For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3. நீத்தார் பெருமை

By Staff
Google Oneindia Tamil News

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

(21)

விளக்கம்:

வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆசையைத் துறந்தவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் சிறப்பாகும்.


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கோண் டற்று.

(22)

விளக்கம்:

உலகப் பற்றுக்களை விட்டொழித்தவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுப்பது போலதாகும்.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

(23)

விளக்கம்:

இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்களின் பெருமையே உயர்ந்ததாகும்.


உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

(24)

விளக்கம்:

அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிற யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான சொர்க்கத்திற்குச் செல்ல தகுதியானவன்.


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

(25)

விளக்கம்:

ஐம்புலன்கள் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.


செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

(26)

விளக்கம்:

செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து முடிப்பவரே பெரியவர். அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

(27)

விளக்கம்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

(28)

விளக்கம்:

நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

(29)

விளக்கம்:

நல்ல குணம் என்கிற குன்றின்மேல் ஏறிநின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.

(30)

விளக்கம்:

எல்லா வகையான உயிருக்கும் செம்மையான அருளை மேற்கொண்டு நடப்பதானால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் என்றழைக்கப்படுகிறார்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X