கையில் இன மத பேதம் பாராது சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்பும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்பும் வடமாகாணத்திலும் இவர் கணிசமான சேவையாற்றியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் புன்னியாமீன் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் பொதுவாக உளவியல் பற்றியும் விரிவாகவும் சுவையாகவும் அனுபவ வெளிப்பாட்டுடன் எழுதியுள்ளார். இவ்விழாவிற்கு அதிகளவில் பார்வையாளர் கலந்து கொண்டமைக்கு இன மத வேற்றுமையற்ற தன்னலம் பாராத யூ.எல்.எம்.நௌபர் அவர்களது சேவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Punniyameen's book release
இந்த விழாவின் போது நூலாசிரியர் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார். உலகிலேயே அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக 1998 கின்னஸ் சாதனைவரிசை நூலில் இடம்பெற்றிருந்த முக்கியத்துவமான குர்ஆன் பிரதியொன்றை தேடிப்பெற்று அன்பளிப்பாக வழங்கியும் மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் -இருமொழி வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பெற்றார். தொழிலதிபரும் பரோபகாரியுமான ஏ.ஆர்.எஸ். அரூஸ் ஹாஜி, தொழிலதிபரும் பரோபகாரியுமான அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் - சேவைச் செம்மல்கள் என்று பட்டம் வழங்கப்பட்டனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் - இதழியல் வித்தகர் என்ற பட்டத்தையும், உளவியல்துறை விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்கள் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

‘ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா' நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.

English summary
Punniyameen's 185th book on release 'Or Eera Nenjanin Ulaviyal Ula' was released at Colombo recently
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X